தமிழகத்தில் இசேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ்டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இசேவை மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசியர்களுக்குப் பகிரப்படும். பள்ளிகளில் பகிரப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத்தன்மையை பள்ளித் தலைமை ஆசிரியர் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். அதன்பிறகு பிஎஸ்டிஎம் சான்றிதழ்களை தகுதியானவர்களுக்கு வழங்கலாம். ஒருவேளை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் , அந்தந்த மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்படவும், பணிகளை ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொள்வதை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்தவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பான வழிக்காட்டுதல்களை தவறாமல் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.