சாந்தியும் மாரியும் காதல் திருமணம் செய்து கொண்டனர், சாந்தி
உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவள் மாரி தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்
அதனால் இவர்கள் குடும்பம் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் குடும்பத்தை விட்டு பிறந்த ஊரை விட்டு நகரத்திற்கு
குடிபெயர்ந்து வந்துவிட்டனர்.
இப்பொழுது மாரி கடைவீதியில் செருப்புத் தைக்கும் கடை ஒன்று
வைத்திருக்கிறார், இவர்களுக்கு கண்மணி என்ற பெண் குழந்தை
ஒன்று உள்ளது, அவள் தான் இவர்களுக்கு உலகம். கண்மணியை
நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் உயர்ந்த பதவிக்கு கண்மணி
செல்ல வேண்டும் இதுதான் மாரியின் ஆசை. அதற்காக இரவு பகல்
பாராமல் உழைத்தான் அடிக்கடி கண்மணியிடம் நாம் உயர்ந்த
பதவிக்கு சென்றால்தான் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை
கிடைக்கும் அதற்கு நீ நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லிக்
கொண்டே இருப்பான்.
அன்று காலையில் வழக்கம் போல கண்மணியை பள்ளிக்கு
அனுப்பிவிட்டு வேலைக்குச் செல்லும் மாரியை சந்தோஷமான
முகத்தோடு அனுப்பிவைத்தாள் சாந்தி, அன்று கடைத்தெருவில் நடந்த
ஜாதிக்கலவரம் ஒன்றில் கடையில் இருந்த மாரி மீது பெட்ரோல் ஊற்றி
பற்ற வைத்துவிட்டனர், அந்த செய்தி கேட்டு ஓடி வந்த சாந்தியும்,
கண்மணியும் மாரியைச் சாம்பலாக பார்த்து ஐயோ!அம்மா, யார்
இப்படி செய்தது, இனிமே நான் என்ன பண்ணுவேனு கதறி அழுதனர்.
அங்கிருந்தவர்கள் இவர்களை மாரியின் சாம்பல் அருகே செல்லக் கூட
அனுமதிக்கவில்லை.
இந்த செய்தி ஊடகங்களில் பரவியதால் கொலை தற்கொலையாக
ஜோடிக்கப்பட்டுவிட்டது, வழக்கு நீதிமன்றத்திற்கு செல்ல அங்கு
சாட்சியாக ஜோடிக்கப்பட்டவர்கள் மாரி தனக்குத்தானே பெட்ரோல்
ஊற்றி எரித்துக் கொண்டார் என்று சொல்ல, சாந்தி மட்டும் என்
கணவர் அப்படி செய்யமாட்டார் அவருக்கு ஜாதிகள் மீது என்றுமே
நம்பிக்கை இருந்ததில்லை, ஜாதிக்காக உயிரை விடும் அளவிற்கு அவர்
முட்டாளும் இல்லை, என் கணவர் இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது
என சாந்தி மேல்முறையீடு செய்தாள், இப்படியே வழக்கு பல
மாதங்கள் இழுத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தது. அன்றாட
வாழ்க்கைக்கு பணம் வேண்டும் வழக்கு நடத்த பணம் வேண்டும்
அதனால் சாந்தி தனது கணவரது செருப்பு கடையை எடுத்து
நடத்தினாள், இவ்வளவு பிரச்சனையிலும் சாந்தி ஒருநாள்கூட
கண்மணியின் படிப்பை நிறுத்தவில்லை.
