விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை :
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் டீசர் இன்று காலை படக்குழுவால் வெளியிடப்பட்டது. அதில், கணிதத்தில் சிறந்து விளங்கி பல விருதுகளை பெறும் விக்ரம், அதனை பயன்படுத்தி ‘கோப்ரா’ என்ற பெயரில் வெளிநாட்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார். அவரை பிடிக்க வரும் காவல் அதிகாரியாக இர்பான் பதான் தோன்றுகிறார். எனவே இப்படமும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தை போன்று ஒரு கேட் அண்டு மவுஸ் கதையாக இருக்கும் என தெரிகிறது.
Read more – ஜல்லிக்கட்டு காளைகளோடு விளையாடும் 4 வயது சிறுமி !
இதில் சிறப்பம்சமாக நடிகர் விக்ரம் பல்வேறு கெட் அப்களில் தோன்றுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.