தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ஆய்வு நடத்தினோம். அன்றாடம் 500 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு 150 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. அதுபோல் பிபிடி கிட்கள், மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் குறித்த ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மாத்திரை மருந்து கையிருப்பு, தனிநபர் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை.கொரோனா பாதித்த அனைவரும் வீட்டிலேயே மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.64,281 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 33,664 உள்ளன.7,797 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.24,061 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் தயார் நிலையில் உள்ளன. 260 பி.எஸ்.ஏ. மையங்கள் தயார் நிலையில் உள்ளன.தமிழ்நாடடில் 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள்,2,067 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் சேமிப்பு திறன் உள்ளது,”என தெரிவித்தார்.