சமீபத்தில் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசியல் பிரவேசம் சற்று கால தாமதம் ஆவதாக ரஜினி எழுதிய கடிதம் போல் ஒன்று வாட்ஸாப்பில் காட்டு தீயாக பரவியது. அதனை சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்த் தன்னுடைய கடிதம் அல்ல என அறிக்கை விடுத்தார். ரஜினியின் இந்த அரசியல் புரளி என்பது இன்று நேற்று ஆரம்பித்தது இல்லை . 90 களின் இறுதியிலேயே ஆரம்பித்த ஒன்று தான் .
ரஜினி என்னும் ராஜ்ஜியம்:
கதாநாயகர்களுக்கென அந்த காலக்கட்டத்தில் இருந்த சில இலக்கணங்களை தகர்த்து எரிந்து வந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்றைய நாயகர்களால் கூட இவரின் ஸ்டைலை காப்பி கூட செய்ய முடியவில்லை என்பதே உண்மை. ஸ்டைல் , சுறுசுறுப்பான நடை, வித்தியாசமான வசன உச்சரிப்பு என அத்தனை ரசிகர்களையும் 80 களில் தன் பக்கம் இழுத்தார் . அடுத்தடுத்த திரைப்படங்கள், ரசிகர்களின் அன்பு என மூழ்கி திளைத்தார் ரஜினிகாந்த். ரசிகர்கள் தாமாகவே முன்வந்து இவரின் பெயரை பச்சைக்குத்தி கொண்டனர். குழந்தைகளுக்கு ரஜினியின் பெயரை வைத்தனர். ரஜினி ரசிகர்கள் என ஒரு தனி அடையாளம் இருந்தது , அதற்கான மதிப்பும் வேறு வகையில் இருந்தது. ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்கள் திரைப்படம் என்பதை தாண்டி ஒரு பந்தமாக உருவாகினர். ரஜினியும் மாதத்திற்கு ஒரு முறை சில நேரங்களில் இருமுறை கூட அவரது ரசிகர்களை நேரில் சந்தித்தார்.
MGR ன் மறைவும், ரஜினியின் மீது எழுந்த எதிர்பார்ப்பும் :
1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பாக அமைந்தது, ஆம் மக்கள் மலை போல் நம்பி இருந்த MGR என்னும் மாபெரும் சக்தி இம்மண்ணுலகை விட்டு மறைந்தது. அந்த காலக்கட்டத்தில் ரஜினிக்கு இருந்த செல்வாக்கிற்கு மக்கள் அவரை அரசியலில் எதிர்பார்த்தனர். அதிமுக ஜெயலலிதா மற்றும் ஜானகி கட்சியாக பிரிந்து இருந்த போது ரஜினி ஜானகி கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்க்கு காரணம் அவருடைய நண்பர் மற்றும் தயாரிப்பாளர், முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் தான் .
எங்கே தவறினார் சூப்பர் ஸ்டார்?
2000 காலகட்டம் என்பது ரஜினி ரசிகர்கள் மிகவும் துடிப்புடன் இருந்த காலக்கட்டம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் ரஜினி ஜனசக்தி என்னும் மாபெரும் சக்தியை ஒன்றிணைக்க தவறிவிட்டாரோ என ஐயம் எழுகிறது. அவர் மிகவும் பலமாக எதிர்த்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஏதோ ஒரு முடிவினால் ரஜினிகாந்த் ஆதரித்து பேசினார். இது ரஜினி அரசியலை நீர்த்து போக செய்தது என்றே கூறலாம். ரஜினி தனது ரசிகர்களின் பலத்தை திரைப்படம் வெற்றியடையவே பயன்படுத்துகிறார் எனவும் அவர் நேரடி அரசியலுக்கு வரவே போவதில்லை எனவும், ஆளும்கட்சிக்கு அந்த அந்த நேரத்தில் ஆதரவு அளிப்பார் எனவும் ஒரு மாயபிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த கட்சி அந்த சமுதாயத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்களை தன பக்கம் இழுத்துக் கொண்டது. மேலும் அரசியல் ஆர்வம் கொண்ட அவரது ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் சேர்ந்தனர் , கட்சி பொறுப்புகளிலும் பதவி வகிக்க தொடங்கிவிட்டனர் . இந்த காலக்கட்டத்தில் மட்டும் ரஜினி நேரடி அரசியலில் காலம் இறங்கி இருந்தால் இந்நேரம் ஒரு தகர்க்க முடியாத சக்தியாக மாறியிருப்பார்.
மீண்டும் எழுந்த ரஜினி:
2011 ஆம் ஆண்டில் ரஜினி மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ரஜினியை பற்றி பல துரதிர்ஷ்டவசமான வதந்திகள் அந்த மக்களின் நெஞ்சை கலங்கடித்து போனது. ரஜினி அரசியலில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் காற்றோடு பறந்து போனது. எங்கள் தலைவன் நடிக்கவும் வேண்டாம், அரசியலுக்கும் வர வேண்டாம் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலே போதும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். ரஜினி அவரின் ரசிகர்களுக்காகவே எழுந்து வந்தது போல் மீண்டு வந்தார். அதன்பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் ரஜினி கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரசிகர்களே ஆச்சரியப்படும் வகையில் பழைய சுறுசுறுப்புடன் வெற்றிப்படங்களில் நடித்தார். தலைவா நீ நடித்தாலே போதும் என அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடம்:
தமிழக அரசியலின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக மாநிலத்தை மாறி மாறி ஆண்டு வந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மறைந்து தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கினார். மக்கள் விரும்பி ஓட்டு போட்டு எதிர்க்கட்சி தலைவர் ஆக்கிய நாயகனும் சுயம் மறந்து உடல் உபாதைகளால் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரம் இல்லாமல் போனார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மீண்டும் தன் ரசிகர்களை சந்தித்தார்,அவர்களின் மனதில் நம்பிக்கையை அளித்தார். “நான் அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் தேவை” என்று கூறினார். ஆனால் கட்சியை பற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையில் கடந்த மார்ச் மாதம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அரசியலில் ஒரு எழுச்சி ஏற்படவேண்டும், அப்போது தான் அரசியலுக்கு வருவேன் என கூறினார், அதற்குள் கொரோனா ஊரடங்கு காலமும் வந்துவிட்டது.
என்ன ஆனார்கள் ரஜினி ரசிகர்கள்?
ஒரு காலத்தில் ரஜினிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று துடிப்புடன் இருந்த செயல்வீரர்கள் இப்பொழுது வெவேறு கட்சிகளில் செயல்பட தொடங்கிவிட்டனர்.இளைஞர்கள் திருமணம், குடும்ப பொறுப்பு என தங்கள் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.மிகப்பெரும் ராஜ்ஜியம் அமைக்க வேண்டிய ரஜினியின் அரசியல் வாழ்க்கை இன்று சமூக ஊடங்களில் கேலி பொருளாகி விட்டது. செல்வாக்கு கோலோச்சி இருந்த காலத்தில் இவர் அரசியல் களம் கண்டிருந்தால் கண்டிப்பாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியா தலைவன் ஆகி இருப்பார். அரசியல் பார்வையே விழாத உலகநாயகன் கமல் ஹாசன் கூட கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து விட்டார். ரஜினிகாந்த் கால் நூற்றாண்டாக எதிர்பார்ப்புகளை மட்டுமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லப்போனால் அவர் மீது இருந்த எதிர்பார்ப்புகளுமே குறைந்து விட்டது. இனி ரஜினி அரசியலில் வந்தால் ஒளிர்வாரா எனக் கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே!