– நந்தினி சுகுமாரன்
படுக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, முகத்தை அதில் புதைத்தவாறு அமர்ந்திருந்தாள் அவள். அருகில் அவளவன் உறங்கிக் கொண்டிருந்தான்.
முதல் நாள் காலையில் அவளது கழுத்தில் மங்கள நாண் பூட்டி, இரவில் கணவனுக்கு உண்டான உரிமையையும் காட்டி, அவளை எடுத்துக்கொண்டு துயிலில் தொலைந்திருந்தான். ஆனால் அவள் தான், தன்னை இழந்துவிட்டு அத்தோடு உறக்கத்தையும் தொலைத்து விட்டு அமர்ந்திருந்தாள்.
உடலும், மனமும் மரத்துப்போனது போல் தோன்றியது. விழிகள் கண்ணீர் உகுக்க மறுத்து விட்டன. வான் திறந்த வெட்ட வெளியினில், அவள் மட்டும் ஆடைகள் இன்றி இருப்பது போல் உணர்வு. கசங்கியிருந்த புடவையை வாரி எடுத்து, அதற்குள் தன் தேகத்தை முழுவதுமாய் மறைத்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்.
சந்தன தேகத்தில் உடலெங்கும் கீறிவிட்டது போல் ஓர் பிரம்மை. பூமேனி சோர்ந்தது, வலித்தது, அழுதது, துவண்டது, நடுங்கியது, தகித்தது, துடித்தது. அருகினில் உறங்கிக் கொண்டிருந்த கணவனின் மீது அவளது பார்வை பதிந்தது. அனிச்சையாய் அவன்புறம் நீண்ட கைகள், குற்ற உணர்வுடன் பின் வாங்கிக் கொண்டன.
தன்னையே முற்றும் முதலுமாய் வெறுத்தாள் அவள். மூடியிருந்த இமைகளின் இடையே இருந்து இருதுளி நீர் வெளியேறியது. தலையை பின்புறமாய் சாய்த்து, சுவற்றில் பதித்தவாறு அமர்ந்துக் கொண்டாள்.
செஞ்சூரியன் வழக்கம் போல் தன் கடமையை ஆற்ற கிழக்கு திசையில் உதித்துவிட, அறையில் இருந்தவனோ இன்னும் உறக்கம் கலையாது இருந்தான். முதல் நாள் திருமணக் கொண்டாட்டத்தின் அயற்சியிலும், இரவு நடந்த நிகழ்வுகளின் மகிழ்ச்சியிலும் தன்னை மறந்திருந்தவன் நேரம் சென்றே விழித்தான்.
வாடியக் கொடியாய் இருந்த மனையாளைக் கண்டவன், உடனே பதற்றமடைந்து, “என்னமா, ஏன் இப்படி உட்காந்திருக்க?”
“கண்ணெல்லாம் சிவந்திருக்கு, தூங்கலையா நீ?”
“அழுதியா?”
“நைட்டு உன்னை எதுவும், நான் கஷ்டப்படுத்திட்டேனா?” என தனக்கு தோன்றியதை எல்லாம் கேள்விக் கனைகளாய் தொடுக்க, அவளிடமிருந்து தான் பதில் வந்த பாடில்லை.
“என்னாச்சுடா? எதாவது பேசுடா” என அவளின் கன்னம் வருடி தவிப்புடன் கேட்டவனை, உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவள், “நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என வெற்றுக் குரலில் கூறினாள்.
“சரி பேசலாம், நீ முதல்ல போய் குளிச்சுட்டு வா” என அவளை அனுப்பி வைத்தவன், தானும் வீட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் சென்று, வழக்கமான தன் காலை கடன்களை முடித்து விட்டு வந்தான். இருவருக்குமாக தேநீர் தயாரித்து வைத்து விட்டு, அவளின் வருகைக்காக காத்திருந்தான்.
குளியலறையில் சிறு தூறலாய் சிதறிய நீருக்கு அடியில் நின்று கொண்டிருந்தாள் அவள். குளிர்ந்த நீராய் இருந்தப் போதும், உடலில் அனலாய் சுட்டது. விழிகளில் அனிச்சையாய் உவர்நீர் வழிந்து, நன்னீருடன் கலந்து வெளியேறியது.
