மொழிப்பற்றும் இனப்பற்றும் தன்னையும் இயக்குநரையும் இணைப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கி, தயாரித்திருக்கும் பரமசிவன் பாத்திமா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, சிறு வயதிலேயே சிறப்பான இசையை வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். பாடலாசிரியர் ஏகாதசி காவியப் படைப்பை தந்துள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளியோடு விளையாடி இருப்பதாகவும் கூறினார். மேலும், மொழிப்பற்றும் இனப்பற்றும் தன்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைப்பதாக தெரிவித்த சீமான், இயக்குநரின் போர்க்குணம் தான் இந்தக் கதையைப் படமாக எடுக்கக் காரணம் என்றும், மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டிருப்பதாகவும் பாராட்டினார்.

விமல் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தீபன் சக்கரவர்த்தி இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.