– J. அஸ்லம்

அண்ணாச்சி கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களின் ஒவ்வொரு பாட்டில்களிலிருந்தும், தின்பண்டங்களை எடுத்தவாரே அவசர, அவசரமாகவும் முகத்தில் சந்தோசத்தையும், ஒருவித புன்னகையையும் வைத்தவாரும் அட இது வேணாம் அண்ணாச்சசி, அத கொடுங்க… ம்ம்ம்ம்.. அதையும் கொடுங்க…. என்று ஒவ்வொரு பண்டங்களாக எடுத்துக்கொண்டு, அக்கடை தெருவின் மறுபுறம் நின்ற காரில் உள்ள குழந்தைகளுக்கு கொண்டுப்போய் கொடுப்பதும், வருவதுமாக இருந்தார். நம்ம மணி அண்ணன்..
கடைசியாக கைநிறைய பண்டங்களை சுமந்தவாறு கொண்டுபோய் காரில் உள்ளே போட்டுவிட்டு இருக்கட்டும், இருக்கட்டும் குழந்தைகளுக்குதானே என்று சிரித்தவாரே கூறிவிட்டு, சிறிது நேரம் காரின் வெளியே நின்றவாறே காரில் உள்ளே உள்ளவர்களுடன் மணி அண்ணன் பேசிக்கொண்டிருந்தார். காரில் உள்ளவர்கள் கீழே கூட இறங்காமல், காரில் அமர்ந்தவாறே காரின் ஏசியை போட்ட நிலையில், காரில் அமர்ந்தவாறெ பேசிவிட்டு, அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். அது வேறுயாருமல்ல… நம்ம மணி அண்ணனின் உடன்பிறந்த இரண்டு தம்பிகளும், அவர்களின் மனைவிமார்களும்தான்.
கார் சென்றவுடன் மணி அண்ணன் கடைக்காரரிடம் வந்து எவ்வளவு அண்ணாச்சி ஆச்சு என்று கேட்க, மொத்தம் 85/- ருபாய் ஆச்சுப்பா என்று சொல்ல, அண்ணாச்சி அத நம்ம கணக்கோட சேர்த்து எழுதிக்கோங்க அண்ணாச்சி என்று தலையை சொறிந்தவாரே சொல்ல, சற்று முறைத்தவாறும், சலிப்புத்தட்டியவாறும், இந்தாப்பா இதையும் வச்சிக்கோ இதோ இந்த சைக்கிள்ள உக்காந்திருக்குற இந்தப் புள்ளைங்களையும் கொஞ்சம் கவனி என்று கொஞ்சம் காட்டமாகவே சொன்னவுடன்தான், மணி அண்ணனுக்கு தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னுடைய சைக்கிளின் பின்னாடி கேரியரில் உட்கார வைத்துவிட்டு சென்றதே ஞாபகம் வருது.
தலையில் கையை வைத்தவாறு குழந்தைகளிடம் வர… நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும், தன் தந்தையையே உத்துப் பார்த்துக்கொண்டிருந்தன… கையில் தந்தை கொடுத்தப் பண்டங்களை வாங்கியவாறு.
இரண்டு பிள்ளைகளையும் பிடித்தவாறு, சைக்கிளை பொறுமையாக நகர்த்திச் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது, இறந்துப்போன தன் தாயின் குரல், மணி அவர்களின் மைண்ட் வாய்சாக ஓடியது.
(எட்டாவது படிக்கும் வயதில்) “ஏம்பா மணி, நீ தாண்பா வீட்டுக்கு மூத்தப் புள்ள. உங்க அப்பாவும் நம்மலவிட்டுட்டு போய்ட்டாரு. அவருடைய பொறுப்பு அத்துனைக்கும் இப்ப நீதான்பா பொறுப்பு. உன்னுடைய இரண்டு தம்பிகளையும் நீ தாண்பா படிக்க வைக்கனும், என்னையும் நீதான்பா பாத்துக்கனும், வீட்டுக்கு வேண்டியதையும் நீதான்பா செய்யனும், நம்ம வீட்டுக்கடனையும் நீதான்பா அடைக்கனும், உன்னுடைய அத்தப் பொண்ணத்தான்பா நீ கல்யாணம் பன்னிக்கனும். அதுவும் இப்ப இல்லபா, உன் தம்பிங்க இரண்டு பேரையும் நீ நல்லா படிக்க வச்சதுக்கப்புறம் நீ கல்யாணம் முடிச்சுக்கோப்பா. அவ பொறுமையா இருப்பா. பைய முடிக்கலாம்பா…
நீ முதல்ல படிப்ப நிறுத்திக்கோப்பா ஏதாவது ஒரு வேலைக்குப் போப்பா. இனி உனக்கு நிறைய பொறுப்பு இருக்குப்பா என்ற தன் தாயின் ஓயாத அன்றைய நாளின் ஓலக்குரல், ரீங்காரமாக மணி அவர்களின் காதில் ஒலித்துக்கொண்டிருக்க, திடிரென சைக்கிளின் ப்ரேக்கை ஒரு அலுத்து அலுத்த, என்ன மணி நல்லா இருக்கியாப்பா! என்று கேட்டவாறு நடுவே ஒருவர் கடந்துச் சென்றார்.
ஆ.. ன்… நல்லா இருக்கேன்.. நீங்க நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா? என்று விசாரிக்க. எல்லோரும் நல்லா இருக்காங்கப்பா. சரிப்பா, சரிப்பா… பார்த்துப் போ என்று மணியின் தோளில் தட்டிவிட்டவாறு சென்றார். அவர் வேறுயாருமில்லை மணியின் சித்தப்பாவான துரைராஜ்.
