– அ.ஸ்ரீதரன்

அது ஒரு சிறிய கிராமம். கோவில் மந்தையை மையமாக கொண்டு வசிக்கும் ஒரு ஐம்பது குடும்பங்களின் பூர்வீகம். விடியும் முன் எழுந்து விடுவதும், இருட்டும் முன் அடங்கி விடுவதுமாய் அந்தக் கிராமம் சுழன்று கொண்டிருந்தது. சகுனங்களும், சமிக்ஜைகளும் அவர்களின் அன்றாட காரண காரியங்களில் முக்கிய அங்கமாய் திகழ்ந்தன. குடிசையை ஓடாக்கி, ஓட்டு வீட்டை சிமென்ட் வீடாக்கி, தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் லட்சியம் அந்தக் கிராமத்து ஆண்களை வெளிநாட்டை நோக்கி நகர்த்திக் கொண்டே இருந்தது. ஆம், குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டை மோதிவிட்டு வந்தவராகத்தான் இருப்பர்.
அந்த வெளிநாட்டு மோகத்தில் இருந்து மாறுபட்ட எண்ணம் கொண்டவர்களில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகமும் ஒருவன். தன் தந்தை ஆரம்பித்த சிறிய மளிகை கடையை அவரது மறைவிற்குப் பின், பக்கத்து கிராமத்து கடைகளுக்கெல்லாம் சரக்குகள் அனுப்பி வைக்கும் அளவுக்கு வளர்த்து நடத்தி வருகிறான். அந்த ஊரிலேயே முதன் முதலில் தன் மகனை CBSE syllabus-ல் சேர்த்து விட்ட பெருமை சண்முகத்துக்கே உண்டு.
அவனது குடும்பத்திற்கே தனி அடையாளம் உண்டு. மளிகை கடை சண்முகம் என்ற முகவரியை விட, செங்காயி இல்லம் என்பதே அந்த ஊரில் அவர்கள் வீட்டின் முகவரிக்கு எளிய அடையாளமாய் இருந்தது. ஆம், செங்காயி என்பவள் சண்முகத்தின் தாய். சிறிது காலத்திற்கு முன் இரு காதுகளும் சரியாக கேட்காமல் போய், அவை தானே சரியான சங்கதி செங்காயிக்கு மட்டுமே தெரியும்.
ஆம், ஊரை பொறுத்த வரையில் அவள் செவிடு அவ்வளவுதான். தனக்கு காது கேட்காது என்று தன்னைப் பற்றி தனக்கு நேராகவே கேலி செய்வோரை, சரியான சந்தர்ப்பம் பார்த்து பலி வாங்க அந்த யுக்தி அவளுக்கு பயன்பட்டது. அவளும் தனக்கு காது கேட்காதது போலவே வீட்டிலும் வெளியிலும் தன்னை அடையாள படுத்திக்கொண்டாள். இவளுக்குத்தான் காது கேட்காதே என்று தன் குடும்ப ரகசியங்களை சிலர் பேச, இவளோ அதை இட்டுக்கட்டி இட்டுக்கட்டி பரப்ப, இந்த புறணி பேசும் பெரும் கிழவியால் அவர்கள் குடும்பத்தில் பெரும் சண்டை வந்து பிரியும் அளவுக்கு பல சம்பவங்களையும் அறங்கேற்றி இருக்கிறாள்.
ஆனால் இவளைப் பற்றி எத்தனை பேர் குறைக் கூறினாலும், அதை சற்றும் ஏற்றுக்கொள்ளாமல் மாமியாருக்கு அனுதாபம் பார்க்கும் விசித்திர மருமகளாய் வந்து வாய்த்திருப்பவள் தான் லட்சுமி. பாவம் வெகுளி, இல்லத்தரசி யார் வந்தாலும் சாப்பிட வைத்து அனுப்பும் பக்குவக்காரி. காலை முதல் இரவு வரை பம்பரமாய் சுழன்று விடுவாள் மனுசி. அரவிந்த் ஒரே மகன்… அவளைப் போலவே அனைத்திலும். Montessori-ஐ முடித்து விட்டு, இப்பொழுதுதான் CBSE-க்குள் நுழைந்திருக்கிறான்.
