நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒற்றை ஆளாக இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் விமர்சகர்களிடம் நிறைய பாஸிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. பல விருதுகளை வென்ற இப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் ஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த ஏமாற்றத்தை, ஆதங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். இது குறித்து பேசிய அவர், “உண்மையை சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்கர் விருது பட்டியலில் ஒரே படத்துக்கு வெவ்வேறு பிரிவுகளில் நிறைய விருதுகள் கொடுப்பார்கள், அதுபோல் இந்த படத்திற்கும் சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் ’ஒத்த செருப்பு’. இந்த படம் என்னுடைய தனித்துவமான படம், அவ்வாறு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு.
இருப்பினும் அடுத்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்க முழு முயற்சி செய்வேன். எனது அடுத்த படம் ‘இரவின் நிழல்’ என்ற சிங்கிள் ஷாட் படம், உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி தான் இந்த படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.