பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின், அம்பாலா விமானப்படை தளத்துக்கு இன்று இரவு வந்தடைகின்றன.
ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருவதை அடுத்து, ஹரியானாவின், அம்பாலா விமானப்படை தளம் அருகே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம் புறப்பட்டன.
இந்த விமானங்கள், 7,000 கி.மீ., பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள, அம்பாலா விமானப்படை தளத்துக்கு, இன்று இரவு வந்தடைகின்றன. இதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ‘ட்ரோன்’ களை இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.அம்பாலா மக்கள், இன்று இரவு, 7:00 மணி முதல் 7:30 மணி வரை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, ரபேல் போர் விமானங்களை வரவேற்குமாறு, அம்பாலா நகர, பா.ஜ.கட்சி, –எம்.எல்.ஏ., அசீம் கோயல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.