அந்தக் கிராமத்தில் காலைப் பொழுதுக்கென்று ஒரு ரம்மியம் இருக்கும். இன்னமும் வாசலில் சாணி தெளித்து கோலம் போடும் பெண்கள், இந்தக் காலத்து இளவட்டங்கள் தூக்க முடியாத ஏர் கலப்பையை, தோள்பட்டையில் துண்டை போல் போட்டுக்கொண்டு போகும் பெருசுகள், கூரையில் வரிசையாய் அமர்ந்திருக்கும் கோழிகள், மரத்திற்கு மரம் கீச்சிடும் பறவைகள், மூன்று ஊருக்குக் கேட்கும் மைக் செட். இது எல்லாம் அவர்களின் அன்றாட காலைப்பொழுதின் அங்கம். அதே போல் செங்காயிக்கும் அவளது அன்றாட காலைப் பொழுதின் அங்கமாய் போய்விட்டது ஒரு விசயம்.
ஆம் அவளது அறையில் அவள் படுத்திருக்கும் திசையில் உள்ள சுவற்றில் ஒரு செங்கல் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். அதன் வழியே வரும் சூரிய ஒளிதான் அவளுக்கு அத்தனை விடியலையும் தரும். எப்போதும் போலவே இன்றும் அந்த விடியல் அவளுக்கு அப்படியே இருந்தது. சூரிய ஒளி முகத்தில் பட்டதும் விழித்தவள், “ஏன்டா சண்முகம் இந்த ஓட்டய சத்த அடச்சாதான் என்னடா?” என்று சலித்துக் கொண்டே எழுகிறாள். அடுத்து அடுத்து தன் வேலைகளை முடித்துவிட்டு டி.வி-ஐ ஆன் செய்தவள், காபி டம்ளருடன் அரிசி புடைக்க உட்காருகிறாள்.
அன்று அந்த ஊரில் சில தன்னார்வலர்கள் உடல் உறுப்பு தானம், அதன் பயன்கள் குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, விருப்பம் உள்ளவர்களிடத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து வாங்கிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு தன்னார்வலர் அப்போது செங்காயி வீட்டிற்கு வருகிறார்.
இளம் வயது நபர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, சண்முகம் மற்றும் லட்சுமியிடம் இந்த உடல் உறுப்பு தானத்தை பற்றி எடுத்து சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பக்கத்து வீட்டுக் கிழவி செங்காயியின் தோழி சின்னாள் வருகிறாள். வந்தவள் செங்காயியின் அருகில் அமர்ந்து அவளை ஏற்றி விடுகிறாள்.
“ஏன்டி செங்காயி… காலைல விடிஞ்சதும் அதுவுமா நடு வீட்டுக்குள்ள உக்காந்துக்குட்டு, சாவு கீவுன்னு அவசகொனமா பேசிக்கிட்டு இருக்கான், வெரட்டி விடுறி.” என்று அவள் காதுக்குள் ஓத, அரிசி புடைப்பதை நிறுத்தியவள், வந்தவனைப் புடைக்க… திட்டம் போட ஆரம்பிக்கிறாள். தன் அறையின் வாசலில் சாய்ந்து சற்று யோசிக்கிறாள்.
