– அ. சிவகுமார்
“அட… இவ்ளோ அழகா வந்திருக்கு. இன்னும் எத்தனை நாள் ஆகும் முடிக்க…” என்று கேட்டாள் லட்சுமி.
என்ன சொல்வது… எப்படி சொல்லலாமென தடுமாறினேன். அவள் சுப்புலட்சுமி. இந்தப் பெயரை ஏன்தான் வைத்தார்களோ என்று ஒருநாள் புலம்பினாள். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் அண்ணன் மகள்.
நான் அடையாறில் ஒரு நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனராக இருப்பவன். போதுமான சம்பளம். வீட்டிற்க்கு அனுப்பியதுபோக ஓரளவு மீதமும் பண்ணுகிறேன். வேலை முடிந்து நண்பர்கள் இரவு வரை ஊர்சுற்றி செலவழித்து ஜாலியாக இருக்க, எனக்கு எப்போதும் அதில் ஈர்ப்பு இருந்ததில்லை. வேலை… முடிந்து வீடு… புத்தகங்கள்… தவிர ஆர்வமாய் ஓவியம். நிறைவாகிவிடும் மனது.
சில மாதங்களாக அம்மாவின் தொந்தரவு அதிகமாகிவிட்டது. சொந்தத்தில் பெண் இருப்பதாக, புதிதாக பார்த்திருப்பதாக… இன்னமும் பலவகைகளில் என்னைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க தீவிர முயற்சி. என் கனவுகள் வேறுமாதிரியாக இருந்தது. நிஜமாகவே கனவுகள்.
கனவில் வந்து சிரித்துச்செல்லும் அந்த முகம், அந்தப் பார்வை… அவளை எப்படியும் கண்டறிவேன் என்ற நம்பிக்கை… மிகத்தீவிரமாக இருந்தது. அம்மா அனுப்பும் புகைப்படங்களில் அந்த முகத்தைத் தேடி அலுத்து, இப்போதெல்லாம் அந்தக் கவரை பிரிப்பதேயில்லை.
இரு மாதங்களுக்கு முன் வீட்டு ஓனரிடம் வாடகை கொடுக்கும்போது பேசினார்.
“லேடீஸ் ஹாஸ்டல் பாதுகாப்பானதா செந்தில்…?” என்றார்.
“விசாரிச்சு சொல்றேங்க… எங்க ஆஃபிஸ்ல கூட நிறைய லேடீஸ் தங்கியிருக்காங்க… ஈவினிங் சொல்லவா…?” என்றேன்.
“விசாரிக்கவேணாம்.. ஒரு உதவி மட்டும் பண்றியா…”
“கண்டிப்பாங்க… சொல்லுங்க…”
“என் அண்ணன் பொண்ணு கோயமுத்தூர்ல இருந்து வந்திருக்கா… சி.ஏ. முடிச்சு இங்க ஏதோ ஒரு எம்.என்.சி.-ல வேலையாம். அண்ணன் மேல்மாடில தங்க வச்சிக்கிறியான்னு கேட்டார். நீ இருக்கியே. அதனால என் வீட்லயே தங்கிக்கட்டும்ன்னேன். நானும், அம்மாவும் தானே இருக்கோம். எங்களுக்கும் உதவியாவும், சந்தோஷமாவும் இருக்கும்..”
“நல்ல முடிவுதாங்க… “
“அதாம்பா.. ஆனா இது பாரு… தொந்தரவு குடுக்கவேணாம்னு… ஹாஸ்டல்ல தங்கிக்கறேன்னுது. விசாரிச்சேன்… பாதுகாப்பில்லைன்னு சொல்லிடுறேன்… உன்னை வச்சு… சரியா… நீயும் சொல்றியா…” என்று தயக்கமாக கேட்டார். மிக நல்ல மனிதர். இந்த ஓராண்டாக குடியிருந்த வகையில் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர்.
