– நிரஞ்சன் குமார்

வவ்வால்களும், ஆந்தைகளும் முழித்திருக்கும் நேரத்தில் வேலைபார்க்கும் லட்சகணக்கான ஐ.டி. கம்பெனி ஊழியர்களில் ஒருவன் பிரமோத். டெல்லியில் கற்குவியல்களுக்கு மத்தியில், 10க்கு 10 அறையில் தான் ஜீவணம். புது ஊர் வந்து இரண்டு மாதம் தான் ஆகியிருந்தது.
நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன், திடீரென வெடித்த பட்டாசு சத்தம் கேட்டு துள்ளி எழுந்தான். என்ன ஊருடா இது, நேரம் காலம் தெரியாம தீபாவளி கொண்டாடிட்டு இருக்கானுவ என அழுத்துக்கொண்டே, படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தான். இவன் வீடு முதல் தளத்தில் இருந்தது.
கீழே தெருவில் பக்கத்துவீட்டு மொட்ட மாமா, பட்டாசு தூக்கிப் போட்டு வெடித்துக் கொண்டிருந்தார்.
இவனை நிமிர்ந்து பார்த்து அவர் சிரிக்க, ”உங்களுக்கு எல்லாம் வெவஸ்த்தையே இல்லையாடா” என யாருக்கும் தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் சத்தமாக கூறிவிட்டு, பதிலுக்கு கையாட்டிக் கொண்டே சிரித்தான்.
தலையில் வைத்திருந்த எண்ணெய் சூரியனுக்கே கண் கூசும் அளவுக்கு பளபளக்க, “பந்தர் ஆயா பந்தர் ஆயா” என்று அருகிலிருந்த மரத்தை கைகாட்டி, மொட்ட மாமா இவனிடம் சொன்னார்.
பத்து பதினைந்து குரங்குகள் உட்கார்ந்திருக்க, பட்டாசு சத்தத்தில் மிரண்டு அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாவி ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பசங்க கல் எடுத்து அடித்து குதுகளித்துக் கொண்டிருந்தனர். எது குரங்கு கூட்டம் என்றே வித்தியாசம் தெரியவில்லை.
பக்கத்து பால்கனியில் கைகளை கூப்பிய நிலையில் நின்றிருந்த அந்த பாட்டியம்மாவை பார்த்து இவன் சிரிக்க, பதிலுக்கு அந்தம்மாவும் சிரித்து, “வோ அனுமன் ஜி” என்று கைகளை வணங்கியபடி சொன்னாள்.
அப்பறம் ஏம்மா பட்டாசு போட்டு வெரட்டுறீங்க என இவன் கொஞ்சம் சத்தமாவே கேட்க, ஒன்றும் புரியாததால் அந்தம்மா மீண்டும் சிரித்தது.
கொஞ்சம் நேரம் நின்று வேடிக்கைப் பார்த்தான்… சளிப்பாக இருந்தது. வீட்டுக்குள் சென்று காபி போட்டு கையில் இரண்டு ரொட்டி துண்டுகளுடன் வெளியே மீண்டும் வேடிக்கைப் பார்க்க வந்தான். மொட்டை மாமாவும் காணவில்லை, குரங்குகளும் காணவில்லை.
காபியை ஒரு சிப் உறிஞ்சிவிட்டு மீண்டும் அறைக்கு திரும்ப, வழியில் குரங்கு ஒன்று உட்கார்ந்திருக்க… பயத்தில் உடல் வெல வெலத்தது பிரமோத்துக்கு. அட்ரினில் அதிகம் சுரந்தது.
சிறிது நேரம் ஆகியும் குரங்கு அப்படியே உட்கார்ந்து இவனையே பார்த்துக்கொண்டிருந்தது. பொதுவாக குரங்குகள் கையில் இருப்பதை பிடுங்கிக்கொண்டு ஓடிவிடும். ஆனால் இது சமத்துப் பிள்ளையாக இருந்தது. மனிதனிடம் இருந்து அடுத்தவர் பொருளை அபகரிக்கும் வித்ததையை, இந்தக் குரங்கு இன்னும் கற்றுக்கொள்ளவில்லை போலும்.