படிவங்களை காட்டி விளக்கிக் கொண்டிருந்தவன் அவர்களிடம், “நிச்சயம் பண்ணுங்க, கண்டிப்பா இதோட நன்மை என்னனு தெரியவந்தா, ஒரு டோனர்-ஆ இருக்குறத நினைச்சு பெருமப்படுவீங்க. இப்போ ஒவ்வொரு நாளும் நா பெருமைபடுறேன்… நானும் ஒரு டோனர்னு.” அதுவரை யோசித்துக் கொண்டிருந்தவள் சட்டென்று,
“ஏய்யா கோணாரா இருக்குறதுல அப்டி என்னயா பெருமை?” என்று கேட்க பேசிக்கொண்டிருந்தவன், “பாட்டி அது கோணார் இல்ல டோனர்.” என்று கூற, சற்றும் யோசிக்காத செங்காயி… “என்னது டோனாரா? என்னடி இது புது உருப்படியா இருக்கு.” என்று இழுக்க, அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பேரன் அரவிந்த், டி.வி. சேனலை மாற்றுகிறான். அப்போது விஜய் டி.வி.யில் ஏற்கெனவே ஒளிபரப்பான காபி வித் டி.டி நிகழ்ச்சி, மறு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்தவள்,
“ஏனப்பா டோனரு… இந்த புள்ள ராவானா ரெண்டு பயலுவல கூட்டி வச்சு பேசிட்டிருக்கே, வீட்ல தேட மாட்டாகளா?” என்று கேட்க, பதிலுக்கு அவன் “அய்யோ பாட்டி அது டி.டி.” என, அதற்கு அவள் சற்று அதட்டும் தொனியில் “ஏம்ப்பா டோனரு, அது டி.வி-னு எனக்குத் தெரியாதா? ஆமா இம்புட்டு எகத்தாளமா பேசுறியே… நீ எந்த ஊரு?” என்று கேட்கிறாள்.
அதற்கு அவன் தயங்கியபடி, “மந்தவெளி பாட்டி” என்று கூற, செங்காயி பதறியபடி “ஏண்டி லட்சுமி புள்ள மண்டவலி-னு சொல்லுதே, இம்புட்டு காபி தண்ணி, கீப்பி தண்ணி வச்சு கொடுத்தியா? இருயா நா போயி கோடாரி தைலம் எடுத்துட்டு வர்றேன்”. என்று எழுந்தவள்,
“ஆமா எந்த ஊருன்னு சொல்லவே இல்லயேயா நீ” என்று கேட்க. பதற்றத்துடன், “இனி வெளி ஊர் பேர சொல்லி மாட்டிக்கிறத விட பக்கத்து ஊரு பேர சொல்லி தப்பிச்சிக்கலாம்” என்று “செக்கடி பாட்டி” என்று கூற. பேச்சை இத்தோடு முடித்துக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டவள் தன்னை கோவமாக்கிக்கொண்டு, “ஏது செகுடியா? எடு செருப்ப, யாருடா செகுடி? இந்தாடி லட்சுமி… இவனுக்கு காபியும் வேணாம், கீபியும் வேணாம், இம்புட்டு சுடுதண்ணி இருந்தா கொண்டாந்து மூஞ்சில ஊத்து, கொழுப்புதாண்டி,”
“எடுபட்ட கழுத மேல ஏர ஏத்துனா… அது ஏழு ஏக்கர உழுதுட்டு வருமா… அந்த கதயால இருக்கு, அய்யா டோனரு நீ வந்ததும் போதும், சொன்னதும் போதும் கெளம்பு.” என்று கடுப்படிக்க, ஒரு விண்ணப்பத்தை பாட்டியிடம் கொடுக்க வந்தவன், அதை அவள் புடைத்த அரிசிக்கு அருகிலேயே போட்டுவிட்டு விட்டால் போதுமென்று, தலை தெறிக்க ஓடி விட்டான்.
கடுப்பில் இருந்தவள் அந்த விண்ணப்பத்தை வீசி எறிய, அது அவள் அறையில் உள்ள ஒரு அலமாரியின் அடியில் போய் விழுகிறது. எதையோ சாதித்தவள் போல், சின்னாளை பார்த்துச் சிரித்துவிட்டு, மீண்டும் விட்ட அரிசியை புடைக்க அமருகிறாள்.
நாட்கள் நகர்கிறது… இப்பொழுதெல்லாம் செங்காயி சாவகாசமாய் எழுகிறாள். லட்சுமி தன் மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காலை உணவுக்கு ஆயத்தமாகிறாள். இவர்கள் எல்லோருக்கும் அடுத்த நிமிடம் ஒரு அதிர்ச்சியை இந்த நாள் கொடுக்கப்போகிறது என்பதை உணரமுடியாமல் இயங்கிக்கொண்டிருந்தனர்.
