பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது நடிப்பாலும் பல ரசிகர்களை கட்டிப் போட்டு தான் வைத்துள்ளார். இன்றளவும் பிரபு தேவாவுடன் அவர் நடனமாடிய காதலிக்கும் பெண்ணின் பாடல் காட்சிகள் வயது வித்தியாசமின்றி அனைவரின் விருப்பமாகவே உள்ளது. அவரின் பாடலின் நினைவலைகளோடு அவரின் பிரிவை நாம் சுமந்திருக்கும் வேளையில், அவரின் சிறந்த கதாபாத்திரங்களை பற்றியும் நினைவு கூர்ந்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
1972 ஆம் ஆண்டு வெளிவந்த முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் கௌரவ வேடம் ஏற்று SPB அவர்கள் முதன் முதலாக திரையில் தோன்றினார். அதன் பிறகு அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே என்றளவும் நம் மனதில் இருந்து நீங்காத ஒன்றாகவே உள்ளது.
மனதில் உறுதி வேண்டும் – டாக்டர் அர்த்தநாதி
இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் டாக்டர் அர்தநாதி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் SPB அவர்கள். பல இன்னல்களை கடந்து செவிலியராக பணிபுரியும் நடிகை சுஹாசினியை ஊக்குவிக்கும் ஒரு கேரக்டர், அந்த திரைப்படத்திலேயே அற்புதமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
கேளடி கண்மணி – ஏ. ஆர். ரங்கராஜன்
1989 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கேளடி கண்மணி. மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் SPB அவர்களின் எதார்த்த நடிப்பில் ஈர்க்கப்பட்ட இயக்குனர் வசந்த் இந்த திரைப்படத்தில் SPB யை ஹீரோவாக நடிக்க வைத்தார். முதலில் மறுத்த SPB பின்பு சம்மதித்தார். மனைவியை இழந்து தனியாக மகளை வளர்த்து வரும் ஏ ஆர் ரங்கராஜனாக SPB. மகள் மட்டுமே வாழ்க்கை என இருக்கும் அவருக்கு சாரதா உடனான நட்பு, நட்பின் பரிணாமமாக காதல், பின்பு தன் மகளுக்கு பிடிக்காததால் அதிலிருந்து விலகுவது என அத்தனை காட்சிகளிலும் கனக் கச்சிதமான நடிப்பு. இந்த திரைப்படத்தில் ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடலை இவர் மூச்சி விடாமல் பாடி இருப்பார். SPB யை நினைப்பவர்கள் மனதில் அடுத்த நொடியே வந்து உக்காரும் பாடல் இது தான். இந்த பாடலுக்காக தமிழ்நாட்டின் மாநில விருது SPB க்கு வழங்கப்பட்டது.
சிகரம் – தாமோதர்
இயக்குனர் அனந்து இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிகரம். இதில் SPB இசையமைப்பாளராகவே நடித்திருப்பார். இளைமையில் ராதாவுடனான காதல், பிறகு விதியின் வசத்தால் ரேகாவுடன் திருமணம், முதுமை தொடும் முன்னே மனைவியின் மரணம், பாதை மாறிய மகன் எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கிய கை தேர்ந்த நடிப்பு. இவரின் இசையின் ஆதிக்கத்தில் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’, ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.
காதலன் – கதிரேசன்
90’s கிட்ஸ்கள் மட்டுமல்லாது இன்றைய 2k கிட்ஸ்களுக்கும் SPB என்றால் நினைவுக்கு வருவது காதலன் திரைப்படம் தான். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்க கூடாதா என பார்ப்பவர்களை ஏங்க வைத்துவிட்டார். பாசமான அப்பா, மகனின் காதலை அழகாக ஏற்றுக் கொள்ளும் விதம், மகனுக்காக போராடுவது என அசத்தி விட்டார். ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ பாடலில் இவரது நடனம் இன்றும் பார்க்கும் போது மனம் குதுகலிக்கும்.
ஹீரோக்களின் தந்தையாக எஸ் பி பாலசுப்ரமணியம்
SPB அவர்கள் பிரபுதேவா, நாகார்ஜூனா, அரவிந்தசாமி, தளபதி விஜய் என ஹீரோக்களின் அப்பாவாக கைகோர்த்து நடித்து பார்ப்பவர்களின் உள்ளங்களை கவர்ந்து விட்டார்.
மின்சார கனவு திரைப்படத்தில் அரவிந்தசாமியின் அப்பாவாக நடித்தது மட்டுமல்லாமல் ‘தங்க தாமரை மகளே’ என்ற பாடலையும் பாடி இருந்தார். இந்த பாடலுக்காக அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. ரட்சகன் திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் தந்தையாக நடித்திருந்தார், சட்டென எதற்கும் கோவப்படும் மகனை நினைத்து கவலை படுவது, பின்பு நியாயமான விஷயத்திற்காக மட்டுமே மகன் கோபப்படுகிறான் என புரிந்து கொள்வது, மகனை மாற்ற நினைக்கும் சுஷ்மிதா சென்க்கு உதவுவது என அத்தனையும் உணர்ச்சிகளின் குவியல்.
பிரியமானவளே திரைப்படத்தில் தளபதியின் தந்தையாக SPB. விஜய், சிம்ரனை தாண்டி இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் மகன், மகனை அவன் போக்கிலேயே சென்று திருத்த நினைக்கும் தந்தை, மருமகளுக்காக மகனை எதிர்க்கும் மாமனார் என SPB யின் நடிப்பு மிகப்பெரிய கலக்கல் தான்.
இவரை தந்தையாக திரையில் பார்க்கும் பொழுது அவரது மகன் SPB சரண் மீது சற்று அன்பு நிறைந்த பொறாமை வர தான் செய்கிறது. அவ்வைசண்முகி திரைப்படத்தில் ஐந்து நிமிட காட்சி என்றாலும் அசத்தலான காட்சி.
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு!!!!!
பாடல் உலகின் அரசன் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் இசையாக காற்றுடன் கலந்து நமது மூச்சுக் காற்றில் கலந்து விட்டார். அவரது பாடலின்றி நம் நாட்கள் முடிவடையாது. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது எதுவும் மாறவில்லை. அவர் எங்கேயோ இருக்கிறார், அவரது பாடல் காதலாக, காவியமாக நம்மோடு இருக்க தான் போகிறார்.
SPB அவர்கள் அழுது தீர்க்கப்பட வேண்டியவர் அல்ல, அவர் தேகம் மறைந்தாலும் நம்மோடு இசையாக மலர்பவர். இனி அவரையும் அவரது குரலையும் ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம். வண்ணம் கொண்ட வெண்ணிலவு வானத்திலிருந்து மகிழட்டும்.