கடலூர் பேருந்து நிலையம்.
ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜாராம் படிக்கட்டு பக்கம் திரும்பி பார்த்து,
‘என்ன செல்வா, எடுக்கலாமா’ என்று கேட்கவும்,
நடத்துனர் செல்வராஜ் ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்கண்ணே, இன்னும் மூணு நாலு சீட்டுக்கு ஆள் ஏறல’ என்று பதில் கொடுத்து விட்டு,
‘குறிஞ்சிப்பாடி, வடலூர், விருதாலம், திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதூர், பெரம்பலூர்’ என்று தன்னுடைய வழக்கமான பல்லவியை ஒரு விதமான ராகத்தில் பாட ஆரம்பித்தார்.
‘செல்வா’ என்று மீண்டும் அழைத்த ஓட்டுநர் ராஜாராம்,
‘அந்த பொன்னி பஸ் டிரைவர் நம்ம பஸ்ஸை சீக்கிரம் எடுக்க சொல்லி சண்டைக்கு வராம்பா, எடுத்தறலாமா’ என்று கேட்கவும்,
தன்னுடைய கையில் கட்டி இருந்த வாட்சை பார்த்த செல்வா,
‘இப்ப என்னவாம் அவனுக்கு, டெய்லி பிரச்னை பண்றதே வேலையா போச்சி அவனுக்கு. நம்ம டைம் இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. அவனுக்கு அவசரம்னா அவனை முன்னாடியே எடுத்துட்டு கிளம்ப சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும்,
‘குறிஞ்சிப்பாடி, வடலூர், விருதாலம், திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதூர், பெரம்பலூர்’ என்று கத்த ஆரம்பித்தார்.
மெல்ல நடந்து வந்த சீனியாத்தாள் பாட்டி நடத்துனர் செல்வராஜ் அருகில் வந்து,
‘தம்பி இந்த பஸ் தொழுதூர் போகுமா’ என்று கேட்க,
இவ்வளவு நேரம் தொண்டை தண்ணி காய அதை தானே கத்திக்கிட்டு இருக்கேன். போகும் போகும் பாட்டி. உள்ளே ஏறி உக்காரு’ என்று சொல்லவும்,
‘கோச்சுக்காத தம்பி, எனக்கு காது சரியா கேக்காது’ என்று சொல்லிவிட்டு உயரத்தில் இருந்த படிக்கட்டில் ஏற முடியாமல் தடுமாறுவதை கவனித்த செல்வராஜ்,
பாட்டியின் கையை பிடித்து மேலே ஏற்றிவிட்டு கொண்டே,
‘ஏன் பாட்டி, உன்னால பஸ்ல தனியா மேலேயே ஏற முடியலையே, இந்த வயசுல நீ எப்படி தனியா வந்தே. கூட யாரும் வரலியா’ என்று சலித்துக்கொண்டே சொல்லிவிட்டு காலியாக கிடந்த இருவர் இருக்கையில் ஜன்னல் ஓரமாக பாட்டியை உட்கார வைத்து விட்டு கீழே இறங்கி மீண்டும் தன்னுடைய பல்லவியை பாட தொடங்கினார்.
அடுத்தடுத்து இருவர் ஏறிவிட பாட்டிக்கு பக்கத்தில் இருந்த ஒரே ஒரு இருக்கை மட்டுமே காலியாக கிடந்தது.
‘செல்வா’ என்று மீண்டும் கூப்பிட்டு கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்த ராஜாராம்,
‘இதுக்கு மேலே வெயிட் பண்ண முடியாது. அவன் என்னையே பார்த்து முறைச்சிகிட்டு இருக்கான்’ என்று சொல்லிவிட்டு பேருந்தை கிளப்ப ஆரம்பித்தார்.
‘சரிண்ணே, போற வழியிலே ஆள் ஏறிடும்’ என்று சொல்லிவிட்டு பேருந்தின் படிக்கட்டில் செல்வராஜ் ஏறிக்கொண்ட போது ஒரு கல்லூரி மாணவன் ஓடிவந்து பேருந்தில் ஏறிக்கொண்டான்.
