
நிமு எங்க போன “ தன் இளைய மகளை தேடியவாறு குறள் கொடுத்தாள் மிளா இனத்தின் தலைவி யிதா.
“ நீ இங்க தான் ஒழிஞ்சுருக்கனு தெரியும் ஒழுங்கா வெளில வா “ கண்களை சுழற்றி நிமு தென்படுகிறாளா என்று
காண, புதரின் பின்னே அசைவு கண்டு உள்ளுக்குள் சிரித்து, “ சரி விடு உனக்கு இன்னைக்கி உன் அப்பா கூட போக
விருப்பமில்லை போல “ திரும்பி செல்வது போல் பாசாங்கு காட்டினாள் யிதா.
“ அம்மா நிஜமாவா “ உற்சாகத்துடன் நிமு ஓடி வந்து கேட்க, அவளை முறைப்புடன் பார்த்து “ இதுக்கு மட்டும் பேசு
இவ்ளோ நேரமா நா பேசும்போது பதில் தந்தியா “
அசட்டு சிரிப்புடன் “ சும்மா விளையாட்டு மா நீ சொன்னது உண்மையா நா அப்பா கூட தெற்கு திசைக்கு போக
போறேனா “ ஆவலாய் கேட்கும் மகளை கண்டு சிரிப்பு வந்தது.
“ ஆமா ஆனா நீ மட்டும் போக போறது இல்ல யமுவும் கூட வரா “
ஆவலாய் இருந்த நிமுவின் முகம் நொடியில் மாறியது “ நா போகல “ கோபத்துடன் கூறிவிட்டு வேகமாய் ஓட,
அவளை விட வேகமாக சென்று வழிமறித்து “ ஏன் “ காரணம் தெரிந்தும் கேட்க, “ மா அவளால தான் “ மேலும் கூற
முடியாமல் கண்கள் கலங்கியது.
“ நிமு அவளும் அப்ப குட்டியா இருந்தா …. தெரிஞ்சு அவ அதை செய்யலைனு உனக்கு தெரியும் அப்றம் ஏன் இந்த
கோவம் “ அவளிற்கு புரியவைக்கும் தவிப்பில் யிதா கூற,
“ எனக்கு புரியுது ஆனா என்னால அதை ஏத்துக்க முடியலை மா “
“ நிதர்சனத்தை புரிஞ்சுக்கோ நம்ம வாழ்க்கை எப்ப முடியும்னு நமக்கே தெரியாது ….. இன்னைக்கோ நாளைக்கோ
ஏன் அடுத்த நொடியே கூட நமக்கு மரணம் வரும் …. வாழும்வரை நம்ப கூட இருக்கவங்களோட சந்தோஷமா
வாழ பார்க்கனும் இல்லைன்னா நாம கூட இருக்கனும்னு நினைக்கும் போது அவங்க இருக்க மாட்டாங்க “
மெளனமே நிமுவிடம், சிறிது நேரம் அவளை தனிமையில் விட்டு யோசிக்க அவகாசம்
கொடுப்போமென்றெண்ணி “ உனக்கு முடிவெடுக்க கொஞ்ச நேரம் தான் இருக்கு …. போகனும்னு ஆசை இருந்தா
சீக்கிரம் வா உனக்காக எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க “ கூறிவிட்டு ஓட, தான் எப்பொழுதும் வேதனையிலோ
குழப்பத்திலோ இருக்கும் பொழுது செல்லும் குளத்திற்கு ஓடினாள் நிமு.
செம்மை அடவி இயற்கைக்கு பஞ்சமில்லா காடு, அதேபோல் ஆபத்திற்கும் தான். மிளா இனத்தினை சேர்ந்த
அனைவரும் இங்கு வசித்து வர, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தெற்கு திசையில் நடக்கும் ஆலோசனை
கூட்டம்தனில் பங்கேற்க அனைத்து விலங்கு இனத்திலிருந்தும் சிலர் அங்கு செல்வர். தங்கள் இனத்திற்கு வரும்
ஆபத்து மற்றும் தேவைகளை கூறுவர். அதற்காகவே நிமுவின் தந்தை அரிகா மற்றும் சிலர் செல்ல
இருக்கின்றனர்.