“அதுக்கென்னங்க… சொல்லிடுறேன்”
அன்று சாயந்திரம் கொஞ்சம் வேலை முடிந்து நான் வர இரவாகிவிட்டது. அவர்கள் வீட்டில் எட்டு மணிக்கு படுத்து விடுவார்கள். அதனால் நான் மாடிக்கு சென்றுவிட்டேன்.
காலை ஆறுமணி இருக்கும், கதவை யாரோ தட்டியது கேட்டு பனியனுடன் திறந்தேன். சில சமயம் பேப்பர் போடும் பையன் கதவைத் தட்டுவான். ஓனர் வந்ததில்லை.
திறக்க… ஒரு நிமிடம் மயக்க நிலைக்குச் சென்று திரும்பினேன். அது… அன்றுகூட கனவில் வந்துத் தொந்தரவு செய்த அதே முகம். இவ்வளவு நாள் உலகெல்லாம் தேடி… காணக்கிடைக்காத அந்த முகம்… இப்போது வாசலில். இன்னமும் கனவு முடியவில்லையோ என அப்படியே நிற்க…
“சார்… விசாரிச்சீங்களா… சித்தப்பாக் கேட்க சொன்னார்…” என்றது குரல்.
கவனம் வர… சட்டென்று ஒரு துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டு…
“வந்து… அது கேட்டேங்க… இந்த வாரம் சொல்றேன்… அதாவது.. பாதுகாப்பு… இருங்க யோசிக்கறேன்….” என்று உளற ஆரம்பித்தேன்.
அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
“சார்… ரொம்ப யோசிக்க வேணாம். என்னால இவங்களுக்கு டிஸ்டர்ப் இருக்க வேணாம்னுதான்… ஆனா.. முடிவு மாத்திக்கிட்டேன். எப்படியும் சித்தப்பா உங்ககிட்ட என்ன சொல்லிருப்பார்னு தெரியும். அதையே சொன்னீங்கன்னு சொல்லிடுறேன்…” என்று சிரித்தபடி அவள் படி இறங்கிச் செல்ல…, நான் அப்படியே வாசலில் உட்கார்ந்தவன்… பிரமிப்பு அடங்கி.. லேட்டானது உரைக்க.. அவசர அவசரமாக கிளம்பினேன்.
அதன்பின் தினமும் சீக்கிரமாக வீடு திரும்ப ஆரம்பித்தேன். மாடியின் ஜன்னல் வழியே பார்க்க… கீழே அவர்கள் வாசல் தெரியும். எப்போதாவதுதான் அவளை பார்க்க முடிந்தது. அந்த ஒரு சிறு தரிசனத்துக்காக இரண்டு மூன்று மணி நேரமெல்லாம் ஜன்னல் ஓரமாகவே அமர்ந்திருப்பேன். நேரம் போவதே தெரியாத பொழுதுகள். காத்திருப்பது எவ்வளவு சுகமானது என்பதை அறிந்த கணங்கள்.
ஒரு சிறு துளியில் மின்னல் போல முகம் வந்துப்போக முழு மன நிம்மதியில் எழுவேன். அடுத்த நொடியே மீண்டும் அங்கேயே உட்கார தோணும். ஏதேனும் ஒரு நொடியில் அவள் சட்டென்று நிமிர்ந்து என் முகம் காணுவாள். பயம் பிடித்துக் கொண்டாலும், ஏதோ துணிச்சலில் அப்படியே இருப்பேன். அவளைப் பார்க்காதது போல் சும்மாவேணும். அவள் முகத்தில் மெல்லிய கேலிப் புன்னகை படர்வதாய் உணர்வேன்.
என் மாறுதல்கள் என் வேலையில் எதிரொலித்தன. கொடுக்கப்பட்ட ப்ரொஜெக்ட்களில் அழகுணர்வு மிளிர்ந்தது. எந்த வேலையென்றாலும் சலிப்பில்லாமல், அதே சமயம் அற்புதமாக முடித்துக் கொடுக்க, எனக்கு இந்த இரு மாதங்களில் மிக நல்ல பெயரும் கிடைத்தது.