‘எந்த ஊர் தம்பி’
‘பெரம்பலூர்’ என்று பதில் சொல்லிக்கொண்டே இருக்கை எதுவும் காலியாக இருக்கிறதா என்று கவனித்துக்கொண்டே உள்ளே நடந்தவன், பாட்டிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரே ஒரு இருக்கை மட்டுமே காலியாக இருந்ததை பார்த்ததும் சற்றே தங்கிவிட்டு பின் பாட்டிக்கு அருகிலேயே அமர்ந்துகொண்டான்.
ஜன்னல் ஓரமாக சற்று ஒடுங்கி அமர்ந்து அந்த பையனுக்கு இடம் கொடுத்த சீனியாத்தாள் பாட்டி,
‘நல்லா குந்து கண்ணு’ என்று அவனை பார்த்து பாசமாக சொன்னது அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது.
கடலூர் முதுநகரை தாண்டிக்கொண்டிருந்தது பேருந்து.
‘டிக்கெட், டிக்கெட், எல்லாரும் சில்லறையா எடுத்து வச்சுக்கோங்க, இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் ஒவ்வொருத்தரா ஐநூறுவா நோட்ட எடுத்து நீட்டக்கூடாது’ என்று சொல்லிக்கொண்டே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்திருந்தார் நடத்துனர்.
அந்த கல்லூரி மாணவனுக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர் செல்வராஜ், பாட்டியை பார்த்து,
‘பாட்டி, தொழுதூர் தானே போகணும்னே சொன்னே, 85 ரூபா கொடு’ என்று கேட்டு கையை நீட்டினார்.
தொகையை கேட்ட பாட்டி சற்று அதிர்ச்சியானது தெரிந்தது.
‘அவ்ளோவா. அம்பது ரூபான்னு தானே சொன்னாங்க’ என்று பாட்டி கேட்க,
‘அம்பதா, எந்த காலத்துல இருக்க பாட்டி நீ. நெறய டிக்கெட் கொடுக்கணும். சீக்கிரம் பணத்தை எடு’
ஏதோ முனகி கொண்டே ஒரு நூறு ரூபாயை எடுத்து நடத்துனரிடம் கொடுத்தார் பாட்டி.
டிக்கெட்டையும் மீதி பணத்தையும் கொடுத்துவிட்டு அடுத்த ஆளிடம் நகர்ந்தார் நடத்துனர்.
மீதி பணத்தை வாங்கிக்கொண்ட பாட்டி, கையில் வைத்திருந்த ஒரு சிறிய சுருக்கு பையை திறந்து உள்ளே இருந்த சில ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்து ஏதோ கணக்கு போட தொடங்கினார்.
‘ரெண்டு எம்பத்தஞ்சு போனா மீதி எவ்ளோ இருக்கும், அவ்ளோ இருக்குமா’ என்று ஏதோ முனகுவது அந்த பையன் காதில் கொஞ்சமாக விழுந்தது.
பாட்டியை கவனிக்காமல் தன்னுடைய போனில் தீவிரமாக முகநூல் பார்த்துக்கொண்டு இருந்த அந்த பையன் பாட்டி தன்னுடைய கையை சுரண்டுவதை பார்த்து பாட்டியின் பக்கம் திரும்பினான்.
‘கண்ணு, ரெண்டு எம்பத்தஞ்சு எவ்ளோ வரும்’ என்று பாட்டி கேட்கவும்,
முதலில் சற்று முழித்துவிட்டு பின்பு ‘170 ரூபாய் பாட்டி’ என்று பதில் சொன்னான்.
‘அவ்ளோ ஆகிடுமா’ என்று சொல்லிவிட்டு, ‘அப்போ மீதி 80 ரூபா தான் கைல இருக்குமா, அந்த காசுக்கு எவ்ளோ வாங்க முடியும்னு தெரியலையே’ என்று தனக்கு தானே பேசிக்கொண்டது எதுவும் அவனுக்கு புரியவில்லை.