அன்று வழக்கம் போல தங்கமே கண்மணி பள்ளிக்கூடத்துக்கு
பத்திரமா போயிட்டு வரணும், நல்லா படிக்கணும், போயிட்டு வர
வழியில்ல யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது
என செல்லம் கொஞ்சி கண்மணியை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி
விட்டு சாந்தி கடைக்கு சென்றாள். அன்று மதியம் வரை ஒரு
வருமானமும் இல்லை. அப்பொழுது தொலைதூரத்தில் இருந்து ஒரு
உருவம் தன் கடையை நோக்கி வருவதைக் கண்ட சாந்தி இன்று ஏதோ
வயிற்றுப் பிழைப்பிற்கு வருமானம் வரப்போகிறது என,
வாங்கய்யா! என்ன பிரச்சனை செருப்பு பிஞ்சுரிச்சா இல்ல பாலிஸ்
போடணுமா என்னன்னு சொல்லுங்க ஐயா நிமிஷத்துல பண்ணி
கொடுக்கர, இருமா எதுக்கு இப்படி படபடன்னு பேசுற பாலிஸ்தான்
போடனு, சரிய்யா இந்த பலகை மேல கால வையுங்க, அம்மாடி அந்த
பக்கத்து கடைக்காரப்பையன் அவன் மடிமேல் வைச்சு பாலிஷ்
போடுறான் உங்க மடி மேல வெச்சா உங்க கௌரவம் குறையுமோ, சரி
கொடுங்கய்யா நல்லா போட்டு விடுறேன். குனிஞ்சு நிமிர்ந்து நல்லா
போடுமா அப்பத்தான் பளபளன்னு தெரியும் என வழிந்து கொண்டு
பேச, அவன் எதை சொல்கிறான், எந்த எண்ணத்தில் இங்கு
வந்துள்ளான் என்று சாந்திக்கு தெரியும், ஆனால் எதிர்த்து கேட்க
முடியாது காரணம் வறுமை, முடிஞ்சிருச்சுங்கய்யா பாருங்க
போதுமானு, பரவாயில்லையே கைவசம் நல்ல தொழில் இருக்கே
உனக்கு எத்தன ஆயிரமுனு சொல்லு கொடுத்துடுவோம். ஆயிரம்
எல்லாம் இல்ல பத்து ரூபாய் கொடுத்துட்டு போங்கய்யா, சோத்துக்கு
இல்லைனாலு நக்கலுனு சொல்லிக்கிட்டே பணத்தைக் கொடுப்பது
போல சாந்தியின் கையை தடவிக் கொண்டு ஏதாவது பிரச்சனை
என்றால் என்ன பார்க்க வாம்மா, நான் இந்த ஊர்தானு சொல்லச்
சொல்ல படக்கென்று கையை இழுத்துக் கொண்டு தன்னுடைய
வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள் சாந்தி.
அவன் அங்கிருந்து போக அப்பொழுது அங்கு வந்த கதர் சட்டைக்கார
பையன் ஒருவன் அக்கா! உங்கள தலைவர் வரச் சொல்றாரு, எதுக்குடா
தம்பி? தெரியல அக்கா நாளைக்கு வந்துடுங்க மறக்காம வந்துருங்க
சரியானு சொல்லிவிட்டு போக, ஏதாவது நிதியுதவி
கொடுப்பாங்களான்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே நேரமாயிடுச்சு
கண்மணி வந்துடுவான்னு வீட்டுக்கு கிளம்பிட்டா.
வீட்டுக்குப் போன சாந்தி கண்மணி சோர்ந்து போய் இருப்பதை
பார்த்து என்ன ஆச்சும்மா, என்ன பிரச்சனை என்று கேட்க, நான் இனி
பள்ளிக்கூடத்திற்குப் போகமாட்டேன் அம்மா நான் எந்த தவறும்
செய்யவில்லை ஆனால் ஆசிரியர் இன்று என்னை முழு நேரமும்
வெளியே முட்டி போட வைத்துவிட்டார் எனக்கு அவமானமாக போய்
விட்டது அம்மானு அழுக ஆரம்பித்து விட்டாள். சாந்தி என்ன
சொல்லியும் கண்மணியை தேற்றமுடியவில்லை. நான் வந்து
நாளைக்கு பள்ளிக்கூடத்தில் கேட்கிறேன் என்ன பிரச்சனை என்று, நீ
கவலைப்படாமல் பள்ளிக்கூடத்திற்கு போமானு சாந்தி சொல்ல சரிமா
என்று மௌனமான குரலில் சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டாள்.
காலையில் எழுந்ததும் கண்மணி பள்ளிக்கூடத்திற்கு தயாராக,
எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை உள்ளது அது முடித்தவுடன்
பள்ளிக்கூடத்துக்கு வருகிறேன், நீ கவலை படாமல் பள்ளிக்குப் போமா
என்று சொல்லி கண்மணியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தலைவரை
பார்க்கச் சென்றாள்.
ஐயா தலைவர் வரச் சொல்லியிருந்தாரு பாக்கணுங்க என்று
கதவின் வெளியே நின்று கொண்டிருந்த காவலரிடம் சொல்ல, யாருமா
நீ? நான் இந்த ஊர்லதான் செருப்புத் தைக்கிற கடை வச்சிருக்கிற,
ஐயா என்ன பார்க்க வரச்சொன்னாருனு நேத்து அவர் கிட்ட வேலை
செய்யற பையன் வந்து கடையில சொன்னா அதுதான் நான் இங்கே
வந்துருக்கங்க, அப்படியாமா இரு கேட்டுட்டு வரேனு சாந்தியை
கதவிற்கு வெளியே நிறுத்திவிட்டு காவலர் உள்ளே சென்றார், இரண்டு
மணி நேரமாக கதவிற்கு வெளியே காத்திருந்தால் சாந்தி , அப்போது
அங்கு வந்தவர் உங்களை ஐயா உள்ளே வரச் சொல்லிகிறார்
வாருங்கள் என்று சொல்ல தயங்கி தயங்கி உள்ளே சென்றாள்.