கைகள் நடுங்கியபடியே பிரமோத் பால்கனி சுவர் மீது கையில் இருந்த பிரட் துண்டை வைக்க, ஒரே தாவில் எடுத்துக்கொண்டது குரங்கு. இரண்டு ஜான் உயரத்தில் புசு புசு நாய் போல, துருதுரு கண்களுடன் இருந்த அதைப் பார்க்க பார்க்க பிரமோத்துக்கு பயம் கொஞ்சம் விலகியது. நன்றாக குத்துகால் போட்டு பொறுமையாக பிரட்டை சாப்பிட்டு முடித்தது. இவனை பார்த்து கை இரண்டையும் புருவத்தின் மேல் வைத்து, பல்லை நன்றாக காட்டி இளித்தது. அடேயப்பா இந்த ஊருல குரங்குக்கு மட்டும் தான் மரியாதை தெரியும் போல என முனுமுனுத்துக் கொண்டான்.
……..….
நைட் ஷிப்ட் முடித்துவிட்டு தூங்குவதற்கு முன்பு, சூரியனுக்கு குட் நைட் சொல்ல காலையில் வழக்கமான காபியுடன் வெளியே வந்தான். அதே குரங்கு அதே இளிப்புடன் இவன் நேற்று உட்கார்ந்திருந்த அதே இடத்தில் உட்கார்ந்திருந்தது. பிரமோத் கண்டுகொள்ளாமல் காபியை உறிஞ்சினான். குரங்கு தலையை உடலுடன் மேலும் கீழும் ஆட்டி, மீண்டும் அதே மாதிரி இளித்தது.
இவனுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை, சிரித்துக்கொண்டே உள்ளே போய் பிரட் பாக்கெட்டை எடுத்து வந்தான். இப்போது இன்னுமொரு குரங்கு முதலில் வந்த குரங்குடன் உட்கார்ந்திருந்தது. தம்பியாக இருக்கலாம் என இவனே நினைத்துக்கொண்டான். சில பிரெட் துண்டுகளை எடுத்துப்போட ஓடி வந்து எடுத்துக்கொண்டது இரண்டு குரங்குகளும். கொஞ்ச நேரத்திலேயே இன்னொரு குரங்கும் வர, தங்கச்சியாக இருக்கும் என நினைத்து இன்னும் சில பிரெட் துண்டுகளை போட்டான். திடீரென “டமால்” ”டமால்” என பட்டாசு சத்தம் கேட்கத் தெரித்து ஓடின குரங்குகள்.
சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், ராத்திரி மதுவின் தலைவலியாலும் லேட்டாக தான் எழுந்தான் பிரமோத். காபி கப்பை கையில் எடுக்கும்போதே நிச்சயம் வெளியே குரங்கு இருக்கும் என நினைத்து, பாதி இருந்த பிரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். சில வாழை பழங்களையும் எடுத்துக்கொண்டான்.
வந்தவன் அதிர்ச்சியில் ஒரு நொடி உறைந்துப் போனான். வெளியே எப்படியும் 50க்கு குறையாமல் இருந்திருக்கும் குரங்குகள். ஷூ ஸ்டாண்ட், துணிகாயப்போடும் கம்பி, வாஸ்பேஷன் என அவன் வீட்டு பால்கனி முழுவதும், வாணர பட்டாளம் தான் நிறைந்திருந்தது.
சுதாரித்துக்கொண்ட அவன் சிரித்துக்கொண்டே நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல், சில பிரெட் துண்டுகளை வீசினான். அவ்வளவு தான். அடுத்த சில நொடியில் ராமாயண கிஷ்கிந்தா காண்டம் அரங்கேறியது அங்கு. குரங்குகள் தாவிக் குதிக்க, கார்களில் இருந்த ஆட்டோமேட்டிக் சென்சார்கள் பல குரல்களில் கத்தியது. பிரமோத்துக்கு ஆர்வம் தாங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு குழந்தை மனநிலைக்கு வந்துவிட்டான்.
கையில் மிச்சமிருந்த வாழை பழங்களையும் பால்கனிக்கு வெளியே வீசினான். நிலைமை இன்னும் மோசமாகியது. தரிகெட்டு ஓடிய குரங்குகளால், சில பைக்குகள் கீழே சரிந்தது, மொட்டை மாமா காற்றில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தார். மீண்டும் தீபாவளி சத்தம். ஆனால் இந்த முறை நிஜ தீபாவளி போலவே. அந்த சிறிய தெரு கொஞ்ச நேரத்தில் அல்லோல கொல்லோலப்பட்டது.
ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குரங்குகளை விரட்டிய பின்,
மனித கூட்டம் பிரமோத் வீட்டு முன்பு… அந்த குரங்குகளே பரவாயில்லை என்பது போல ஒரே கூச்சல். அதுவும் அனுமன் ஜி என பவ்வியமாக கும்பிட்ட அந்த பக்கத்துவீட்டு பாட்டியம்மா தான், காற்றில் கோலம் போட்டப்படி கைகளை ஆட்டியப்படி ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்தாள்.
உள்ளே ஃபோன் அடிக்க பிரமோத் எடுத்துப் பேசினான். ஹவுஸ் ஓனர் தான் லைனில் இருந்தது. நடந்தது என்னவென வாசகர்களுக்கு புரிந்திருக்கும். நாளைக்கு சாயங்காலம் காலி பண்ணிடுறேன் என சொல்லி ஃபோனை வைத்தான். வெளியே மனித குரங்குகள் இன்னும் கத்திக்கொண்டு தான் இருந்தது.
வேறு பகுதியில் தங்கியிருந்த தன் அலுவலக நண்பர், தன் வீட்டில் தற்காலிகமாக தங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்த்தால், கொஞ்சம் ரிலாக்சாகவே இன்று இரவு தூங்கினான்.
சுத்தமான காற்று கூட இல்லாத ஊரில், சேவல்களா இருக்க போகிறது. ஆனால் ”கொக்கொரக்கோ” என அலறிய செல்போன் அலாரத்தை அணைத்துவிட்டும் நண்பன் வீட்டிற்குப் புறப்பட தயாரானான். பெரிதாக பொருட்கள் இல்லை. சில பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வர, முதல் நாள் வந்தக் குரங்கு மட்டும் தனியாக வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது.
அதன் சிங்கப் பல்லில் ஒன்று பாதியாக உடைந்திருக்கும். அதைக் கொண்டு சட்டென அடையாளம் கண்டு கொண்டான் பிரமோத். பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்து அதன் தம்பி, தங்கை யாரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். பெருமூச்சுவிட்டான்.
உனக்குப் பிரெட் போட்டதுக்கு என் பிரேக்கையே புடுங்கிட்டியே… நியாயமாடா உனக்கு இது, என குரங்கைப் பார்த்து பிரமோத் கேட்க… கை இரண்டையும் புருவத்தில் வைத்து, கண்ணை மேலும் கீழு இறக்கி பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டது குரங்கு.
பிரமோத் சத்தமாக சிரித்தான். சரி சரி நான் கிளம்புறேன், உன் தம்பி தங்கச்சி எல்லாத்தையும் கேட்டதா சொல்லு என குரங்கிடம் குசலம் விசாரித்துவிட்டு, ஒரு பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, படியில் இறங்க குரங்கு தாவி வந்து அவன் தோளில் உட்கார்ந்துக் கொண்டு….. ஈஈஈஈ என பல்லிளித்தது.
ஒரு நொடி பதறினாலும் பிறகு சுதாரித்துக்கொண்டு, “டேய் கீழ இறங்குடா… இந்த ஊர்ல எனக்கே வீடு தரமாட்டானுங்க, அசைவம் சாப்பிடக்கூடாது, பொம்பள பிள்ளைங்கள கூட்டிட்டு வரகூடாது, சிகரெட் வாசன வரக்கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிசன்… இதுல நீயுமா கீழ இறங்கு முதல்ல” என்றான்.
குரங்கு எதையும் கண்டுகொள்வதாக இல்லை. இவன் தலையில் இருந்த முடியை கொத்தாக பிடித்து முகர்ந்து பார்த்துக்கொண்டும், போட்டிருந்த கண்ணாடியை திருகிதிருகி பார்த்துக்கொண்டும் விளையாடிக்கொண்டிருந்தது.
பிரமோத் தன் நண்பனுக்கு அழைத்தான். பிரதர். ஹியர் ஸ்மால் பிராப்லம், ஒன்னும் பெருசு இல்ல, சின்ன டவுட்டு தான்? உங்க அப்பார்ட்மெண்ட்ல அனுமன் ஜி அலோவ்டா என்றான் தயங்கியப்படி…
வாட் அனுமன் ஜி? எனக்கு ஒன்னும் புரியல பிரமோத் என்றான் நண்பன் எதிர்முனையில்…
எனக்கும் தான் என்றான் பிரமோத்…
– கதைப் படிக்கலாம் – 131
இதையும் படியுங்கள் : காணாமல் போன காதல்




