அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த 1.2 லட்சம் மாணவர்களின் முடிவுகளை சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நோய்த்தொற்று அச்சத்திற்கு மத்தியில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாததால், இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற செமஸ்டருக்கு உட்பட்ட அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சியாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற கூட்டத்தில், ஏப்ரலில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவருக்கும் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவை சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதில் தேர்வு எழுத விண்ணப்பித்த 1.2 லட்சம் மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் வழங்கி உள்ளது. இந்த முடிவு செயல் வடிவம் பெற்றால், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 கல்லூரிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் பயன்பெறலாம். கூடுதல் மதிப்பெண் பெற விரும்புவோர், அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.