ஆஸ்கர் ரேஸில் யோகி பாபுவின் மண்டேலா!!
தமிழகத்தில் தேர்தலின் போது வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு வெளியான திரைப்படம் மண்டேலா.

படைப்பு ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட மண்டேலா திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் சார்பிலிருந்து பல திரைப்படங்கள் இந்த விருது பட்டியலில் இடம் பெற போட்டியிடுகின்றன. அந்தவகையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022மார்ச் 27ல் நடைபெற உள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளத் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலிருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாராட்டைப் பெற்ற மண்டேலா திரைப்படமும் தேர்வாகி உள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை. நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் தவிர்த்து இந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுஷல் நடிப்பில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான சர்தார் உத்தம், மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த 14 படங்களிலிருந்து ஒரு படத்தை இயக்குநர் ஷாஜி கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள்.
அந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த 14 படங்களில் எந்த படம் ஆஸ்கர் செல்லப் போகிறது என்பது சில தினங்களில் தெரிய வரும்.
இதனிடையே இதுபற்றி மண்டேலா படத்தின் கதாநாயகன் யோகி பாபுவிடம் பேசும் போது, அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காமெடி நடிகரின் படம் ஆஸ்கர் பரிந்துரைக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மக்கள் கொடுத்த வரவேற்பு தான் காரணம். ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




