
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உங்களைப்போலவே நானும் இன்று சற்று தாமதமாகத்தான் எழுந்தேன்.
வெட்டி முறிக்க பெரிதாய் இன்று வேலை ஏதுமில்லை.
பேச்சிலர் வாழ்க்கையில் இது எல்லோருக்கும் இயல்புதானே…
இருக்கிற அழுக்குத் துணிகளை துவைத்துப்போட்டுவிட்டு தி நகர் பக்கம் கிளம்பினேன்.
வேறொண்ணுமில்லை…
நெடுநாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு புத்தகம் எங்கு கிடைக்குமென நேற்று இணையத்தில் அலசிக்கொண்டிருந்தபோது அது
தி நகர் – திருமகள் புத்தகநிலையம் என்றிருந்தது.
சரிதான்…
எப்படியும் நாளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவதென்பது நேற்றே எடுத்த முடிவு..
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை கிளம்பி இங்கு வந்ததில் நல்லாதாகப் போனது.
அந்தப் புத்தகம் கையில் கிடைத்த திருப்தி.
மகிழ்வுடன் வாங்கிக்கொண்டு
அப்படியே –
தி நகரை சுற்றிக்கொண்டு தேவையானது…தேவையில்லாதது என அனைத்தையும் பையில் வாங்கிப் போட்டுகொண்டு வேளச்சேரி பேருந்து பிடிக்க பேருந்து நிலையம் நோக்கி நடக்கும்போதுதான் கவனித்தேன்.
அந்த –
சாலையோரத்து யாசகனை…
ஏதாச்சும் தர்மம் பண்ணுங்க சாமி என்றவனை உற்று நோக்கினேன்.
வஞ்சகனாகத் தெரிந்தான் கடவுள்.
அந்த யாசகனுக்கு இரண்டு கால்களும் இல்லை.
இப்படி ஒரு நிலை எனக்கிருந்தால் நானெல்லாம் உயிரோடு இருப்பேனா தெரியவில்லை.
இதற்குமேல் என்ன சொல்ல…
இரக்கம் மேலிட
பாக்கெட்டில் இருந்த பத்து ரூபாயை அவனுக்குக் கொடுத்துவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடையைக் கட்டினேன்.
வெந்துகொண்டிருக்கும் வெய்யிலில் அரை மணி நேரக் காத்திருப்புக்குப்பின்
வேளச்சேரி பேருந்து வர
அடித்துப் பிடித்து ஏறி பயணச் சீட்டு எடுக்க பர்ஸை எடுத்தபோது பகீரென்றது.
அங்கே ஒரு ஐநூறு ருபாய் நோட்டைத்தவிர வேறு சில்லறைகள் ஏதுமில்லை.
தி நகர் – வேளச்சேரி பேருந்துக்கு பத்துரூபாய் பயணக்கட்டணம்.
இப்போது என்னிடம் வேறு சில்லறை இல்லை.
இந்த ஐநூறு ரூபாயை விட்டால் வேறு வழியும் இல்லை.
என்ன செய்வதென எனக்கும் தெரியவில்லை…
ஐநூறு ரூபாய் தாளை நீட்டி
வேளச்சேரிக்கு ஒரு டிக்கட் என்றால்…
இந்த நடத்துனர் என்னை கொலையே செய்துவிடுவார் என்று மனதுக்குள் ஒரு மாமன்றமே நடந்துகொண்டிருக்கும்போதே நடத்துனர் அருகில் வந்து டிக்கெட் டிக்கெட் என்றார்.
என்ன சொல்லி குதறப்போகிறாரோ இந்த நடத்துனர் என்று மனதுக்குள் நினைத்தபடி
என்னிடம் இருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியபடி
அண்ணா…வேளச்சேரி ஒரு டிக்கெட் என்றதுதான் தாமதம்.
ஹலோ… உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லே…
பத்து ரூபா டிக்கெட்டுக்கு இப்புடி ஐநூறு ரூபாய எடுத்து நீட்ரியே..