அதன்பின்னும், சற்று தாழ்ந்த குரலில் ஏதோதோ அந்த பாட்டி பேசியது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதற்குள் வடலூர் வந்திருந்தது.
‘வடலூர் இறங்கறவங்க எல்லாம் இறங்கிக்கோங்க’ என்று குரல் கொடுத்த நடத்துனர் புதிதாக வந்தவர்களை பேருந்துக்குள் ஏற்றிக்கொண்டார்.
பேருந்து புறப்பட்டது.
இப்போது பாட்டி பேசுவது சற்று தெளிவாக கேட்டது அவனுக்கு.
‘மேலே போற வயசுலயாவது இந்த நாக்கு அடங்குதா, எல்லாம் அந்த ஆள சொல்லணும். ருசிய காட்டிட்டு நிம்மதியா போய் சேர்ந்துட்ட அவரைத்தான் சொல்லணும்’ என்று தொடர்பில்லாமல் ஏதோதோ அந்த பாட்டி பேசிக்கொண்டிருந்ததை அருகில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
முகநூல், வாட்சாப் பார்த்து சலித்துப்போன அவனுக்கு பாட்டியிடம் பேச்சு கொடுக்க வேண்டுமென்று தோன்றியது.
‘என்ன பாட்டி, ஏதாவது பிரச்சனையா. தொழுதூருக்கு யாரையாவது பார்க்க போறீங்களா’ என்று கேட்டான்.
‘இல்லே கண்ணு. யாரையும் பார்க்க போகல. ஒரு கடைக்கு போறேன் கண்ணு. போயிட்டு உடனே திரும்பணும். மகனும், மறுமவளும் தேடுவாங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தனக்குள் பணக்கணக்கு போட ஆரம்பித்தார்.
பதிலை கேட்டதும், பாட்டிக்கு ஏதும் மனநல பிரச்னை இருக்குமோ என்ற சந்தேகத்துடன்,
‘இவ்ளோ தூரம் பஸ்ல போய் அப்படி எந்த கடைக்கு போறீங்க பாட்டி’ என்று கேட்டான்.
‘அங்க சின்ன படையாச்சி சேவு கடைன்னு ஒன்னு இருக்கு. அங்க தான் போறேன் கண்ணு’
அவன் மூன்று வருடமாக பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் சொந்த ஊரான கடலூர் வந்து போகும்போது பேருந்தில் தொழுதூர் வழியாக தான் செல்கிறான். இதுவரை பாட்டி சொன்ன மாதிரி ஒரு கடையை அவன் அங்கே பார்த்ததில்லை.
‘அந்த கடை தெரிஞ்ச கடையா பாட்டி’ என்று கேட்டான்.
‘இல்ல தம்பி. அந்த கடைல சேவு ரொம்ப நல்லா இருக்கும். பதினஞ்சு வருஷம் முன்னாடி என்னோட வீட்டுக்காரர் உசுரோட இருந்தப்போ சாப்பிட்டது. அதுக்கப்புறம் கிடைக்கவே இல்லை. ‘
பாட்டி பேசுவது ஏதோ கொஞ்சம் புரிவதை போல இருந்தாலும், முழுவதும் புரியவில்லை.
‘அதுக்காகவா இவ்ளோ தூரம் போறீங்க. ‘ என்று ஆச்சர்யமாக கேட்டான்.
பாட்டி தன்னுடைய பாதி பொக்கை வாயை திறந்து சிரித்துக்கொண்டே அவனை பார்த்து,
‘இந்த நாக்கு அடங்குதா. எல்லாம் அந்த ஆள் காட்டி விட்டுட்டு போன ருசி தான்’ என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.
அந்த ஆள் என்று பாட்டி சொல்வது அவருடைய கணவரை தான் என்று புரிந்துகொண்ட அவன் பாட்டியையே பார்த்துக்கொண்டிருக்கவும்,
பழைய நினைவுகளில் இருந்து மீண்ட பாட்டி,
‘என்னோட வீட்டுக்காரர் லாரி ஓட்டுவார். கன்னியாகுமரி வரைக்கும் போயிட்டு வருவார். திரும்பி வரப்போ சாத்தூர்ல இருக்கற ஒரு சேவுக்கடைல சேவு வாங்கிட்டு வருவார். அவ்ளோ சுவையா இருக்கும். சாப்புட சாப்புட உள்ள போயிட்டே இருக்கும்.’ என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டே தொடர்ந்தார்.
