துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.
விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. ஆனால் கனமழையின் காரணமாக ஓடுதளத்தையும் தாண்டி விமான நிற்காமல் சென்றது. இதனால் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் விமானி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். துணை விமானி உட்பட 125 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 24 ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணித்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்து கொள்வதற்காக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள கட்டுப்பாட்டு அறையை 04832719493 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் காயமடைந்து கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி: 8547616121
குழந்தை நினைவு மருத்துவமனை: 9388955466, 8547754909
மிம்ஸ் மருத்துவமனை: 9447636145, 9846338846
மைத்ரா மருத்துவமனை: 9446344326,9496042881
கடற்கரை மருத்துவமனை: 9846042881, 8547616019
இந்நிலையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.