மீதி சில்லைறைக்கு இன்னா பண்றது…?
நானு மத்த பாசஞ்சருக்கு டிக்கெட் போடறதா……? – இல்லே
ஒனக்கு சில்றயை எண்ணிக்கினுகீரததா…
இப்பதான் டூட்டி மாத்திக்கிட்டு வர்றேன்.
நல்லா வர்ரீங்கப்பா உசுர எடுக்கறது…
என்ற அந்த நடத்துனர்
பயணசீட்டை கொடுத்துவிட்டு
சரி…சரி…மாத்தி கொடுங்க எனச்சொல்லிவிட்டு அந்த அந்த ஐநூறு ரூபாயை என்னிடமே கொடுத்துவிட்டு அடுத்த நபருக்கு டிக்கெட் போட்டுக் கொண்டிருந்தார்.
மாத்தி குடுக்கறதா…?
இது என்ன கடைத்தெருவா…?
உடனே போய் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கேட்க..
இன்னாடா..இது வம்பா போச்சு என மனதுக்குள் நான் வழக்காடு மன்றமே நடத்தியபடி வந்துகொண்டிருக்க
வேளச்சேரியும் வந்தே விட்டது…
அடுத்த நிறுத்தத்தில் இறங்கியாகவேண்டும் நான்.
என்ன செய்வதென தெரியவில்லை.
அந்த ஐநூறு ரூபாய் நோட்டு இன்னும் என் கை விரல்களிலேயே இருந்தது…
எப்படியும் இந்த நடத்துனர் இதை வாங்கிக்கொண்டு மீதி சில்லறை தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில்…
டிக்கெட்…டிக்கெட்..என்று என்னைக் கடந்துபோன அவரிடம் மீண்டும் ஒருமுறை அந்த ஐநூறு ரூபாயை நீட்டி…
அண்ணா. பத்து ரூபாய் காசு இல்லை.ப்ளீஸ் என்றேன்.இந்த ஐநூறு ரூபாதான் இருக்கு என்றேன்…
எங்க இறங்கணும் நீ என்றார்.
இங்கதான் அண்ணா என்றேன்…
சரி போங்க என்றார்.
அண்ணா டிக்கெட்டு…?
அடப்போங்க சார்… அந்த ஐநூறு ரூபாய நீங்களே வெச்சுக்கோங்கோங்க…மொதல்ல எறங்குங்க பிரதர் என்றபடி
சீக்கிரம் இறங்குங்க ரைட் என்றார்.
பேருந்தை விட்டு இறங்கி நடக்கும்போது
கொஞ்சம் உறுத்தியது…
அடடா…
என்னடா நாம் டிக்கெட்டே எடுக்காம வந்துட்டோமே என்று.
பத்து ரூபாய் நோட்டு ஒன்னு கடைசியா கையிலிருந்துச்சே…அது எங்கே என மீண்டும் என் பர்ஸை துழாவிக் கொண்டுந்தபோதுதான் நினைவுக்கு வந்தது
அதை நான் அந்த யாசகனுக்குப் போட்டது.
தூக்கி வாரிப் போட்டது எனக்கு…
என்றோ படித்த திருக்குறள்…நடந்துகொண்டிருக்கும்போது
ஞாபகத்திற்கு வந்தது.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
பெரியது மட்டுமல்ல..
அறிதும் இதுதான் என்று உள்ளம் சொல்ல
நடையைக் காட்டினேன்…
அந்த யாசகன் வாழ்த்தியது மீண்டும் ஒருமுறை
மனதுக்குள் கேட்டது..
நல்லா இருக்கணும்னுயா – என்ற அந்த குரல்.
பயன்தூக்கார் செய்த உதவி – என்ற திருக்குறளின் பொருளை
பள்ளியில் படித்த காலத்தோடு படித்தபடி
நடந்துகொண்டிருந்தேன் நான்.
*****
MORAL OF THE STORY IS VERY GOOD