இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்தும யுஜிசியின் முடிவுக்கு தடை விதிக்க கோரிய மனுக்களின் மீது இடைக்கால உத்தரவை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில்தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இது மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், யுஜிசி.யின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் யுஜிசி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 2020 இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு யு.ஜி.சி.யை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆகஸ்ட் 3ம் தேதி இந்த வழக்கில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். மேலும், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றும், செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார். மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக முடியாது என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக்கூடாது என்றும் கூறினார். இதையடுத்து பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், மகாராஷ்டிர மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்