சிறு குழந்தைகளும், இதயம் பலவீனமானவர்களும், கர்ப்பமான பெண்களும், இதை படிப்பதை தவிர்க்க கூடாது,,,,,
அப்புறம் உங்க விருப்பம்,,,
இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம், இதைக் கேட்பதற்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை சம்பவம் இது, யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் இன்று உங்களிடம் இதை சொல்வதால் ஆறுதல் அடைகிறேன்,
இந்தப் புவியில் பிறந்த மனிதனுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது, அதற்கு முடிவு தான் இருக்கிறதா? என்றால் இல்லை வாழும் வரை எந்த முடிவும் இல்லை, மனித வாழ்க்கை என்பது ஒருமுறைதான் என்று கருதுகிறேன், ஆனால் அதை வாழ்ந்து பார்ப்பதற்குள் எவ்வளவு இன்னல்களைத் தாங்க வேண்டியுள்ளது,
இருமனம் சேர்ந்து திருமணம் செய்து இல்லறம் என்னும் நல்லறத்தில் கால் எடுத்து வைக்கும் பொழுது, பெண் கருவுற்று தாய் ஸ்தானத்தை பெறுகிறாள்,
குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அதுவும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை தான் பெண்களுக்கு, அதையும் தாண்டி கருவுற்று அந்த குழந்தையை பெற்று நல்ல முறையில் வளர்ப்பதற்குள் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு பிரச்சினையை சந்திக்க வேண்டியுள்ளது, அதை தீர்க்க வேண்டியுள்ளது,
இவ்வாறு ஒரு குழந்தை பிறந்தது முதல் அது பின் வளர்ந்து வயதாகி முதுமை அடைந்து இறக்கும் வரை,,, மனித வாழ்க்கை முறையில் சொல்ல முடியாத அளவு பெரும் பல துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது, இவ்வாறு நமக்குத் துயரங்கள் ஏற்படும் பொழுது கொலை செய்ய தோன்றுமா என்றால் கண்டிப்பாக தோன்றும்,
ஆம், எனக்கும் தொடர் கதையாக ஒரு பெரும் துயரம் இருந்தது. அதுவே என்னை கொலைகாரனாக மாற்றியது, ஏன், ஒவ்வொரு மனிதனும் என்னைப் போல அந்தத் துயரத்தை சந்தித்தால் நிச்சயமாக கொலைகாரனாக மாறி விடுவார்கள். ஒருவேளை நான் சொல்லும் எதிரிகளை நீங்கள் சந்தித்தால் நிச்சயமாக அவர்களை நீங்கள் கொலையை செய்து விடுவீர்கள்,
அவர்களை கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற எண்ணம் தானே இப்பொழுது உங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது, இல்லை யென்றால் நாங்களும் பல இன்னல்களை சந்தித்துள்ளோம் ஒரு நாளும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது இல்லையே என்ற யோசனை கூட உங்களுக்கு இருக்கலாம்,
ஆனால் நான் ஏன் இந்தக் கொலையை செய்தேன் என்று உங்களுக்கு கூறும் பொழுது நீங்கள் முழுமையாக எனது வேதனையை அறிவீர்கள், நீங்களும் நான் செய்த கொலை சரிதான் என்று எனக்கு ஆறுதலும் கூறுவீர்கள், அதையும் விட நீங்களும் என்னுடன் சேர்ந்து கொலை செய்யவும் துணிவீர்கள்,