காதலின் விளைவு. நிஜமாகவே இது காதல்தானா என்ற கேள்வி மனதில் சுழன்றுக்கொண்டே இருந்தது. ஏதோவொரு பெண், அவளை இதன் முன் பார்த்ததேயில்லை. கனவில் பார்த்த ஞாபகம். இதை சொன்னால் சிரிக்கமாட்டார்களாவென மனத்தடை எழுந்தது. இதை எப்படி கடக்கப்போகிறேனென்ற போராட்டம் வழுத்தது, சென்ற மாதம் வரை.
சேர்ந்திருந்த நிறுவன வேலைகளை முடித்து, விரைவாக வந்துவிடுவாள் போல. வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதில் விருப்பமில்லையென பின் ஒருதடவை சொல்லியிருந்தாள். என்னைத் தேடி அந்த விடுமுறையில் வந்தாள்.
“சார்… போரடிக்குது.. எதாவது புக்ஸ் தரீங்களா…”
“வந்து… புக்ஸா… நானா…”
“அன்னிக்கு வந்தப்போ கண்ணில் அலமாரிப்பட்டது சார்.. அதான் கேட்டேன்… பத்திரமா தந்திடுறேன்..”
“இது பெரும்பாலும் இலக்கியவகை மேடம்.. உங்களுக்கு எந்த மாதிரி..”
“பரவால்ல சார்… ரஷ்யன் புக்ஸ் படிச்சிருக்கேன்… தமிழ்-ல சுஜாதா… ஜெயகாந்தன்… எதுவேணா குடுங்க….”
நான் தீவிர இலக்கியங்களை ஒதுக்கி… சிலதை தேட.. பின்புறம் அவள் உள்ளே வந்தது தெரிந்தது. நான் திரும்ப…” நானே எடுத்துக்கவா… இந்த மாதிரி அலமாரில தேடறது ரொம்பப் பிடிக்கும்…” என்றாள்.
பின் அவளே சிலதை எடுத்துக்கொண்டு… சிறிது பேசிவிட்டுச் சென்றாள். போகும்போது…
“லட்சுமின்னு கூப்பிடுங்க சார்… மேடம்னு வயசாக்காதீங்க… நான் உங்களை விட சின்னவதான்…” என்று சிரித்தப்படி சென்றாள்.
அவள் சென்றவுடன், அந்த அலமாரியில் அவள் கை பட்ட இடங்களை… தொட்டுத்தொட்டுப் பார்த்தேன். அவளுக்கு தண்ணீர் கொடுத்த டம்ளரில் மீதம் இருந்த துளிகளை சொட்டு சொட்டாக அருந்தினேன். கண்ணாடியில் என்னைப் பார்க்க எனக்கே கூச்சமாக இருந்தது. பின்னர் வந்த நாட்களில் கொஞ்சம் பேசி பழகி… என் கூச்சம் கொஞ்சம் தளர்ந்தது.
அவளோ மிக இயல்பாக…‘சார்….’ அப்புறம்.. ‘செந்தில் சார்’… இப்போது ‘செந்தில்’ வரை மாறிக்கொண்டாள்.
அதன்பின் அவர்கள் வீட்டில் ஒரு விசேஷ தினத்தில் என்னை சாப்பிட கூப்பிட, கூச்சமும் தயக்கமுமாய் சென்றேன். இலை போட்டு, அவள்தான் எங்களுக்குப் பரிமாறினாள். ஓனருடன் பேசிக்கொண்டே கவனிக்க, அவள் எனக்குத் தனிப்பட்ட முறையில் கவனித்துப் பரிமாறுவதாக தோன்றியது. இனிப்புகளை ஒன்றுக்கு இரண்டாக வைத்தாள். இலையை குறையவே விடவில்லை. நான் போதுமென்று கைகாட்ட, என்னை முறைத்தவள்… நான் கை எடுக்க, இலையை நிரப்பிவிட்டு, மெலிதாக ஓரக்கண்ணால்… ‘நல்லா சாப்டுபா…’ என்பதுபோல் சைகை காட்டினாள். அப்படியே மிதப்பதுபோல் இருந்தது.
