– வாய்மைநாதன்
ஊரிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்திட்ட மண்சாலை, அரசு நடுநிலைப் பள்ளியில் போய் முடிந்தது. அவ்வழியே சாரை சாரையாக புற்று நோக்கி ஊர்ந்த எறும்புகள் மிதிபடாதபடி, பார்த்து பார்த்து நடந்து வந்தான் அதியன். வழிநெடுக ஆங்காங்கே இருந்த புற்றின் வாய்முகட்டில் முந்தைய நாள் எடுத்து வைத்த கைப்பிடி அளவிலான ‘சத்துணவை’ கொஞ்சம் கொஞ்சமாக இட்டு வந்தான்.
“டேய்ய்ய்ய்ய்.. குதியா…”
என்றபடி சைக்கிள் பெல்லை பலமுறை அடித்த மணிகண்டன், அதியன் திடுக்கிட்டு விழும்படி அருகில் மிதிவண்டியை கொண்டுவந்தவாறே பயமுறுத்தினான். அச்சமயம் கைகளில் வைத்திருந்த சோற்றில் சில பருக்கைகள், புற்றிலிருந்து சற்று தள்ளி புற்களின் மீது சிந்தியது. கைகால் வெலவெலத்துப் போன அதியன் திரும்பிப் பார்ப்பதற்குள், மணிகண்டனின் மிதிவண்டி அடுத்தடுத்த இருபது மரங்களை வேகமாய்த் தாண்டியிருந்தது.
பொடிநடையாக இரண்டரை மைல் தூரம் நடந்தே பள்ளி சேர்ந்தவனுக்கு அன்றைக்கும் ‘ப்ரேயரில்’ கலந்துக்கொள்ள நேரம் வாய்க்கவில்லை. கொஞ்ச நேரம் பள்ளி வாயிலின் கம்பிகளைத் தடவிக் கொண்டிருந்தவன் ‘அந்த’ மணித்துளிக்காக தன் காதினை கதவோடு சாய்த்து வைத்திருந்தான்.
“ஸ்கூல் அட்டேன்ஷன்.. ஸ்டேண்டட்டீஸ்… அட்டேன்ஷன்.. தேசிய கீதம்..”
என்ற வாய்மொழியை ‘மைக்’ வழி கேட்டவுடனேயே, அவன் கையிலிருந்த ‘மஞ்சப்பை’ தரையோடு பொத்தென அனிச்சையாய் விழுந்திருந்தது.! உடல்களை முடிந்த மட்டும் முறுக்கேற்றிக் கொண்டே வெறித்தபடி நின்றவனின் கைகால் ரோமங்களும் குத்திட்டு நிற்கத் தொடங்கின.! உள்ளங்கைகள் இரண்டும் மடிந்து தொடைப்பகுதியை ஒட்டியபடி இருந்தன.. தேசிய கீதத்தின் இறுதி வரிகளான “ஜெயஹே.. ஜெயஹே.. ஜெயஹே..” என்றபோது அதியனின் ‘வாய்ஸ்’ எட்டுக்கட்டை மீறி, உச்சக்கட்டம் தொட்டிருந்தது. அதன் பின்புதான் மெல்லமாக உடல் தளர்ந்து கீழே விழுந்த புத்தகப்பையைத் தன் கைச் சேர்த்தான்.
பள்ளியின் கதவுகள் திறந்த பின்னால், குவிந்திருந்த ‘க்யூ’வில் மற்றவரோடு ஒருவனாய் அசைந்தாடியபடியே பிரம்படிக்கு வரிசையில் காத்திருந்தான். அவனது தருணம் வாய்த்தபோது ‘சகாயம்’ ஆசிரியர் பிரம்பைத் தன் முதுகுப்புறம் மறைத்து, “நீ போடா தங்கம்” எனப் புதிதாய் சகாயம்செய்து அனுப்பி வைத்தார். அன்று அவர் எந்த ‘மூடில்’ இருந்தாரோ? அதியனை அடிக்கவில்லை.! என்றுமில்லாததைப் போல அன்றைய நாள் அவனுக்கு மிகவும் சாதகமாய் அமைந்திருந்தது.!
“லேட்” – பள்ளிக்கு மட்டும் பழக்கமல்ல.. வகுப்பறைக்கும் சேர்த்துத்தான்.. பள்ளிக் கொடிக் கம்பத்திற்கு நேரே அமைந்திருந்த புது பில்டிங்கில் தான் அதியனின் எட்டாம் வகுப்பிற்கான வகுப்பறை இருந்தது; நடந்தால் இரண்டு நிமிடம் கூட ஆகாது.