‘அப்புறம் அவருக்கு உடம்பு முடியாம போயிடுச்சி. தூரமா எங்கேயும் போக முடியலே. பக்கத்துல மட்டும் லாரில க்ளீனரா போனார். அப்போ தான் தொழுதூர்ல ஒரு சேவு கடை இருக்கு. அங்கே கிடைக்கற சேவு அப்படியே சாத்தூர் சேவு சுவைல இருக்கு. நான் வாங்கிட்டு வரேன்னு சொன்னார். அடுத்த மாசமே ஒரு நாள் வாங்கியாந்தாரு. அவரு சொன்ன மாதிரியே அவளோ நல்லா இருந்தது. ‘ என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டவர்,
‘பத்து நாளைக்கப்புறம் நடந்த ஒரு விபத்துலே செத்துபோய்ட்டார்’ என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டார்.
‘அவரு செத்துப்போய் ஒரு பதினஞ்சு வருஷம் இருக்குமில்லே’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்ட பாட்டி திரும்பி அவனை பார்த்து,
‘எனக்கு ரெண்டு பையனுங்க கண்ணு. சின்னவன் மெட்றாஸ்ல இருக்கான். கடலூர்ல பெரியவன் வீட்டுல தான் இருக்கேன். அவன் கம்பி கட்டுற வேலைக்கு போறான். கொஞ்ச வருமானம் தான்.ஒரு பேரன், மூணு பேத்திங்க. அவனுக்கே வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்குது. இதிலே, இந்த வயசுல அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வான்னு அவன்கிட்டே கேட்க முடியுமா. இருந்தாலும், எப்பவாவது கடலூரிலேயே பேக்கரில சேவு வாங்கிகிட்டு வந்து கொடுப்பான். ஆனா, அதையெல்லாம் எங்க வாயில வைக்கமுடியுது’ என்று பாட்டி சொன்னதை கேட்டதும், அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
‘அப்பப்போ செலவுக்கு பத்து இருபது கொடுப்பான். அதையெல்லாம் அப்பப்போ பேரன், பேத்திகளுக்கு நொறுக்கு தீனி வாங்கிக்க கொடுத்திடுவேன். அதுவும் போக இப்போ தான் கைல ஒரு 250 ரூபா சேர்ந்துச்சி. அதை எடுத்திட்டு இன்னைக்கு கிளம்பிட்டேன். அதிலே இந்த பஸ் கடன்காரனே 170 ரூபாய பிடிங்கிடுறான். மீதிலே தான் சேவு வாங்கணும்’ என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டார் பாட்டி.
தொழுதூர் வந்திருந்தது. பத்தரை மணி. காலை வெயில் ஏறத்தொடங்கி இருந்தது.
பின் படிக்கட்டில் இருந்து
‘பாட்டி, தொழுதூர் வந்திருச்சு. இறங்கு’ என்று கத்தினார் நடத்துனர்.
பாட்டிக்கு வழிவிட்டு எழுந்துகொண்ட அவன் பாட்டியை கையை பிடித்து மெதுவாக கீழே இறக்கிவிட்டான்.
வீட்டுக்காரர் இறந்தபின் வெளியூர் எங்கேயும் போகாததால் சற்று நேரம் திசை தெரியாமல் திணறிய பாட்டி, அங்கே இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று,
‘தம்பி, இங்கே சின்ன படையாச்சி சேவு கடை எங்கே இருக்கு’
‘அந்த மாதிரி ஒரு கடை இங்கே எதுவும் இல்லை பாட்டி. பேரு சரியா தெரியுமா’ என்று டீக்கடை காரர் கேட்டதும் பாட்டிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
டீக்கடை அருகில் அப்போது தன்னுடைய பார வண்டியை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திய அந்த நடுத்தர வயதுக்காரர்,.
