தனுஷ் சுருளியாக அசத்தும் ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது.தனுஷூக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கும் உடன்பாடில்லை எனக் கூறப்பட்டது.
அரசு அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்தது. இந்நிலையில் நேற்று ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீஸர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியானது. டீஸரில், “ கூ இஸ் சுருளி என்று ஒருவர் கேட்க, பின்னணி குரலில் சோம சுந்தரம், சுருளி ஒரு பயங்கரமான தாதா என்பது போல தனுஷூக்கு அறிமுகம் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து வரும் சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷின் பேச்சும், செயலும் ரசிக்க வைக்கின்றன.
ஹாலிவுட் கலைஞர்கள், அதிரடி சண்டைக்காட்சிகள் என டீஸரானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் எதிர்பார்க்கலாம். கார்த்திக் சுப்புராஜூக்கே உரித்தான டார்க் ஆக்ஷன் காமெடி பாணி இதிலும் வெளிப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் யூடியூப்பில் வெளியாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.