மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஏற்றுக் கொள்ளத்தக்க பல சாதகமான முடிவுகள் இருந்தாலும், தேசிய அளவில் அனைவருக்கும் ஒத்துப்போகாத ஒருசில முடிவுகளும் இருப்பதாக கல்வியாளர் மாறன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் கல்வியில் சீர்திருத்தம் ஏற்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் இடம்பெற்ற, மும்மொழிக் கொள்கை என்பது குறித்து தமிழகத்தில் பரவலாக பேசபட்டாலும், அதில் உள்ள மாற்ற சாதக, பாதகங்கள் என்ன என்பது வெகுஜன மக்களிடையே சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியா உண்மையாக உள்ளது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையால் விளையக்கூடிய நன்மை மற்றும் தீமைகள் தொடர்பாக கல்வியாளர் மாறன் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையால் விளையக்கூடிய நன்மைகள்
அதன்படி, ஓய்வு பெற்ற மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் முடிவு என்பது இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில பள்ளிகளில் ஆசிரியரின் கல்வித்தகுதியாக B.sc மற்றும் B.ed எனும் 4 வருட பயிற்சியை கட்டாயம் ஆக்கி இருப்பதும், ஆசிரியர்களின் தரத்தை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிட திட்டமிடப்பட்டு இருப்பது மாணவர்களுக்கு கிடைக்க கூடிய கல்வியின் தரத்தை உயர்த்தும் என்கிறார்.
5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி என்பது அவசியம் பாராட்டுக்குரியது எனும் மாறன், தாய்மொழிக் கல்வி என்பது தனித்தன்மை கொண்டதோடு மாணவர்களின் வடிவமைப்பு, கணிதம் மற்றும் ஆலோசனை தொடர்பான திறனை அதிகரிக்க உதவும் என குறிப்பிடுகிறார்.
உயர்கல்வியில் ஏற்பட உள்ள தாக்கம்
புதிய தேசிய கல்விக் கொள்கையில் 2030ம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் 50% மாணவர் சேர்க்கை எனும் மத்திய அரசின் இலக்கு, 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு கட்டாயம் எனும் முடிவால் பாதிக்கும் என கூறுகிறார். நாகர்ப்புற, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்வி கிடைக்காத நிலையில், இந்த இறுதித்தேர்வு எனும் முடிவு பள்ளி படிப்பை நிறைவு செய்வதையே பாதிக்கும் என கவலை தெரிவிக்கிறார்.
அதேபோன்று, அனைத்து உயர்கல்விக்கும் நுழைவுத்தேர்வு எனும் முடிவும் தேசிய அளவிலான 50% மாணவர் சேர்க்கை எனும் இலக்கை பாதிக்கும் என்பதால் இதுபோன்ற குறிப்பிட்ட முடிவுகளை மறுசீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.
AICTE, UNIVERSITY GRAND COMMISSION உள்ளிட்ட உயர்கல்விக்கான அனைத்து அமைப்புகளையும் (மருத்துவம், சட்டம் தவிர) ஒருங்கிணைத்து, இந்திய உயர்கல்வி கவுன்சில் எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தும் முடிவு நிர்வாக ரீதியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்கிறார். இதனால் இந்தியாவின் கல்வித்தரம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பின்நோக்கி செல்லவும் வாய்ப்புள்ளதால், தற்போதுள்ள அமைப்புகளையே வலிமைப்படுத்தினால் அவற்றின் செயல்திறன் அதிகரித்து உயர்கல்வியின் தரம் உயரும் என வலியுறுத்துகிறார்.
இதேபோன்று அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட ஆராய்ச்சி அமைப்புகளையும் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வரும் திட்டத்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் எனவும், மாறாக அவற்றிற்கான நிதியுதவியை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் – மாறன் கருத்து
உயர்கல்விக்கான அடிப்படை என்பதே பள்ளிக் கல்விதான். அந்த வகையில் மாணவர்களுக்கு பன்முகத்தன்மை கொண்ட பள்ளிக் கல்வி சாத்தியமானால், அவர்கள் உயர்கல்வியில் நல்ல அறிவும், ஆற்றலும் கொண்டவர்களாக திகழ்வார்கள் என தெரிவித்துள்ளார். 5ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு ஆய்வகம் தொடர்பான செய்முறை கல்வியை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஈடுபாடு அதிகரிக்கும் எனவும், எதிர்காலத்தில் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் அறிவுறுத்துகிறார்.
பள்ளி முதலான மாணவர்களுக்கு மாநிலம் தோறும் innovation பள்ளிகளை தொடங்கி பயிற்சி அளிப்பதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும் என்கிறார். master degree-யை இரண்டு வருடமாக அனுமதித்து அதில் ஒரு வருடத்தை இன்டர்ன்ஷிப் ஆக வழங்க வேண்டும் எனவும் கல்வியாளர் மாறன் வலியுறுத்துகிறார்.