சூர்யா 40 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் உருவான‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் நடித்த சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40-வது படத்தில் ஒப்பந்தமானார்.
டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீட்டில் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. எனவே விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்திருந்தது.
சூர்யா இல்லாமலேயே முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கும் நிலையில் இன்று அவர் ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யாவும் படப்பிடிப்புக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் அந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் பணிகளை சூர்யா முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.