அவள் என்னை நெருங்கியது போலவே பட்டது. நான் கூச்ச சுபாவம் காரணமாக பெண்களிடம் அதிகமாக பேசிப்பழகியவன் இல்லை… தவிர, அவள் இயல்பாக நட்புணர்வுடன் பழகுவதை நான்தான் தவறாக எண்ணுகிறேனோவென்ற அச்சமும் இருந்தது. இந்த நெருக்கமே போதுமே… கெடுத்துக்கொள்ள வேண்டாமே எனவும் குழம்பினேன்.
ஜாடையாக அம்மா பெண் பார்ப்பதை ஒரு நாள் சொல்ல, ‘வெரிகுட்’ என்ற அவள் சொன்ன ஒற்றை வார்த்தையும், சிறிது நேரம் பேசுபவள் அன்று விரைவாக எழுந்துச் சென்றதும் குழப்பத்தை அதிகரித்தன.
அதன்பின் இருநாட்கள் கழித்தே அவள் வந்தாள். பொதுவாக பேசிக்கொண்டிருந்தாலும், அவள் பார்வை என் டேபிளில் ஊரில் இருந்து ஏதாவது புதிதாக கவர் வந்ததாவென தேடுவதாக தோன்றியது.
எனது ஓவியங்களை மிக ஆர்வமாக ரசித்தவள், அவளுக்கும் வரையத்தெரியும் என்று என்னைப் பார்த்து வரைந்த படத்தைப் பார்த்து, அடக்கமுடியாமல் இருவரும் சிரித்ததும் நடந்தது.
அவள் சென்றவுடன் புதிதாக ஒன்றை வரைய ஆரம்பித்தேன். எனது கனவில் தோன்றிய அந்த இடம், பெரிய மரம், அதில் இதுதானென்று சொல்லமுடியாத பலவண்ண மலர்கள். தூரத்தே தெரியும் மலைகள். வானத்தின் நீல விசிறல். கீழே பசும்புல் தரை. அதிலும் மலர்கள். சுற்றிலும் பறக்கும் பட்டாம்பூச்சிகள். நடுவே சுடிதாருடன் அமர்ந்த அந்தப் பெண்.
இது சொல்லும்போது… புகைப்பட உருவம் போல தோன்றினாலும், கனவில் வந்த அதே உணர்வுகளை ஓரளவு அதில் கொண்டுவர… அது ஒரு மாயாஜால அனுபவத்தைக் கொடுத்தது. ஒருவாரமாக சிறுக சிறுக தீட்ட, விடுமுறையான இன்று ஓரளவு முடித்திருந்தேன். அதை வந்துப் பார்த்து பிரமித்தவள், அதுவரைய ஆன நாட்களை அறிந்து ஆச்சரியமாக கேட்டாள்.
“அட… இவ்ளோ அழகா வந்திருக்கு. இன்னும் எத்தனை நாள் ஆகும் முடிக்க…”
“முடிஞ்சது சுப்பு… இன்னும் கொஞ்சம்தான்….”
“அய்யோ செந்தில்… லட்சுமின்னு கூப்பிடு… சுப்பு.. சுப்பு… ன்னு எங்க தாத்தா மாதிரி….”
“கூப்பிட நல்லாருக்குப்பா… சரிவிடு… முறைக்காதே….. படம் நல்லாருக்கா…”
“செம…. வரைவ தெரியும்… ஆனா இந்த அளவு… ப்பா…. ஏதோ மாய உலகில் நுழைஞ்ச மாதிரி….”
“ம்ம்… மாயாஜாலம்தான்.. ஏன்னா… இது கனவில் வந்த இடம்… அதான்.”