முதல் நாள் இரவு அவளுக்கும் அவனுக்கும் இடையே நடந்த நிகழ்வுகள் காட்சிகளாய் கண்முன்னே ஓடின. கணவனானவனின் முதல் தீண்டலே அவளுக்குள் பயத்தைக் கொடுத்தது. “எதையும் பேசி.. முடியாதுனு சொல்லி, உன் புருஷன கோபப்படுத்திடாத. நல்ல பிள்ளையா அவர் சொல்லுற மாதிரி, கேட்டு நடந்துக்க” என அவளது தாய் கூறிவிட்டு சென்ற சொற்களே, இரவு அவளை அமைதியாக இருக்க வைத்தது.
ஆனால் விடிந்ததற்குப் பின், அவளின் நினைவடுக்குகளில் மறைந்துப் போயிருந்த கடந்தகால நிகழ்வுகள் எல்லாம், மீண்டும் எழும்பி வந்து… முந்தய தின நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து பெண்மகளின் உயிரையும், மனதையும் சூறாவளியாய் சுழற்றி.. அனாதரவாய் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டது.
ஏழு வயது சிறுமியாய் பாவடை சட்டையில் பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமியருடன் விளையாடியது நினைவு வந்தது. அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது ஓர்நாள்.. அவளின் தாய் அவளை அழைத்து, “பாப்பா, பூக்கார பாட்டி வீட்டுக்கு போய் ரெண்டு முலம் கதம்பம் வாங்கிட்டு வா” என அனுப்பி விட, காலின் ஓட்டத்திற்கு தடையாய் இருக்கும் பாவாடையை தூக்கிப் பிடித்தபடி ஓடினாள்.
வாயிலில் நின்று, “பாட்டி” என்றவளின் அழைப்பிற்கு பதில் இல்லை. இரண்டு மூன்று முறை அழைத்ததற்குப் பின், தாத்தா வெளியே வந்தார். இடை வேட்டி மட்டும் அணிந்திருந்தார்.
அவளைப் பார்த்து, “என்ன பாப்பா?” என்று வினவ, “அம்மா பூ வாங்கிட்டு வரச் சொன்னாங்க” என்றாள். “சரி உள்ள வா” என்றதும், வீட்டினுள் பாட்டியைத் தேடினாள் அவள். “தாத்தா பாட்டி எங்க?” என்று வினவ, “வெளிய போயிருக்கா, இப்ப வந்திடுவா. நீ அதுவரைக்கும் இந்தா சாக்லெட் சாப்பிடு” என அவர்களது வீட்டு வாயிலில் வைத்திருந்த சிறிய அளவிலான பெட்டிக் கடையில் இருந்து ஃபைவ் ஸ்டார் இனிப்பு ஒன்றை எடுத்து நீட்டினார்.
அவளைப் பொறுத்த வரை, ஃபைவ் ஸ்டார் அன்றைய காலத்தின் மிக விலை உயர்வான இனிப்பு வகை. அவளது தந்தை எப்பொழுதாவது வாங்கி வருவார். அதையும் அவளது தமக்கைக்கு, தம்பிக்கு என மூன்று பங்காகப் பிரித்து ஒன்றை மட்டும் அவளிடம் கொடுப்பார். அதற்கு மேல் கேட்டாலும் கிடைக்காது, குடும்ப சூழல் அத்தனை வசதியாக இருந்தது.
தன் கையில் இருந்த முழு இனிப்பையும் நம்ப முடியாமல் விழி விரித்துப் பார்த்தவள், அதைப் பிரித்து உண்ணத் துவங்கினாள். அருகினில் அமர்ந்த தாத்தா, அவளின் தலையையும் முதுகினையும் வருடி விட்டார். இனிப்பும் தீர்ந்தாகி விட்டது, பாட்டியையும் காணவில்லை.
அவள் தாத்தாவிடம், “பாட்டி வர நேரமாகுமா?” என்று வினவ, “வந்திடுவாங்கமா” என சிரித்தார் அவர். “அம்மா என்னைத் தேடுவாங்க, போய்ட்டு அப்புறம் வரவா?” என்று கேட்டவளிடம், “அதெல்லாம் தேட மாட்டாங்க, உட்காரு” என்றவர் அவளது பாவாடையை விலக்கினார்.
அவள், “என்ன தாத்தா?” என வினவ, “எறும்பு பாப்பா” என்றவர், உடையை முழங்காலுக்கு மேலே உயர்த்தி பிடித்து கைவைக்க, கதவு தட்டும் ஒலிக் கேட்டது. செவியைத் தீண்டிய ஓசையில் தன்னிலை பெற்ற அவள்.. இமைகளை பிரித்துப் பார்க்க, குளியலறையில் தண்ணீருக்கு அடியில் நின்றிருந்தாள். சற்றே சில்லென்ற நீரில், உடல் நடுங்கத் துவங்கியது.
