தர்மபுரி அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறைத் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும், பள்ளி அறையை மாணவ மாணவியர் சூறையாடினர். அதை வீடியோ எடுத்தும் வலைதளங்களில் பகிரந்தனர். இதைக் கண்ட பெற்றோரகளும், கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இது மிகவும் தவறான செயல். முன்பெல்லாம் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்கும் போது கடைசி நாளில் பேனா மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இப்போது மேஜை, நாற்காலிகளை உடைப்பது என்பது கஷ்டமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட வீடியோவில் இருந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து விளக்க கடிதம் எழுதித் தர சொல்லி இருக்கிறோம். மாணவர்களை திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுத்தால், நடவடிக்கை மட்டும் எடுக்கிறீர்களே என்ற விமர்சனமும் வந்துவிடுகிறது. எனவே அவர்களுக்கு அறிவுரை வழங்கலாமா அல்லது மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வகுப்பறையைச் சூறையாடிய ஐந்து மாணவ மாணவியரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.