“ஓ.. சரி சரி… இதென்ன இந்தப் பெண்… கொஞ்சம் ஹிஸ்டாரிக்கலா டிரஸ் கொடுத்திருக்கலாமில்ல…. கலக்கலா இருக்கும்…”
“கனவில் இந்த டிரஸ்தான் போட்டிருந்தா… அதான்…”
“அட… சரிதான் … கனவு தேவதையா… இது உங்க தேடலா… கிடைக்க வாழ்த்துக்கள்”
சற்று கூச்சமும்… பயமுமாய் என் முகம் சிவந்தது.
“அட …பாரேன், சாருக்கு கூச்சம்கூட வருது… முகம் எப்ப வரைவ…. பாக்கணும்போல இருக்கு…”
“மீதிலாம் வரைஞ்சிடுவேன். அந்த முகம் லேசா… புகைபோலத்தான் தெரியுது… மனசில் நிறுத்த… சிரிச்சு மூடிக்குது..”
“ம்ம்… ஹெவியாயிடுச்சு… லக்கி பெர்சன் போல… நல்லா தூங்கி நாளையாவது வரைபா…”
“வந்து… நீ….”
“ம்.. என்ன……… அட சொல்லுப்பா…”
“உன் ஃபோட்டோ தரியா…. முகம் வரைய….”
இதைச் சொல்ல என் முகம் வெளுத்துவிட்டது. உடல் நடுக்கம் பிடித்தது. அவளை நேரில் பார்க்க, அவள் முகம் சின்னதாக மாறியது. என்னை அவள் பார்த்தப் பார்வையில் தெரிந்தது….. வெறுப்பா, ஏமாற்றமா… நீயுமாவென்ற உணர்வா தெரியவில்லை. சிலநிமிடம் அங்கே நிலவிய அமைதி மிகக்கொடூர உணர்வை தோற்றுவித்தது. காலத்தில் பயணம் செய்து… சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற வேட்கை எழுந்தது.
நான் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவள் வேகமாக எழுந்துப் படியில் இறங்கிச் சென்றாள். அவளின் கால்தடம் என் மனதில் திடும்திடுமென்று அதிர்ந்தது. நட்புணர்வோடு பழகிய ஒரு பெண்ணை தவறாக எண்ணிய குற்ற உணர்வு என்னை ஆக்ரமித்தது.
மெதுவாக ஜன்னல் வழியே பார்க்க… அவள் கீழிருந்து இங்கே முறைத்துப்பார்ப்பதை அறிந்து, அப்படியே கீழே மண்டியிட்டு அமர்ந்தேன். மனம் முழுதும் என்னை நானே வெறுப்பதை அறிந்தேன்.
அந்த ஓவியம் பார்க்க, அது மாயாஜால மர்ம உலகில் என்னை இழுத்து… அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆங்காரமான முகம் தோன்றி மறைந்து, அதில் சுப்புவின் அழகிய முகம் வந்து… கண்களில் நீருடன் பார்ப்பதாய் தோன்றியது. அப்படியே நெடுநேரம் இருந்து தூங்கிப்போனேன்.
கனவில் ஓனர் வந்து என்னை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினார். அலுவலக நண்பர்கள் சூழ்ந்து நின்று சிரித்தனர். கதவில் நான் மோதிய சத்தம் படீரென்று கேட்டது. சட்டென்று முழிப்புவர, விடிந்திருந்தது.
கதவை ஒரு கை மெதுவாக தட்டி திறப்பது தெரிந்தது.
எழ முயல முடியாமல் நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் கை ஒரு கவரை தூக்கி என்மேல் எறிந்துவிட்டு ஓடியது. வேகமாக எழுந்து ஜன்னலில் பார்க்க, சுப்புலட்சுமி தாவித்தாவி படிகளில் இறங்கி ஓடுவது தெரிந்தது. நான் அந்தக் கவரை பிரிக்க, அதில் சுப்புவின் அழகிய புகைப்படம் இருந்தது.
– கதைப் படிக்கலாம் – 116
இதையும் படியுங்கள் : பசி