நீதிமன்றத்தில் நடிகை சமந்தா யூடியூப் சேனல்களுக்கு எதிராக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் விசாரணை முடிவில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், யூடியூப் சேனல்களிலும் வரம்பு மீறி விவாதிக்கப்பட்டது. சமந்தா திரைப்படங்களில் நடிப்பதற்காக கருவை கலைத்தார். வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் பேசி வந்தனர்.
பொதுவெளியில் சமூக வலைதளங்களில் இந்த விவாகரத்துக்கு காரணம் சமந்தாதான் என்று அவரை பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே, தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். தான் மனசோர்வாக இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீதும், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசிய வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் மீதும் சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதைவிட அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மேலும், தங்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஊடகங்களில் தகவல்கள் பகிரும் பிரபலங்கள், மீண்டும் அதே ஊடகங்கள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் பட வழக்கில் கைதானபோது, ஷில்பா ஷெட்டி நீதிமன்றத்துக்குச் சென்று ஊடகங்கள் தன்னைப் பற்றிய அவதூறு செய்திகள் வெளியிட நிரந்தரத் தடை உத்தரவு பெற்றது குறித்து சமந்தாவின் வழக்கறிஞர் தரப்பு மேற்கோள் காட்டியது.
எனவே, இதைப் போலவே சமந்தா வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மற்றொரு தேதியில் விசாரணை தொடரும் என்று தீர்ப்பை இப்போதைக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமந்தாவிற்கு ஆதரவான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