‘ரொம்ப வருஷம் முன்னால இருந்ததுப்பா. இப்போ கூட அந்த கனரா பாங்க் பக்கத்துல எஸ்பி பேக்கரின்னு ஒன்னு இருக்கே, அது அந்த சின்ன படையாச்சியோட வம்சா வழிக்கடைன்னு கேள்விப்பட்டு இருக்கேன். பாட்டி, இப்படியே நேராப்போனா கிழக்குல ஒரு பேங்க் வரும். அதுக்கு பக்கத்துல ஒரு பேக்கரி இருக்கும். அதுதான் அந்த கடை’
வந்தது வீணாகி போய்டுமோ என்று கவலையுடன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே பாட்டி நடக்கத்தொடங்கினார்.
பேக்கரி கடைக்காரர் அன்பாக வரவேற்றார்.
‘தம்பி, சின்ன படையாச்சி சேவு கடை இல்லையா இப்போ’ என்று பாட்டி கேட்கவும், ஆச்சர்யமாக பார்த்த அவர்,
‘எங்க தாத்தா தான் பாட்டி சின்ன படையாச்சி. இதே கடை தான் அது. இப்போ பெரிசாக்கி வச்சிட்டோம். என்ன வேணும் உங்களுக்கு’
‘சேவு அதே மாதிரி இருக்குமா தம்பி’
‘எங்க தாத்தா எப்படி சேவு போடுவாரோ அதே மாதிரி தான் இன்னும் போட்டுட்டு இருக்கோம். எங்க கடையோட பேரே அதுக்குதான் பாட்டி பாப்புலர்’ என்று சொல்லிக்கொண்டே கொஞ்சம் சேவை எடுத்து பாட்டி கையில் நீட்டினார்.
அதை வாங்கி வாயில் போட்ட பாட்டி கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட்டதை பார்த்தபோது கடைக்காரருக்கே சற்று வியப்பாக இருந்தது.
‘எவ்வளவு பாட்டி வேணும். சேவு மட்டும் தான் வேணுமா, வேற எதுவும் வேணாமா?’
‘வேற எதுவும் வேணாம் தம்பி. சேவு எவ்வளவு’
‘கால் கிலோ 70 ரூபாய் பாட்டி.’
என்று சொன்னவர்,
‘இப்போ மீதி இருக்கறதே ஒரு முக்கால் கிலோ தான். இன்னைக்கு காலையிலேயே ஏதோ கட்சிக்காரங்க 8 கிலோ சேவு வாங்கிட்டு போய்ட்டாங்க.’
‘கால் கிலோ கொடு தம்பி’
300 கிராமுக்கு மேலே அளந்து போட்டு கொடுத்தார்.
சேவு பாக்கட்டை கையில் வாங்கிக்கொண்ட பாட்டி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்வதற்கும் ஒரு கடலூர் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
ஏறி அமர்ந்து டிக்கெட் வாங்கிக்கொண்டது போக பாட்டி கையில் பத்து ரூபாய் மீதம் இருந்தது
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்த அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு மேல் பேருந்தில் ஏறிக்கொண்டதும் பேருந்து கடலூரை நோக்கி போக தொடங்கியது.
பாட்டி அருகில் இரு மாணவிகளும், முன்னாலும் பின்னாலும் மற்ற மாணவிகளும் அமர்ந்துகொண்டார்கள்.
தேர்வு முடிந்த சந்தோஷம் அவர்கள் பேச்சில் தெரிந்தது.
ஒரு மாணவி தன்னிடம் இருந்த இரண்டு சாக்லேட்களை நான்காக உடைத்து மூன்று பேரிடம் கொடுத்துவிட்டு ஒரு துண்டை வாயில் போட்டுக்கொண்டதை பார்த்த மற்ற மாணவிகள்,
‘எங்களுக்கும் கொடுடி. ரொம்ப பசிக்குது. ‘ என்று கெஞ்சினார்கள்.