“எவ்வளவு நேரம் ஆச்சு, இன்னும் பாத்ரூம்ல என்ன பண்ற? ரொம்ப நேரம் தண்ணீல இருக்காத, உனக்கு சேருமா சேராதானு வேற தெரியல. எதாவது ஆகிட போகுதுமா, சீக்கிரம் வா” என அவளது கணவன், தன்னவளிடம் கொண்ட அக்கறையை குரலில் காட்டி அழைத்துக் கொண்டிருந்தான்.
அவசரமாய் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். குழலில் இருந்து வடிந்த நீர்த்துளிகள்.. அவளது உடையை ஈரமாக்கிக் கொண்டிருக்க, “என்னம்மா இது, தலையை கூட கட்டாம வந்திருக்க?” என்றவன் துவாலையால் மனைவியின் கேசத்தை துவட்டி விட்டான். அவனையே வலி நிறைந்த விழிகளோடு நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
சூடான தேநீரை அவளிடம் கொடுக்க, அவளுக்கும் அது தேவையாய் இருக்க, உடனே வாங்கி அருந்தினாள். உடலின் நடுக்கம் மெல்ல குறைந்து, மனநிலை ஓரளவுக்கு சமன்பட்டு இருந்தது. தன்னவளின் எதிரே அமர்ந்தவன், மனைவியைப் பார்த்து புன்னகைக்க.. பதிலுக்கு புன்னகைக்க முயன்று தோற்றுப் போனாள் அவள்.
அவனுக்கும், அவளுக்கும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயத்த திருமணம். அவனுக்கு அவள் என்று பேசி முடித்தப் பின்னரே, இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேசத் துவங்கினர். திருமணத்திற்கு முன்பான இரண்டு மாதங்களிலும் அவனோடு பேசிய ஒவ்வொன்றும், தெவிட்டாத நொடிகள்.
அவன், அவளுக்கு காதலின் துவக்கப் புள்ளியை கற்றுத் தந்தவன். மௌனத்தின் இனிமையை உணர வைத்தவன். தனிமையின் சுகத்தை அனுபவிக்க சொல்லிக் கொடுத்தவன். தீண்டலின் பொருளை, சொற்களால் அவளுக்குள் புகுத்தியவன்.
மாதவிலக்கான நாட்களில் மறக்காது அழைத்து, நலம் விசாரிப்பான். அவள் உண்ணாது இருக்கும் நேரங்களில், அதட்டி உருட்டி உண்ணும் படி கட்டளையிடுவான். தாயின் அரவணைப்பை, தந்தையின் கண்டிப்பை, தமக்கை, தம்பியுடனான தோழமையை என அவளுக்கு வேண்டிய அனைத்து குணத்தையும் ஒருங்கே பெற்றவன் அவன். முதன்முதலாய் ஆண்மையின், முழுமையை அவனிடத்தில் மட்டுமே உணர்ந்தாள் அவள்.
அவளின் சுவாசத்தில் கலந்து விட்டவனின், முதல் நாள் நெருக்கம்.. ஆடவனிடம் கொண்டிருந்த நம்பிக்கையையும் காதலையும் பின்னுக்குத் தள்ளி பயத்தை உருவாக்கி விட்டது. மறைந்து புதைந்து போனவை எல்லாம், அரூபமாய் எழுந்து வந்து, அவளது எண்ணங்களுக்குள் புகுந்து, பெண்மகளின் உணர்வுகளை ஆட்டிப் படைத்தன.
அன்று நடந்ததின் பொருள் அறியாமலேயே, ஆண்டுகள் கடந்து விட.. இன்று அதன் உண்மை நிலை புரிந்தப்பின், மூச்சு முட்டியது. உயிர் போய் விடுமோ என்று தோன்றியது. உடல் தீயில் வெந்துப் போனது போல் துடித்தது.
“ஏன்மா ஒரு மாதிரியா இருக்க?” என்று அவன் அவளை நெருங்க, அனிச்சையாய் ஓரடி பின்னே நகர்ந்தாள் அவள். மனைவியின் முகத்தில் தெரிந்தக் கலக்கத்திலும், அவளது செயலிலும் ஆடவனின் மனம் விழித்துக் கொண்டது. எதுவோ சரியில்லை என மூளை எடுத்துரைத்தது.
