புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேசமயம், அரசுப் பள்ளி மாணவர்களால் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெற முடியாத காரணத்தால், அவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறி ஆகியுள்ளது.
இதையடுத்து, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்க 7.5% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. அந்த சட்டம் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
இந்த சூழலில் புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும், நீட் தேர்வை பொருத்தவரை புதுச்சேரி அரசு பள்ளிகளில் இருந்து 16 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தனியார் பள்ளியில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றார்கள். ஆகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டிருப்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.