காலக்கெடு முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயம் மீண்டும் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு செல்பவர்கள் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, மாநிலம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து 2013, 2014, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனிடையே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான காலக்கெடு என்பது ஏழு ஆண்டுகள் ஆகும்.
அதன்படி 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் காலக்கெடு முடிவடைந்தது. ஆனால், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு இதுவரை கிட்டமல் உள்ளது. எனவே அவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.