தலைவரைப் பார்த்ததும் வணங்க, வாமா நீதா ஜாதிக் கலவரத்தில்
செத்த மாரி பொண்டாட்டியா, செலவுக்கு எல்லா என்னமா பண்ற?
மௌனமான குரலில் சாந்தி என் புருஷன் கடையை நான் தான்
பார்த்துக்கறங்க, அதுல வர வருமானத்தை வைச்சுதான் எங்க
குடும்பம் ஓடுதுங்க ஐயா , அப்படியாமா உனக்கு ஒரு பொம்பள புள்ள
இருக்குதுல அது என்னம்மா பண்ணுது? நம்ம ஊரு பள்ளிக்கூடத்துல
தான் படிக்குதுங்க ஐயா, சரிமா நல்லா படிக்கட்டும் ஒரு ஐயாயிரம்
ரூபாய் கொடுக்க சொல்ற வாங்கிக்கோ, அப்படியே அந்த வழக்க
திருப்பி வாங்கிடுமா, ஐயா! என்ன சொல்றீங்க அப்படி நான்
பண்ணுனா என் புருஷ தற்கொலை பண்ணிட்டாருனு ஆயிரும், என்
புருஷன் எப்படி செத்தாருன்னு எங்களுக்கு தெரியணுங்கய்யா.
அடிங்க! விதியில்லாத கழுதைக்கு வாய பாரு, உன் புருஷ எப்படி
செத்தானு தெரியனுமா சொல்ற கேளு, என் தம்பிதா உன் புருஷனை
பெட்ரோல ஊத்தி ஏரிச்சுட்டா போதுமா எப்படி செத்தான்
தெரிஞ்சுடுச்சா, பைய எதோ கலவரத்துல தெரியாம பண்ணிட்டா
மரியாதையா போயி வழக்க திருப்பி வாங்கிகப் பாரு, பொம்பள புள்ள
வேற வச்சிருக்கிற சூதானமா இருந்துக்கோ. சரிங்க ஐயானு
சொல்லிவிட்டு சாந்தி பணத்தை வாங்கமல் வெளியே வந்து விட்டாள்
வேகமாக கண்மணி பார்த்து விரைந்த சாந்தி.
அன்றும் கண்மணி பள்ளிக்கு வெளியே முட்டிபோட்டு நிற்பதை
பார்த்து கண்மணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று
விட்டாள். வீட்டிற்கு சென்ற சாந்தி வழக்கை வாபஸ் வாங்கும் இல்லை,
இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவுமில்லை கண்மணியை
பள்ளிக்கு அனுப்பவுமில்லை. பிரம்மை பிடித்தது போல் ஒரு ஓரமாக
அமர்ந்து இருந்தாள். தன் கணவரை கொன்றவர் யார் என்று தெரிந்தும்,
தன்னுடைய கணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று
தெரிந்தும், அதை வெளியில் சொல்ல முடியாமல் எதிர்த்து போராட
பலமும் இல்லாமல் என்ன செய்வதென்று அறியாமல் உலகம்
வெறுத்துப்போய் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அவள் அருகில் வந்த கண்மணி காலையிலிருந்து நமது
வீட்டில் கரண்ட் இல்லை, குடிநீர் வரவில்லை, என்னுடைய நண்பர்கள்
என்னைப் பார்த்து விலகிப் போகின்றனர் என்ன நடந்து
கொண்டிருக்கிறது அம்மா ஏதாவது பிரச்சனையா என்று கேட்க,
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை,நீ போய் படி படிக்கிற வேலையை
மட்டும் பாரு என்று கண்மணியை சமாதானம் செய்துவிட்டாள். அன்று
இரவு சாந்தி தூங்கவே இல்லை தன்னைச் சுற்றி நடப்பதை பற்றி
யோசித்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் சாந்தி வீட்டுக்கதவை அதிகாலையிலேயே யாரோ தட்ட,
சாந்தியின் தந்தையும் தாயும் வந்திருந்தனர். சாந்தியும் மாரியும்
காதல் திருமணம் செய்து கொண்டதால் சாந்தியின் பெற்றோர்கள்
இதுவரை சாந்தியை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மாரியின் இறப்புக்கு
கூட அவர்கள் வரவில்லை. ஆனால் இப்பொழுது சாந்தி இருக்கும்
நிலையில் இவர்களின் வருகை அவளுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது
அன்போடு அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள், அப்பொழுது
எழுந்த கண்மணி யார் இவர்கள் என்று கேட்க அவர்கள் நமக்கு தூரத்து
உறவினர்கள் என்று கூறினாள்,
காப்பி ஏதாவது குடிக்கறீங்களா என்று கேட்ட சாந்தியிடன்,
இல்லை! உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச்
சென்றனர், நீ வழக்க வாபஸ் வாங்கிடு, இல்லைனா அந்த தலைவர்
நம்ப குடும்பத்தை இல்லாமல் பண்ணிருவா போல இருக்குது, எங்க
வீட்டுல வந்து நிறைய பிரச்சனை பண்ணிட்டு இருக்கிறான். நீ
பொட்டபுள்ளைய வெச்சுட்டு தனியா இருக்கிற அவனை எதிர்த்து
உன்னால எதுவுமே பண்ண முடியாது அதனால நாங்க சொல்றத
கேட்டுட்டு வழக்கு வாபஸ் வாங்கிடு நம்ம வீட்டுக்கு குழந்தையை
கூட்டிட்டு வந்துரு என்று சொல்ல, அப்பொழுதுதான் அவளுக்கு
புரிந்தது இவர்கள் அந்தத் தலைவரின் அம்பாக தன்னை தேடி
வந்துள்ளார்கள் என்று.