அவரை கடந்துச் செல்லும்போது மணிக்கு மீண்டும் ஒரு பழைய நினைவு. ஒரு நாள் இவர் தன்னுடைய அப்பா இறந்ததற்கு பிறகு நலம் விசாரித்துவிட்டு, மணியின் வீட்டில் அன்றைய இரவு தங்கிச்செல்லலாம் என வந்தச் சமயம், வீட்டில் அன்றைய இரவுக்கு சாப்பாட்டுக்கு தொட்டுக்கக்கூட இரண்டு முட்டைகளை தவிர வேறு எதுவும் இல்லை. இரவு நேரம் ஆனதால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. ப்ரஸ்ஸில் வேலைக்குச் சென்றுவிட்டு மிகுந்தக் கலைப்பில் வந்த மணியை பார்த்து… வாப்பா, மணி வா… இப்பத்தான் வேலையிலிருந்து வரியா? என்றார் சித்தப்பா!
ஆமா சித்தப்பா. இன்னைக்கு கொஞ்சம் ப்ரஸ்ஸில் வேலை அதிகம். அதான் என்றான். சாப்டிங்களா? சித்தப்பா என்றான். இல்லப்பா உனக்காகத்தான் காத்திருந்தேன். அதான் நீ வந்துட்டல மூஞ்சு, கை, கால் கழுவிட்டு வா. சேர்ந்து சாப்பிடலாம் என்றார்.
சரி சித்தப்பா என்று வீட்டிற்குள் நுழைந்து முகம், கை, கால்களை கழுவிவிட்டு வெளியே வரும் சமயம், மணியின் தாய் அடுப்பங்கரையில் இருந்து மணியை அழைத்து, தம்பி சாப்பாட்டுக்கு தொட்டுக்கக்கூட இரண்டு முட்டைத்தாண்டா இருக்கு. ஒன்னு அவர் சாப்பிடட்டும் இன்னொன்ன உன் இரண்டு தம்பிங்களுக்கும் பாதி, பாதி வச்சு அவர் கூட சாப்பிடச்சொல்லு. நீ மூத்த புள்ளல அம்மாக்கூட சேர்ந்து சாப்பிடுப்பா என்று தன் தாய் கூறியதும், சரிம்மா தம்பிங்க சாப்பிடட்டும் என்று கூறியவாறு, சித்தப்பாவுக்கும், தம்பிங்களுக்கும் சாப்பாடு வைத்துவிட்டு, சித்தப்பா தம்பிங்க கூட சாப்பிடுங்க. நான் இப்பதான வந்துருக்கேன், கொஞ்சம் நேரமாகட்டும். அதுவுமில்லாம அம்மா தனியா சாப்பிடுவாங்க. அதனால அவங்கக் கூட சேர்ந்து சாப்டுக்குறேன் என்றான். சரிப்பா என்றார்.
அன்றைய இரவு இனிதாய் கழிந்தது, முதலில் சாப்பிட்டவர்களுக்கு. ஆம். இரண்டாவதாக அடுப்பங்கரையில் அமர்ந்து சாப்பிட்ட மூத்தப் பிள்ளைக்கும், அந்த மூத்தப் பிள்ளைக்கு எப்போதும் ஆறுதலான அந்த தாய்க்கும் மிஞ்சியது வெறும் ரசமும், சோரும்தான். இது ஒன்றும் மணிக்கும் அவனது தாயிக்கும் புதிதல்ல. ஏனெனில் சில சமயங்களில் உறவினர்கள் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்துவிட்டால், அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக கைசெலவுக்கு இருக்கும் சிறு காசை கொண்டு, பின்வாசல் வழியாக கறி வாங்கி வந்து சமைத்து, படிக்கும் பசங்க நேர நேரத்துக்கு சாப்பிடட்டும் என்ற காரணத்தை சொல்லி, தம்பிமார்களை முன்னிலைப்படுத்தி விருந்தினர்களோடு சாப்பிடவைத்துவிட்டு, மிஞ்சியதை தன் தாயோடு சேர்ந்து அடுப்பங்கரையில் சாப்பிடுவது, இந்த மூத்தப் பிள்ளைக்கு வழக்கம்தானே.
இதையெல்லாம் நினைத்தவாறே மணி தன் வீடு வந்து சேர, சைக்கிளை ஸ்டாண்டு போட்டுவிட்டு பின்னால் அமர்ந்திருந்த இரண்டு பிள்ளைகளையும் கீழே இறக்கிவிட, இரண்டாவது மகன் அண்ணனின் கையிலுருந்த பண்டத்தையும் பிடுங்கிக்கொண்டு ஓட, அப்பா அவன் என் பண்டத்தை பிடுங்கிட்டாம்பா என்று தன் தந்தையிடம் சொல்ல, பரவாயில்ல விடுப்பா, நீ தானே மூத்த பையன், நீ தானே தம்பிக்குக் கொடுக்கணும் என்று சொல்லியவாரே மூத்தவனை தோளில் தூக்கி வைத்தவாறு, வீட்டிற்குள் நுழைந்தார் மணி.
ஆம்… ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவர் அக்குடும்பத்தின் தந்தை என்றால், அதற்கு அடுத்தபடியாக அந்தக் குடும்பத்தின் படைத்தளபதியாக இருப்பது, அக்குடும்பத்தின் மூத்தப்பிள்ளை என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.
அக்குடும்பத்தில் தந்தை இருந்தாலும், இறந்தாலும் எப்போதுமே ஒரு குடும்பத்தின் மூத்தப் பிள்ளைக்கு சுகங்களை காட்டிலும், சுமைகள் சற்றே அதிகம் என்று சொன்னல் அது மிகையல்ல, அப்பிள்ளை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
– கதைப் படிக்கலாம் – 149




