கொரோனா ஊரடங்கால் பல துறைகள் நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்,வளர்ச்சிப் பாதையில் விறுவிறுவென முன்னேறுவது ஓ.டி.டி தளங்கள்தான். அதிலும் குறிப்பாக, அமேசானுக்கு அசுர வளர்ச்சி. ஓ.டி.டி தளங்களில் இப்போது மக்கள் அதிக அளவில் படங்கள், வெப்சீரிஸ்களைப் பார்ப்பதால் இந்தியாவில் அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்டிருந்த யூடியூப் கூட சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
சென்ற மாதம் ஓ டி டி தளத்தில் வெளிவந்த படங்களான பொன்மகள் வந்தால், பென்குயின் இந்தி படமான குலாப்போ சித்தாலோ, அக்சய் குமாரின் லட்சுமி பாம் போன்ற படங்கள் ஓ டி டி யில் வந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் ஓ டி டி தளத்தில் புதிய சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் பலர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
அந்தவகையில், தமிழ் திரையுலகின் பிஸியான நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெப் தொடரில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.மேலும் அந்த வெப் சீரியஸை “96”பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குவார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதியை அடுத்து சரத் குமாரும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் தொடரை சரத்குமாரின் மனைவியான ராதிகா சரத்குமாரின் சொந்த நிறுவனமான “ராடான்”தயாரிக்கிறது. இத்தொடரை கௌதம் வாசு தேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ப்ரவீன்நாயர் இயக்குகிறார்.
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இதனிடையே இந்த வெப் தொடரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதில் சரத்குமாரின் தோற்றம் அனைவரையும் வியக்க வைக்கிறது.