நிமுவிற்கு சிறு வயதில் இருந்தே அங்கு செல்ல விருப்பம், தானும் வருகிறேன் என்று அடம்பிடித்து அழுத
போதிலும் கூட்டிச் செல்லவில்லை. “ அங்கு நம்மை விட பெரிய ஆபத்தை விளைவிக்கும் இனத்தினர்
வருவார்கள், சிறிது அசந்தாலும் நம் உயிர் நமக்கில்லை அதுமட்டுமின்றி அது மனித இனத்தினர் வாழும்
இடத்திற்கு பக்கமே உள்ளதால் அவர்களாலும் நமக்கு தீங்கு ஏற்படும் “ என்று அரிகா கூறி “ நீ பெரியவளா
வந்தோட்டி கண்டிப்பா கூட்டிட்டு போறேன் “ என்று வாக்கும் அளித்தான்.
எப்பொழுது தன்னை கூட்டி செல்வார்கள் என்று ஒவ்வொரு வருடமும் ஆவலாய் காத்திருப்பாள்.
அக்காத்திருப்பிற்கு பலனாய் இப்பொழுது தன் விருப்பம் நிறைவேற போகிறதென்று ஆனந்தம்
கொள்ளவேண்டும் அதற்கு மாறாக குழப்பத்தில் குளத்தின் அருகே உள்ள சிறு பாறையில் அமர்ந்திருக்கிறாள்.
அரிகா மற்றும் யிதா இருவருக்கும் யமு, நிமு மற்றும் திதா என மூன்று குட்டிகள். யமு, நிமு இருவரும் பெண்,
திதா இவர்களின் குட்டி தம்பி. சிறுவயதில் நிமு யமு திதா மூவரும் தங்கள் இனத்தினர் வாழும் பகுதியை விட்டு
சற்று தூரம் சென்று விளையாடிக் கொண்டிருக்க, நிமுவிற்கு பயமாய் இருந்தது. அரிகா எப்பொழுதும் கூறுவது “
நம்ப பகுதியை விட்டு தனியா எங்கையும் போக கூடாது, நம்ம கூட்டத்தோட தான் இருக்கனும் “ பலமுறை இதை
மூவருக்கும் கூறியுள்ளான். நிமு எவ்வளவு கூறியும் யமு இருவரையும் இங்கு அழைத்து வந்துவிட்டாள்.
“ நிமு பயந்து நின்னுட்டே இருக்க போறியா இல்ல எங்க கூட விளையாட போறியா ஒரு முடிவ சொல்லு “
“ நாம நம்ம இடத்துக்கு போய் விளையாடலாம் எனக்கு இங்க பயமா இருக்கு அப்பா எத்தனை தடவை சொல்லி
இருக்காரு அவரை மீறி வந்ததே தப்பு வாங்க போலாம் “ யமு அசையாமல் இருக்க, அவளைக் கண்டு கோபம்
தான் வந்தது நிமுவிற்கு “ நீ வா திதா “ திதாவை அழைக்க, அவன் இருவரையும் மாறி மாறி கண்டு “ யமு நிமு
சொல்றதும் சரி தான் அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் நாம போகலாம் “
“ நா இங்க இருந்திட்டு வரேன் நீங்க வேணா போங்க “ முகத்தை திருப்பி கொண்டு ஓட்டம் பிடித்தாள். நிமு
அவளை அழைப்பதை கேட்டும் நிற்காமல் ஓட, தீடிரென டமால் என்ற சத்தம் அப்பகுதியையே அதிரவைத்தது.
நிமு திதா இருவரும் நடுங்கி போயினர். யமு ஓட்டத்தை நிறுத்தி ஓர் நிமிடம் அதிர்ந்தாள். சத்தம் வந்த திசையை
மூவரும் காண, ஐந்து பேர் கொண்ட குழு துப்பாக்கியுடன் இவர்களை குறிபார்த்தவாறு வந்தனர்.
