திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை, விமான நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயமாக்குதல் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எடுத்துரைத்தார். அதன்படி, லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்பூர் மற்றும் மங்களூரு ஆகிய 6 விமானங்களை தனியார் மயமாக்க கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதை தொடர்ந்து, கவுகாத்தி, ஜெய்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 3 விமான நிலையங்களின் நிர்வாகத்தை, 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது என்றார். மத்திய அரசு பணிகளில் பிரிவு 3,4-ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10% அடிப்படை மீட்பு விகிதத்திற்கு கரும்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.285 வழங்க முடிவு செய்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.