இப்புவியில் பிறந்த உயிரினங்களில் நானும் ஒருவன், மனித இனத்தை சார்ந்தவன், பிற உயிரினங்கள் மீதும், இயற்கையின் மீதும் அக்கறை கொண்டு அதை பாதுகாக்கவும், பராமரிக்கவும் படைக்கப்பட்ட படைப்பு தான் மனித இனம் என்று கருதுகிறேன்,
நான் செய்த கொலைகளை எல்லாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும், உண்மையை மறைக்க இயலாது,
பிறந்தது முதல் எனக்கு எதிரி இருக்கிறார்கள், அதை நான் குறிப்பிட்ட பருவம் வரை அறியவில்லை, விவரம் தெரிந்த பின் எதிரிகளை அடையாளம் கண்டு கொண்டேன், என்னைப்போல் பலருக்கும் எதிரி இருப்பதை அறிந்தும் அவர்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனது எதிரிகளைப் பற்றி அரசனிடம் கூறியும் பயனில்லை, அரசன் எடுத்த அனைத்து நடவடிக்கையையும் தாண்டி அவர்கள் வந்து கொண்டுதான் இருந்தார்கள், அவர்கள் அரசனுக்கும் எதிரி தான்,,, அரசனோ தக்க பாதுகாப்போடு இருந்தார்,
வீட்டின் வெளியே செல்லும் இடமெல்லாம் எனது எதிரிகள் தாக்குவதை நிறுத்துவதில்லை, அவர்கள் மரணத்திற்கு அஞ்சுவதும் இல்லை, அவர்கள் மரணிப்பதற்குள் ஒரு முறையாவது என்னை தாக்கி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்,
அவர்கள் என்னை கொல்லுவது சுலபமல்ல, ஆனாலும் அவர்களால் முடியும், அவர்களின் தொடர் தாக்குதலுக்கு ஆளானேன் என்றால், வேதனை தாங்க முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்து இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், ஏனென்றால் கொடிய விஷம் தடவிய ஆயுதங்கள் அவர்களிடம் உண்டு,
அந்திசாயும் வேளையில் எதிரி படைகள் லட்சக்கணக்கில் சேர்ந்து திட்டமிட்டு என்னைத் தேடிக்கொண்டு இருந்தார்கள், இவ்வளவு பேர்கள் தேடும் அளவிற்கு நான் என்ன முக்கியத்துவம் வாய்ந்தவனா? என்று நீங்கள் கருதலாம், ஆம் முக்கியத்துவம் வாய்ந்தவன் தான்,
நான் எவ்வளவு முக்கியத்துவமானவன் என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் எனது எதிரிகளுக்கு நன்கு தெரியும்,
அவர்களால் என்னைக் கொல்ல முடியாது என்று தெரிந்தும், நான் அவர்கள் அனைவரையும் கொன்று விடுவேன் என்றும் அறிந்தும், ஒரு முறையாவது அவர்களின் கத்தியைக் கொண்டு என் உடலில் பாச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் கொலை வெறி பசியோடு என்னை தேடினார்கள்,,,,
பகல் பொழுதில் நான் மிகவும் கவனமாக இருந்தபடியால் என் ரத்தத்தை காண துடிக்கும் அந்த எதிரிகள் என்னிடம் வரவில்லை என்னை தாக்குவதற்கு முற்படவும் இல்லை,
காரணம் பகல் வேலை என்றால் நான் அவர்கள் அனைவரையும் அழித்து விடுவேன். மேலும், என்னை பாதுகாக்க ஒருவன் இருக்கிறான் என்ற பயம் அவர்களுக்கு உண்டு,
அப்படி இருந்தும் ஒரு சிலர் என்னைத் தாக்க முற்பட்டார்கள், பதில் தாக்குதல் தொடுத்தேன் அவர்கள் மரணம் அடைந்தார்கள்,,,, தினமும் இவர்களோடு போராடுவதே எனது வாழ்க்கை ஆயிற்று, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் எதிரிகளை நான் அழிக்க அவர்கள் உருவாக்கி வந்து கொண்டே இருந்தார்கள்,