“ திதா ஓடு சீக்கிரம் போ “ நிமு திதாவிடம் கத்த, அதிர்ந்து நின்றவனுக்கு அவள் கத்தல் எதுவும் கேட்கவில்லை
போலும், தன் தலையை அவன் தலையுடன் முட்டி “ திதா போ “
“ நிமு ய…மு யமுவ கூப்பிடு “
“ நீ முதல்ல போ நா யமுவோட வரேன் “ அவனை செல்லக் கூறிவிட்டு யமு சென்ற பக்கம் ஓட்டம் பிடித்தாள்.
“ யமு “ கத்தியவாறு அருகில் வர, நிமுவின் குறளில் சுயம் வந்து “ நிமு அ.. து என்ன சத்தம் “ மருண்ட விழியில்
கேட்க, “ நீ முதல்ல வா சீக்கிரம் பேச நேரம் இல்லை “ அவசரமாய் கூறி வந்த வழியே திரும்பி செல்ல, யமுவும்
நிலைமை புரிந்து ஓடினாள் பின்னாலே.
இவர்களை நோக்கி தோட்டாக்கள் சரமாரியாக வந்தவண்ணம் இருக்க, தங்களால் முடிந்தளவு ஓடி அடர்ந்து
மரங்களுக்கிடையே மறைந்தனர். திதா தப்பி சென்று விட்டான் என்ற எண்ணத்தில் இவர்கள் இருக்க, அவன்
இவர்களை தேடி மீண்டும் அவ்விடம் வந்தான்.
மனித கூட்டம் இவர்கள் தப்பி சென்றதில் கடுப்புடன் கதைத்து கொண்டிருக்க, திதா வருவதை ஒருவன் கண்டு
மற்றவர்களுக்கு சைகையில் கூறி சத்தமின்றி பதுங்கி அவனை வீழ்த்த குறி பார்த்தனர். திதாவிற்கு
உள்ளமெல்லாம் தன் சகோதரிகள் நலமுடன் இருக்கவேண்டும் என்ற பயத்தில் வந்து கொண்டிருக்க, சரியாய்
இவர்களின் குறியில் மாட்டினான்.
தோட்டா பாய்ந்த இடம் மரண வலியை கொடுத்தது. அவன் இட்ட சத்தத்தில் மறைந்திருந்த நிமு யமு இருவரும்
திடுக்கிட்டு சத்தம் வந்த திசை நோக்கி வேகமெடுத்து ஓடினர். திதா உயிர் வலியில் கீழே விழுந்து துடித்துக்
கொண்டிருக்க, அவனை சுற்றி நின்ற மனிதர்கள் ஐவரும் அச்சிறு உயிரின் வேதனையை கண்டு
இரக்கமில்லாமல் சிரித்து, அவன் கழுத்தை அறுத்தனர்.
கத்தி கழுத்தில் அழுத்தும் போதே வலியில் கத்தியவன் அதற்கடுத்து அறுக்கும் பொழுது துடிதுடித்து கண்களில்
கண்ணீரோடு தன் உயிரை நீத்தான். உடம்பை விட்டுவிட்டு தலையை மற்றும் அவர்கள் எடுத்து சென்றனர்.
நிமு யமு இருவரும் கண்டது தலையில்லா தன் குட்டி தம்பியை தான். நிமு அழுகவோ கத்தவோ இல்லை
திதாவின் உடம்பை வெறித்தவாறு அமர்ந்து விட்டாள். யமு அழுதுகொண்டே தங்கள் இனத்தினரை அழைத்து வர
சென்றாள். எல்லாம் முடிந்தது இனி திதா தன்னுடன் பேச மாட்டான் விளையாட மாட்டான் அவன் முகத்தை
இனி காண இயலாது நினைத்து நினைத்து உள்ளுக்குள்ளே உயிர் வேதனையை அனுபவித்தாள் நிமு.
