நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாகியுள்ள புதிய படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வெற்றி கண்டுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான் விடுதியை சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கறம்பக்குடி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை எழுதி வருகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளேன்.
இந்நிலையில் நான் எழுதி கடந்த 2017-ம் ஆண்டு கதை சொல்லி மாத இதழில் வெளியான ‘தவிப்பு என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கதை 2018-ம் ஆண்டு நான் வெளியிட்ட தூக்கு கூடை என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
எனவே அனுமதி பெறாமலேயே எனது கதையை பயன்படுத்தி, க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் விருமாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இதனால் விஜய் சேதுபதி படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.