ஆனால் இப்போதோ அந்திசாயும் வேலையாகி விட்டது, என்னை பாதுகாப்பவன் என்னுடன் இல்லை, இரவு நேரம் நெருங்கி விட்டது எனது எதிரிகளோ என்னை ரத்த காயப்படுத்த தேடிக் கொண்டிருக்கிறார்கள்,
அவர்களிடமிருந்து இரவில் என்னை காத்துக் கொள்ள என் அறைகளை அடைத்து, எனது படுக்கையில் சகல ஆயுதங்களோடு பாதுகாப்பாக அமைதியாகப் படுத்து அவர்கள் இனி இங்கு வர வாய்ப்பில்லை எனக் கருதி உறங்கிக் கொண்டிருந்தேன், அவர்கள் வீட்டுக்குள் வராத வண்ணம் கதவுகள் நன்றாக பூட்டப்பட்டிருந்தது,,
இவர்கள் எப்படியும் நம்மை தேடி வந்துவிடுவார்கள் என்ற பயமும் இருந்தது, ஒருவேளை வந்துவிட்டால் என்று யோசித்த நான், அவர்கள் வருவதற்கு முன்னமே தீர்த்துக் கட்டுவதற்கு, விஷப் புகை குண்டுகளையும், மேலும் வலை போன்ற கம்பியில் மின்சாரத்தை பாய்ச்சி அதை அவர்கள் மீது தாக்குவதற்கு வைத்திருந்தேன்,
எனது தூக்கம் போயிற்று, என்னைத் தாக்கினால் தான் அவர்கள் உயிர் வாழ முடியும் என்றபடியால் அவர்கள் அந்த விஷப் புகை குண்டுகளையும் தாண்டி வந்தார்கள், சிலர் அதில் மாண்டார்கள், பலர் மயக்கம் அடைந்தனர் எஞ்சியவர்கள் என்னை நோக்கி வந்தனர்,
நான் அவர்களுக்கு எந்த துரோகமும் இளைக்கவில்லை, அவர்களுக்கும் எனக்கும் பகையுமில்லை, பின் எப்படி எனக்கு எதிரியானார்கள் என்று எனக்கு தெரியவில்லை,
அவர்கள் பிறந்ததே என்னை தாக்குவதற்காக தான் என்று எண்ணும் பொழுது மனம் அச்சமும் வியப்பும் ஆச்சரியமும் கொண்டது, அதைவிட பெரிய வியப்பு என்னவென்றால் அந்தக் கூட்டம் முழுவதும் பெண்கள் படைகளால் நிரம்பியிருந்தது,
என்னைத் தாக்க பிறந்து இருக்கிறார்களா என்ன கொடுமை இது? அவர்களுக்கும் எனக்குமான தொடர்புதான் என்ன? முன் ஜென்ம பகையா? நான் செய்த வினை தான் என்ன? இவர்களோடு தினமும் உயிருக்காக போராடுகின்ற காலத்தை தந்த இறைவனிடம் தான் அதைக் கேட்க வேண்டும்.
நானும், அவர்கள் பெண்கள் தான் என்ற இரக்கமும் காட்டப் போவதில்லை, பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள் ஆனால் நான் இறங்கப் போவதில்லை, அப்படையில் உள்ள அனைவரையும் கொலை செய்ய தயாராகி விட்டேன்,
நான் நிம்மதியாக இருப்பதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை, எவ்வளவு நாள்தான் எதிரிகளை பாம்பும் என்று விட்டு வைப்பது, எங்கு சென்றாலும் என்னை பார்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களை விட்டு வைப்பது சரியல்ல,
அவர்களாலே எனக்கு கடுமையான விளைவு ஏற்படும் என்று அறிந்திருந்ததால் அவர்களுக்கு எதிரான திட்டங்களைத் தீட்ட தொடங்கினேன்,
அவர்கள் தங்கள் ஆயுதமான விஷமுள்ள கூர்மையான கத்தியுடன் என்னை சுற்றி வளைத்தனர். நான் அவர்களோடு கடுமையாக போராடினேன், ஆனால் எனக்கு அவர்களின் தாக்குதலால் சில காயங்கள் ஏற்பட்டது,