‘இல்லடி, என்கிட்டே இருந்தது ரெண்டே ரெண்டு சாக்லேட் தாண்டி. சத்தியமா’ என்று அந்த மாணவி சொல்லவும் அவர்கள் முகத்தில் ஏமாற்றம்.
பசிகளைப்பு அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தன்னிடம் இருந்த சேவு பாக்கெட்டை திறந்த பாட்டி,
‘கண்ணுகளா, பசிக்குதா, பாட்டி கிட்டே கொஞ்சம் சேவு இருக்கு, சாப்புடுறீங்களா’ என்று கேட்டுக்கொண்டே சேவு பாக்கெட்டை நீட்டியது தான் தாமதம், எனக்கு உனக்கு என்று போட்டிபோட்டு கொண்டு ஆளுக்கு கொஞ்சம் வாங்கி சாப்பிட்டதில் சில நொடிகளில் சேவு பாக்கெட்டு காலியானது. ரசித்து சாப்பிடும் அந்த மாணவிகள் முகத்தை பார்க்கும்போது பாட்டிக்கு அவரின் பேத்திகள் முகம் தான் ஞாபகத்துக்கு வந்தது.
பேருந்து கடலூர் வந்து சேர்ந்தது. வெறும் கையுடனே ஏறியது போலவே இறங்கினார் பாட்டி.
பேருந்து நிலைய வாசலில் ஒரே கூட்டம். கரைவேட்டி கட்டியவர்கள் ஆங்காங்கே கூடி இருந்தார்கள். கார்கள் வரிசையாக வந்து நின்றன. ஒரு காரில் இருந்து இறங்கிய அமைச்சர் மகன், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அங்கே இருந்த ஒரு தலைவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, இறங்கும்போது வாழ்த்து கோஷம் களை கட்டியது.
‘இளந்தலைவர் வாழ்க’
இளந்தலைவரின் பிஏ அருகில் இருந்த கண்ணனை அழைத்து,
‘கண்ணா, ஸ்வீட் காரம் எல்லாம் ரெடியா?’
‘எல்லாம் ரெடின்னே. சேவு வரும்போதே ஒரு 8 கிலோ வாங்கிட்டு வந்திட்டோம். இங்கே வந்து அஞ்சு கிலோ ஸ்வீட் மிக்ஸர் வாங்கிருக்கோம். போதும்னு நினைக்கிறேன்’
‘சரி சரி, வயசான ஒரு ஆள். அப்புறம் ரெண்டு மூணு ஸ்கூல் பசங்க, ஊனமுற்றவங்க ரெண்டு பேரை பிடிச்சி நிறுத்தி வை. தலைவர் அவர் கையால் ஸ்வீட் காரம் கொடுத்திட்டு போட்டோ எடுத்துட்டு கிளம்பிடுவார். அதுக்கப்புறம் மீதியை நீங்களே டிஸ்ட்ரிபூட் பண்ணிடுங்க’ என்று சொல்லிவிட்டு இளம்தலைவருக்கு அருகில் சென்று அவர் காதில் கிசுகிசுத்தார்.
பாட்டி மெதுவாக நடந்து பேருந்து நிலைய வாசலுக்கு வரும்போது கண்ணனின் கண்ணில் பட்டுவிட்டாள். போட்டோவுக்கு சரியாக இருக்கும் என்று எண்ணியவன், பாட்டிக்கு அருகில் சென்று பாட்டி கையை பிடித்து அழைத்துப்போய் இளந்தலைவரின் அருகில் நிறுத்தினான்.
இளந்தலைவர் ஒரு செயற்கை பணிவுடன், சிரிப்புடன், சேவு, மிக்ஸர், லட்டு அடங்கிய ஒரு சிறிய பையை பாட்டியிடம் கொடுத்தார். போட்டோக்கள் எடுக்கப்பட்டது.
பையை வாங்கிக்கொண்ட சீனியாத்தாள் பாட்டி வீட்டை நோக்கி மெதுவாக நடக்க தொடங்கினார்.
**********