பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
பொற்கால ஆட்சி
நாட்டிலுள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சி நடைபெறுகிறது.
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்ததுபோல் ஏரி, குளங்களை தூர்வாரும் குடிமராமத்து திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தியதால் மழை நீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.
நிரந்தர அங்கீகாரம்
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதால் ஏழை மாணவ, மாணவியரின் மருத்துவ கனவு நனவாகியிருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார அரசாணையை வழங்க அரசு தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் 2,515 தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டுவரை ஓராண்டு நீட்டிப்பு செய்து வழங்கப்பட்ட அங்கீகார அரசாணை இவ்வாண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
கூடுதல் மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் பயிற்சியில் 3942 பேர் பங்கேற்றனர். இவ்வாண்டு 15,497 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த கல்வியாண்டில் கூடுதலாக 2 ஆயிரம் பேர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் இருந்து 5.18 பேர் அரசுப் பள்ளிகளில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மாட் வகுப்பறைகள் மற்றும் 80 ஆயிரம் கரும்பலகைகளை மாற்றி ஸ்மார்ட் போர்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் முடிவு
பெற்றோர்கள் கருத்து கேட்புக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுப்பார். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர் பணிமாறுதல் கவுன்சலிங் வெளிப்படை தன்மையுடன் யாரும் குறைசொல்லாத அளவுக்கு நடைபெறுகிறது இவ்வாறு அவர் கூறினார்.