ஆனால், ‘பசுமைப்படை உறுப்பினன்’ என்ற அடிப்படையைக் கொண்டு, அங்கிருந்த மரங்களுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றி, தன் தார்மீக கடமையை தனியாளாய் முடித்துவிட்டு வகுப்பறை செல்லும்போது ‘முதல் பீரியட்’ முடியும் தருவாயை எட்டியிருக்கும்.. ‘பீட்டி’ வாத்தியார் அவனின் செயலைப் பெரிதும் ஊக்குவித்திருந்ததால், மற்ற ஆசிரியர்கள் அதனையும் அவனையும் குற்றமாய் நினைத்துக் கொள்ளவில்லை.
“மே ஐ கம்மீன்ன் சார்ர்ர்ர்..”
என்று இழுத்தபடி வகுப்பிற்குள் புக எத்தனித்திருந்தான் அதியன்.
“ம்ம்ம்.. வாங்க தொரைராசா.. போய் வழக்கம்போல வவுறு வலிக்குது, தலை வலிக்குதுன்னு ஏதாவதொரு காரணத்தைச் சொல்லிட்டு தூங்கிடுங்க ராசா.. நல்லா வெளங்கிடலாம்..”
அறிவியல் ஆசிரியரின் அக்கினி பேச்சு அனலின்றி அவனைச் சுட்டெரித்தது.. ‘கொல்லென’ சிரித்த மாணவர்கள் மத்தியில் தலையை வெறுமனே குனித்துக் கொண்டு அமைதியாய் அவன் இருக்கைக்குச் சென்றமர்ந்தான்.
“குதியா..!”
அதிசயமாய் முதல் பெஞ்சில் அமர்கிற மணிகண்டன் கடைசி பெஞ்சில் அவன் இருக்கையின் அருகே அமர்ந்திருந்தான்; சிரிப்பை நிறுத்தாமல் மற்றவர்கள் சிரித்திருந்த நொடிப் பொழுதிலும் மணிகண்டன் மட்டும் அதியனை மகிழ்வோடு வரவேற்றிருந்ததாகத் தான் பட்டது; அது அவனுக்கு புதுமையாகவும் இருந்தது!
“மணிகண்டா.. எங்கூடலாம் சேரக் கூடாதுன்னு உன் அப்பா அன்னிக்கு உன்ன திட்டுனாரேடா.. இப்போ என் கூடவே உட்காருற..? அதியனுக்கு பழைய நினைவுகள் உள்ளூற ஓடியிருந்தது. மணிகண்டனின் தந்தை மணிகண்டனிடம், “இன்ன இன்ன சாதியரோடு தான் பழக வேண்டுமென்று” அழுத்தமாய்க் கூறி, அதியன் முன்னமே கோபக்கனலோடு வன்மத்தையும், நஞ்சையும் வீசியிருந்த சுடும் நினைவுகள் அதியனின் கண்களுள் அப்படியே நிழலாடியது.
“அதெல்லாம் விடுடா.. எங்கப்பா ஒரு பைத்தியம்..” என்று ‘கூலாக’ நளினத்தோடு சிரித்தபடியே ஆச்சரியம் மாறாமல் அருகமர்ந்த அதியனின் தோளில் கையிட்டான்.
“டேய்ய்ய்.. அங்கென்னடா புது பழக்கம்.. கையை ஒடிச்சுட்ருவேன்..” என ஆசிரியர் சொன்ன மறுநிமிடமே, இருவரும் கைகளை வாய்குவித்து பெஞ்சுக்குள் தலையை இட்டு மெலிதாய்ச் சிரித்துக் கொண்டனர். அடுத்தப் பாடவேளைக்கான கணக்கு ஆசிரியர் ஜன்னலோரம் நிற்பதை உணர்ந்ததும், வகுப்பைக் கவனிக்க இருவரும் தங்களை திருத்தி நிலைப்படுத்திக் கொண்டார்கள். அடுத்த ‘பீரியட்’ தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அகமகிழ்வோடிருந்த அதியனுக்கு தூக்கம் சற்றே தலைதூக்கியது. முன்னாளிருந்த சக மாணவனை மறைத்தபடி பெஞ்சுக்கு முட்டு கொடுத்து ‘மரண தூக்கம்’ தூங்கியவனை, மணிகண்டன் மாட்டிக் கொடுக்கவில்லை.
