விட்டு விட்டுத் தூறும் மழை
பசிக்கு அழுவதாய் முகத்தைப்
பாவமாய் வைத்துக் கொண்டு
என் அணைப்பிற்காக
செல்லமாய் சிணுங்கும்
என் தங்கமகனை
நினைவுபடுத்திச் செல்கிறது.

விக்கலுக்கு பயந்து
மிரண்டு விழிப்பதும்
முடியில் மாட்டிய விரல்களை
எடுக்கத் தெரியாமல்
அப்பாவித்தனமாய் அழுவதும்
காற்றில் பறக்கும் துணிகளிடம்
‘ங்கு’ எனப் பேசுவதும்
கன்றுக்குட்டி போல அமைதியாய்
அழாமல் குளிக்கும் சமர்த்தும்
மடிப் பள்ளத்தாக்கில் கண்மூடித்
தூங்குவதுபோல் பாவனை செய்வதும்
குறுங்கட்டிலில் படுத்துக் கொண்டு
அம்பு விடும் பாவனையும்
சில நேரம் அணைக்க அனுமதிப்பதும்
சில நேரம் விலக்கி அழுவதும்
என என் கண்மணியை
ரசித்து முடிக்க முடியாது.
அவனுக்குப் பூசிய மஞ்சளை
என் உடைகளுக்கும் சேர்த்து
அவனுக்கு இட்ட மையை
என் கன்னத்தில் தேய்த்து
என்னென்ன குறும்பு செய்வான்!

தடுப்பூசியால் வீங்கிய
அவன் தொடையைக் கண்டு கலங்கி
தடுப்பூசி கண்டுபிடித்தவனை
வாய் ஓயாமல் வைது கொண்டிருக்க
மறுநாளே வலியை வென்று
காற்றில் சைக்கிள் ஓட்டி
எனக்கு தைரியம் சொல்லித்தந்த
மாவீரன் அவன்!
அவனது சில ‘ம்’ களுக்காய்
தயாரிக்கப்பட்ட அர்த்தமற்ற கதைகளும்
அவன் பார்த்துச் சிரித்த
என் சுடிதார்ப் பூக்களும்
இன்னும் வாசம் மாறாமல் அப்படியே.
தூங்கும் அவனை
மார்பில் சாய்த்துக் கொண்டு
மணிக்கணக்காய்
அசையாமல் அமர்ந்திருப்பதெல்லாம்
வரத்தைச் சுமந்து கொண்டு
செய்யும் தவம்!

என் வறண்ட தோள் காத்திருக்கிறது
அவன் அமுதம் பட்டு நனைவதற்காய்.
என் உடைகள் தூய்மையாய் காத்திருக்கின்றன
அவன் கண்மைக் கறை படுவதற்காய்
என் தாலாட்டுகள் காத்திருக்கின்றன
அவனை மயக்கி, தாம் மோட்சம் பெறுவதற்காய்
ஏ! மழையே!
இதோ என் முத்தங்களைப்
பெற்றுக் கொள்
என் தங்கமகனிடம் சென்று
அவனுக்கு வலிக்காமல்
ஒற்றி விடு.
-கோகிலாராணி
இதையும் படியுங்கள் : சிறுகதை – மரத்தடி வடைகள்