தன்னை சற்றே நிலைப்படுத்திக் கொண்டவன்.. மென்மையான குரலில், “ஏதோ பேசணும்னு சொன்ன?” என வினவி, அவள் மனதில் இருப்பதை வெளிக்கொண்டு வர முயன்றான். அவனை நேருக்கு நேர் காண இயலாது தவித்தவள், “நா நான்… ஏ ஏழு வயசுல, என்ன என்னை ஒ ஒரு தாத்தா நை நைட்டு நட நடந்த மாதிரி” அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை. இதழ் உதிர்க்காத மிச்சத்தை பெண்மையின் அழுகுரல் சொன்னது.
ஒரு நொடி அவள் கூறிய செய்தியில் அதிர்ந்தவன், பின் மனைவியின் நிலை உணர்ந்து, அவளை சமாதானம் செய்ய முயன்றான். அழுதுக் கொண்டிருந்தவளை அவன் அணைக்க.. சட்டென்று விலகி, “ப்ளீஸ் என்னைத் தொடாதிங்க. எனக்கு என்னமோ ஒருமாதிரி இருக்கு. குண்டூசி வச்சு உடம்பெல்லாம் குத்துற மாதி தோணுது, வேணாம்” என கண்ணீருடன் இறைஞ்சுபவளைக் கண்டு, அவனது விழிகளிலும் ஈரம்.
முயன்று தன்குரலை சரிசெய்துக் கொண்டவன், “உன்னோட அம்மாவும், அப்பாவும் தொடுறப்போ, உனக்கு இப்டிதான் தோணுமா டா?” என்று வினவ, அவள் அவளை வலியுடன் பார்த்தாள். “உனக்கு அவங்க எப்படியோ, அதே மாதிரி தான நானும்? உனக்கு சொந்தமானவன் மா. என்ன தாலி கட்டுனதுனால கணவன்ற உறவு முறைல வந்துட்டேன். அதைக் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு.. உன்னை பெத்தவங்களோட, ஃப்ரண்ட்ஸ் கூட எப்படி பேசுவியோ பழகுவியோ, அதே மாதிரி என்கூடயும் பேசு ஓகேவா?” என்றவன், அவளது விழிநீரைத் துடைத்து விட, “ஆனா நான் அவங்கக்கிட்ட எல்லாம் இந்த விஷயத்தை சொல்லலியே?”
“ஏன் சொல்லல?”
“எப்படி சொல்றதுனு தெரியலைங்க” என்றவளின் குழந்தை மனதை உணர்ந்தவன், முயன்று புன்னகைத்தான்.
“நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கேன், உங்களுக்கு என் மேல கோபம் வரலையா? எப்படி உங்களால சிரிக்க முடியுது?” என அவள் வினவ, “நீ எதாவது தப்பு பண்ணியா?” என்றான் அவன். “அது அது” என அவள் திணற, “உன்னை யாராவது கீழ தள்ளிவிட்டா, என்ன பண்ணுவ?”
“அவங்க மேல கோபம் வரும், அடிக்கணும்னு தோணும்”
“சரி, அவங்களை அடிச்சிடுவியா?”
“இல்ல, அடிக்க மாட்டேன்”
“ஏன்?”
“பயமா இருக்கும்”
“இந்தப் பயம் மட்டும்தான் உன்னோட பலவீனம். பயப்படாம உன்னை வேணும்னே தள்ளி விட்டவங்களை அடிக்கணும். உன்னால முடியலனா, மத்தவங்கட்ட சொல்லணும். நான் என்ன சொல்றேனு புரியிதா?” என அவளது கண்களை நேராய் பார்த்து கேட்டவனுக்குத், தலையசைப்பில் பதில் கொடுத்தாள் அவள்.
சில நிமிடங்கள் மௌனமாக கடந்திருக்க.. அழுகை ஓரளவுக்கு குறைந்து, நிதானத்திற்கு வந்திருந்தாள் அவள். “சரி போ, சீக்கிரம் ரெடியாய்டு வா. நாம வெளிய போகலாம்” என அவளின் மனதை திசைத் திருப்புவதற்காக அவன் கூற, “இன்னைக்கு மறுவீட்டுக்கு போகணும், இல்லைனா அம்மா திட்டுவாங்க” என்றவளிடம், “என் வீட்டுக்காரர் நாளைக்கு போகலாம்னு சொல்லிட்டாருனு சொல்லு. வேற எதாவது சொன்னாங்கனா, நானே அத்தைக்கிட்ட பேசிக்கிறேன்” என அவளை அனுப்பி வைத்தவன், தானும் தயாராகச் சென்றான்.
– கதைப் படிக்கலாம் – 122
இதையும் படியுங்கள் : மனம் மாறும் மலர்