‘ யமு ஒருவேளை தங்களை அவ்விடம் அழைத்து செல்லாமல் இருந்திருந்தால் தான் கூப்பிட்டவுடன்
வந்திருந்தால் இன்னேரம் திதா தன்னுடன் இருந்துருப்பான் ‘ என்ற எண்ணமே மனதில் பதிய யமுவிடம் இருந்து
மொத்தமாய் விலகினாள். எத்தனை முறை யமு இவளிடம் பேச முயற்சித்து தன் மன்னிப்பை கூறினாலும்
அவளிடம் பேசாமல் பார்க்காமல் விலகி செல்வாள். காலங்கள் செல்ல யமுவும் தன்னால் நிமு வேதனை
கொள்ள வேண்டாம் என்று அவள் முன் வருவதே இல்லை.
யிதா அரிகா இருவரும் நிமுவிடம் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் இவளால் யமுவை மன்னிக்க
முடியவில்லை. மூளைக்கு புரிகிறது இதில் யமுவின் தப்பு ஏதுமில்லை அவளிற்கு என்ன இப்படி எல்லாம்
அசம்பாவிதம் நடக்குமென்று தெரியுமா, சிறு வயது விளையாட்டு பிள்ளை அசட்டு தைரியமும் ஆசையும்
கொண்டு அவ்விடத்திற்கு அழைத்து சென்றாள். ஆனால் மனது யமுவிடம் பேசவோ பழையபடி இருக்கவோ
விரும்பவில்லை.
திதாவின் இழப்பின் வேதனை தன் உயிர் பிரியும் வரை ஆராது என்று நினைத்துக் கொண்டே குளத்திலுள்ள தன்
உருவத்தை கண்டாள் நிமு. ஓர் முடிவெடுத்தவளாய் தன் தாயிடம் சென்று தந்தையுடன் செல்ல போகின்றேன்
எனக் கூறினாள். யிதா சிரிப்புடன் “ உங்க அப்பா மற்ற ஆண்களோட பெரிய பாறைகிட்ட இருக்காங்க பத்திரமா
போயிட்டு வா “ கண்ணத்தோடு கண்ணம் உரசி மகிழ்வு
கள் இனத்தினர் சிலர் இருப்பதை கண்டு தன் தந்தை அருகில் நின்றாள். அவள் வருவதை எண்ணி மனதில்
மகிழ்ந்த யமு முடிந்தவரை அவள் கண்ணில் படாமல் சென்று வருவோமென்ற முடிவுடன் வேறு பக்கம் சென்று
நின்றாள். அதை கண்டும் காணாமலும் நின்ற நிமுவிடம் “ நாம கிளம்பலாம் தான “ அரிகா கேட்க தலையை
ஆட்டினாள். அனைவரும் சேர்ந்து தெற்கு திசை நோக்கி பயணித்தனர்.
அன்பின் பரிமாணங்கள் பல உள்ளன. தாயின் தாய்மை, தந்தையின் அரவணைப்பு, தோழமைகளின் நட்பு,
உடன்பிறப்புகளின் அன்பு, பெரியவர்களின் பாசம் என அனைத்தும் அன்பே. ஆண் பெண் இருவரின் காதலென்பது
ஒருவகை என்றால் இங்கு திதாவிற்கும் நிமுவிற்கும் உள்ள அன்பு ஒருவகை. அவனை தம்பியாய் மட்டும்
இல்லாமல் மகனாகவே கருதியவளாள் அவன் இழப்பை சாகும் வரை மறக்க இயலாது. அவன் மேல் நிமு
கொண்டுள்ள அன்பினாலே யமுவிடம் பேச முடியவில்லை, அவளை மன்னித்தாலும் மனதார அன்பு கொண்டு
பழக முடியாதென்பதை அறிந்தே முற்றிலும் விலகினாள். நிமு யமு சேர்வார்களா என்பதை காலமே முடிவு
செய்யும்.
**********முற்றும்**********