பறந்து வந்த ‘கால் சாக்பீஸ்’ அவன் தூக்கத்தைக் கலைக்கப் போதுமாயிருந்தது. ‘சலவாய்’ வழிந்ததை துடைத்தப்படியே முடியாமல் எழுந்து நின்றவனை ‘பசி’ கொல்லாமல் கொன்றிருந்தது.
“சார்ர்ர்ர்ர்…” என சத்தமே இல்லாமல் பேசியவனின் கை, பட்டனில்லா சட்டையைக் கடந்து வயிற்றை அழுத்திப் பிடித்திருந்தது.
“தெனமும் உங்கிட்ட இதே ரோதனையாப் போச்சு அதியா.. தோப்புக்கரணம் போட வச்சேன், பெஞ்சு மேல நிக்க வச்சேன், வெளியிலயும் நிக்க வச்சுட்டேன்.. இன்னும் உன்னை என்னத்தான் பண்றது.?” கணக்கு வாத்தியாரின் ‘கனீரென்ற’ சுளீர் பேச்சு நிச்சயம் அடுத்த வகுப்புகளையும் கடந்திருக்கும்.
“இல்ல சார்ர்..”
தயங்கியவாறே மணிகண்டனை ஏறெடுத்துப் பார்த்தவன், “இனிமே தூங்க மாட்டேன் சார்ர்..” என பேச்சுக்குப் பொய்யுரைத்தான்.
“என்னதான்டா ஒம்பிரச்சனை.? கிளாஸ்ஸ கவனிக்காம எப்பிடித்தான் பாஸ் ஆவியோ.? என் தலையெழுத்து.. வருஷத்துக்கு ஒன்னுவந்து இப்பிடி சேருது பாரு.. உட்காரு..” என சலித்துக்கொண்டார். இருந்த போதும் அவன் உட்காராமல் நெளிந்தபடி நின்றிருந்தான்..
“என்ன.. அதான் ஒட்காரச் சொல்டேனே.. அப்பறமென்ன.?” மீண்டும் கடுப்புடன் கடிந்தார்.
“இல்ல சார்ர்ர்.. பசிக்குது.. தூங்குனா தான் பசி போகும் சார்ர்..” என மனதில் பட்டதை சொல்லியே தீர வேண்டுமென நடுங்கி நடுங்கி பதிலுரைத்தான்.
“என்னடா ஒலருற..?”
“ஆமா சார்.. எங்க வீட்டுல ரொம்ப நாளா சோறில்ல சார்.. மத்தியானம் நம்ம ஸ்கூல்ல போடுற ஒரு வேளை சாப்பாடுதான் எனக்கு சோறு.. என் அம்மாக்கு அதுவும் கெடையாது சார்ர்ர்..” என்றபடியே அழுதவன், சற்று மூச்சை உள்வாங்கி விட்டு தொடர்ந்தான்.
“என் அம்மா பலமுறை சொல்லிருக்காங்க சார்ர்ர்.. நல்ல மனசுள்ளவங்க பசிக்கும் போது தூங்கிகிட்டே கனவு கண்டா, தேவதைங்க கனவுல வந்து சோறு ஊட்டுவாங்கலாம்.. அவங்களுக்கும் அப்பிடித்தான் வவுறு நொம்புதாம்…”
“நானும் எறும்புக்கெல்லாம் தெனமும் சோறு வைக்கிறேன் சார்ர்ர்.. தெனமும் பசியோடத்தான் தூங்கிப் பார்க்குறேன்.. அம்மாவுக்கு மட்டும் வர்ற தேவதை, எனக்கு இன்னமும் வரவேயில்ல சார்ர்ர்..” என்ற போது, கணக்கு ஆசிரியரோடு சேர்த்து அதியனையே கண்கொட்டாமல் பார்த்திருந்த முழு வகுப்பறையும் பெரிதாய் கலங்கியிருந்தது.!
மணிகண்டன் சப்தமிடாமல் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டு டப்பாவை அவன் பக்கம் நகர்த்தியபோது, அதியனுக்கான தேவதை ‘ஆண்’ உருவில் மாறியிருந்தது.!
-முற்றும்-
– கதைப் படிக்கலாம் – 67
இதையும் படியுங்கள் : குயிலாண் கூடு