தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தற்போது தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 11) முதல் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதில் விடைத்தாள்கள் திருத்தத்தின் போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களை சரியாக குறிப்பிடாமல் புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட விடைத்தாள்களை கூர்ந்தாய்வாளர்கள் சரி பார்க்க வேண்டும் என்றும் விடைத்தாள் திருத்தும் அறையில் மொபைல் ஃபோன்களை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது எனவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.