ஆம், அந்த அதிர்ச்சி செய்தி அவர்கள் கடையில் வேலை செய்யும் சங்கரன் மூலம் வந்தது. அக்கா…. என்று அலரிக்கொண்டு வந்ததில், லட்சுமியின் அடி வயிரே கலங்கிற்று. ஆம், அவள் மகன் பள்ளிக்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி, பக்கத்து ஊரைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன், இவள் மகன் அரவிந்தனுக்கு கண்பார்வையும் பறிபோயிற்று.
ஏதோ ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு மனிதனின் முடிவு, அன்று செங்காயி பேரனின் பார்வைக்கு வழி வகுத்தது. ஆம், இறந்த மாணவர்களில் ஒருவன் தன் உடல் உறுப்பை தானம் செய்துள்ளான். அந்தக் கண்கள் அரவிந்திற்கு பொருத்தப்பட்டு பார்வை கிடைத்திருக்கிறது. காலம் எதை நினைக்கிறதோ அதை நடத்தியே தீரும். ஆம் அன்றும் அப்படித்தான் நடந்தது.
ஒரு காலை வேலை மருத்துவமனை விட்டு வீடு வந்த அரவிந்தை, செங்காயி தூக்கிக் கொஞ்சி முத்த மழை கொட்டிக் கொண்டிருக்கையில், அதோ அன்று தலை தெறிக்க ஓடினானே அந்த டோனர், அவன் யாரோ இருவரை அழைத்து வருகிறான். ஆம் அவர்கள் தான் அரவிந்தின் அந்த கண்களுக்குச் சொந்தக்காரர்கள்… இறந்த மாணவனின் பெற்றோர்… என்று ஒருவனை ஓட ஓட விரட்டினாளோ, அவன் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்ல சொல்ல செங்காயிக்கு நெஞ்சுக்குள் ஈச்சம் முள் தைப்பது போல் இருந்தது.
அப்போது ஓடியவன் இன்று வந்து தன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாங்கிக்கொண்டான். அவர்களும் மனப்பூர்வமாக கையெழுத்திட்டனர். அதைப் பார்த்துக்கொண்டிருந்த செங்காயிக்கு, அவன் கொடுத்த விண்ணப்பம் ஞாபகம் வர, வீசிய இடத்தில் பார்க்கிறாள் காணவில்லை… அங்கும் இங்கும் அலசி ஓய்ந்து கட்டிலில் அமர்கிறாள். சட்டென்று ஏதோ ஒன்றை உணர்கிறாள்.
ஆம், அந்த ஓட்டையில் இருந்து வெளிச்சம் வரவில்லை. அந்த விண்ணப்பம் அந்த ஓட்டையை பூர்த்தி செய்திருந்தது. அதை உருவி எடுத்துக்கொண்டு வருவதற்குள், அவர்கள் கிளம்பி இருந்தனர். இவளும் கொள்ளை கதவை திறந்துக்கொண்டு, சந்து பொந்தெல்லாம் அலைந்து அந்த டோனரை கண்டுபிடித்து நிறுத்த, அவன் இவளை ஒரு நடுக்கத்துடனே அணுக, செங்காயி மெதுவாக அந்த விண்ணப்பத்தை நீட்டுகிறாள்.
“ஐயா, என் உடம்பயும் தானம் கொடுக்குறேன்ய்யா…!” என்று கூற, அவளை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கையொப்பம் போடச் சொல்லும்போது, “ஏன் பாட்டி… உங்களுக்கு காது கேக்காதுனு சொன்னாங்க. அங்க பேசினதெல்லாம் எப்டி கேட்டுச்சு” என்று கேட்க, அவளோ தலையை சொரிந்துக் கொண்டு ..
“கேக்கும்யா… ஏதோ புத்திகெட்டுப் போய் பண்ணிட்டேன்..” என்று கூற, அவன் ஏற இறங்க இவளைப் பார்க்கிறான். இவளும், இதோ அவளது கையொப்பத்தைப் போட்டு தன் உறுப்புக்களை தானமளிக்கிறாள். நிச்சயம் யாரோ ஒருவரிடம் செங்காயி இறந்தும் வாழ்வாள்.
– கதைப் படிக்கலாம் – 70
இதையும் படியுங்கள் : பலூன்




