பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய, இன்றே கடைசி நாள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பின்பு நடத்தப்படாமல் இருந்த தேர்வுகளில் மட்டும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
அதைதொடர்ந்த், செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கபட்டு, அதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறபட்டன.
இதையடுத்து, சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அதேசமயம், விண்ணபித்த மாணவர்களில் சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீதமுள்ளவர்களும் இன்று நள்ளிரவு 11.59ற்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு, பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு வலியுறுத்தி உள்ளது. அதைதொடர்ந்து மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் நாளை வெளியிடப்பட உள்ளன.