என் வீர பராக்கிரமத்தால் அவர்களை பெண்கள் என்று கூட பாராமல் அடித்தே கொன்றேன்,,, அவர்களின் ரத்தம் உடலிலும் தரையிலும் தெறித்தது, அவர்களின் உடலை எல்லாம் பியித்து எறிந்தேன்,
அவர்கள் எண்ணிக்கையில் அதிகப்படியாக இருந்ததால், அவர்களின் தாக்குதலும் அவர்களுக்கு எதிரான போரும் முடிவில்லாமல் இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது,
என்னை தாக்குவதற்கு முற்படும் போது அவர்கள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட இரும்பு கேட்டின் மீது பட்டு மடிந்து விழுந்தார்கள்,, மேலும் விஷப் புகையின் காரணமாக பலபேர் மயக்கத்தில் கீழே விழுந்தார்கள், நானும் அந்தப் புகையின் காரணமாக சற்று மயக்கநிலையில் இருந்தேன், அந்தப் புகை என்னையும் பாதித்தது,
இவ்வாறு தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால் சோர்வடைந்து விடுவோம் என்று எண்ணிய நான், அங்கிருந்து தப்பித்து சென்றேன்,
அவர்களும் விடுவதாகயில்லை என்னைத் தேடிக் கொலைப்பசி வெறியுடன் பின்தொடர்ந்து வந்தார்கள்,,, என் எதிரிகளுக்கு என்னை காயப்படுத்த வேண்டும், என்னால் அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற போராட்டம்,,
அவர்களுடன் பேசி சமாதானம் செய்து கொள்வதற்கு அவர்கள் மொழியை நான் அறியவில்லை அது விசித்திர ஓசை மொழியாக இருந்தது, அதேபோல் எனது மொழியையும் அவர்கள் அறியவில்லை, அவர்களுக்கும் அது விசித்திரமாக தான் இருந்திருக்கும்,
அவர்களிடம் இருந்து தப்பித்த நான் சிறிது நேரம் கழித்து மீண்டும் என் அறையை நோக்கி ஓடினேன், பெரும் சூறாவளி காற்று அப்பொழுது அடிக்கும்படி செய்தேன், என் எதிரிகள் அந்த காற்றில் பறந்து ஓடினார்கள் நான் அவர்கள் கண்ணுக்கு அகப்படாத பெரும் கூடாரம் ஒன்றில் தெரியாத வண்ணம் ஒளிந்து கொண்டேன்,
அவர்களும் விடுவதாக இல்லை பெரும் சூறாவளி காற்று அவர்களை தடை செய்தாலும் என்னை தேடித்தேடி அலைந்து கொண்டுதான் இருந்தார்கள், கடைசிவரை அவர்கள் கண்களுக்கு நான் சிக்காமல் தப்பித்து பிழைத்து நிம்மதி அடைந்தேன்,,
மறுநாள் காலை எழுந்தேன், வீடு முழுவதும் பிணங்களாக கிடந்தது, ஆனால் ஒரு வியப்பு எந்த துர்நாற்றமும் வீசவில்லை, அனைத்து பிணங்களையும் அள்ளி, எனது வீட்டின் குப்பைத் தொட்டியில் போட்டேன்,
அதைக்கண்ட எனது தாய்,
” ஏண்டா ராத்திரி முழுக்க தூங்காமல் இவ்வளவு கொசுவவா அடிச்சிருக்க“ என்றார்கள்,, “ஆமாம் மா, எனக்கு ரத்த காயத்தை ஏற்படுத்த வந்த என் எதிரிகளான இந்த கொசுக்களை நான் தான் அடித்தும், கொசுபத்தி வைத்து விஷப் புகை உண்டாக்கியும், எலக்ட்ரிக் பேட் மூலமும் மின்சாரத்தைப் பாச்சியும் கொலை செய்தேன், பின்பு மின்விசிறியை அதிக வேகத்தில் வைத்து, உடல் முழுவதும் வெளியே தெரியாவண்ணம் போர்வையை கொண்டு மூடி படுத்துவிட்டேன்“, என்று நான் செய்த கொலையை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் கொடுத்தேன்