“கண்டா வரச்சொல்லுங்க” எனும் பாடல் கருணாநிதி, ரஜினிகாந்த், தோனி, விஜய் வெர்ஷனில் வைரலாகி வருகிறது.
கர்ணன் திரைப்படத்தின் ”கண்டா வரச்சொல்லுங்க” எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் ‘கர்ணன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையினை அமைத்துள்ளார். ‘கர்ணன்’ படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் கடந்த 18-ம் தேதி அன்று வெளியானது. ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்று தொடங்கும் பாடல், கிராமிய மணத்துடன் பின்னணியில் தப்பு, தாரை முழங்க, கிடக்குழி மாரியம்மாள் உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பொதுவாக ஒரு பாடல் வெளியானால் அதனைக் கொண்டு மற்ற வெர்ஷன்களை உருவாக்குவது நெட்டிசன்களின் வழக்கம். அந்த வகையில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலை மையமாக வைத்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் உள்ளிட்டவர்களின் வெர்ஷன்கள் இணையத்தில் உலா வருகின்றன.