அதற்கு சட்டென்று சாந்தி நீங்க யாரும் எங்களை காப்பாத்த
வேண்டாம், என் பிள்ளையை பார்த்துக்க எனக்கு தெரியும் இனிமேல்
எங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, உறவு
இருக்குதுன்னு இனிமேல் எங்களை யாரும் தேடிட்டு வராதீங்க,
என்னோட வீட்டுக்காரர் இறந்ததற்கு கௌரவம் போயிடும்னு யாருமே
வரல, இப்ப எதுக்கு என்ன தேடி வந்திங்க, பெத்த மகள தேவைக்காக
தேடி வருவதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா தயவு செஞ்சு
வெளியே போயிடுங்க, என் பிள்ளைக்கு இது எதுவுமே தெரியக்கூடாது
என்று சொல்லிட்டு இருக்க இருக்க கண்மணி வந்து என்னம்மா ஆச்சு
என்ன பிரச்சனையினு கேட்க, சாந்தி அழுக ஆரம்பித்துவிட்டாள்.
கண்மணி கோபத்தோடு தயவுசெய்து எங்கள் வீட்டை விட்டு
வெளியே போங்கள் என்னுடைய அம்மாவை ஏன் இப்படி
துன்பப்படுகிறீர்கள் என்று சொல்ல, அவர்கள் வெளியே சென்றனர்.
சாந்தியை கட்டி அணைத்துக் கொண்ட கண்மணி என்ன ஆச்சு அம்மா
என்று மௌனமான குரலில் கேட்க, பணம் பதவி உள்ளவர்கள்
சொல்வதை நாம் கேட்க வேண்டும் அப்படி கேட்கவில்லை என்றால் நம்
வாழ்க்கையே இல்லாமல் போய்விடும், நீ நன்றாக படித்து நம்முடைய
இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று கூற, அதற்கு நான்
பள்ளிக்கூடம் போக வேண்டுமே அம்மா, என்னை தான் நீ பள்ளிக்கு
அனுப்புவதில்லை என்று கூற, நாளையிலிருந்து நீ பள்ளிக்கு
செல்லலாம் நான் இன்று பள்ளிக்கு சென்று இதைப் பற்றி பேசி
வருகிறேன் என்று வேக வேகமாக தயாராகி வெளியே சென்றாள்.
திரும்பி வீடு வந்திட நாளையிலிருந்து நீ பள்ளிக்கு செல்லலாம்
நம்மைச் சுற்றியும் எந்த பிரச்சனையும் நடக்காது, எல்லாப்
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் எனக் கூறி
கண்மணியை மடியில் படுக்க வைத்துக்கொண்டாள், எப்படி அம்மா
என்று கேட்க, அதற்கு விடை நீ தான் சொல்ல வேண்டும் இப்பொழுது
அல்ல சில காலங்கள் தள்ளி என்று கூறினாள், ஒன்றும் புரியாமல்
குழப்பத்தில் கண்மணி தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலை வழக்கம் போல் கண்மணி பள்ளிக்குச்
சந்தோஷமாக துள்ளிக்குதித்து சென்றாள், இவர்களை சுற்றியும் எந்த
பிரச்சனையும் நடக்கவில்லை, பள்ளியிலும் எந்த பிரச்சினை
நடக்கவில்லை. சந்தோஷமாக வீடு வந்த கண்மணி, சாந்தியிடம் என்ன
செய்தாய் அம்மா என்று கேட்க, உண்மையை இழந்தேன் நிம்மதி
கிடைத்து விட்டது , நீ தான் இதற்கு விடை இப்பொழுது இல்லை காலம்
கடந்து என்று மீண்டும் புரியாத புதிராக பேசிவிட்டு அமைதியாக
இருந்துவிட்டாள்.