
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 நிலவறைகளின் புகைப்படங்களை தொல்லியல் துறை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
உலக அதிசியங்களில் முதன்மையானதாக திகழும் இந்தியாவின் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனுள்ள 22 நிலவறைகளை திறக்க வேண்டும், அங்கு இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை கண்டறிய அமைக்கப்பட வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. எனினும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை சர்ச்சைக்குரிய 20 நிலவறைகளின் புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் சர்ச்சைக்குரிய அறைகளின் சுவர்கள் அரிக்கப்பட்டு, சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் காணப்படுகிறது. மற்றொரு படத்தில் அதே அறையின் பொலிவான வடிவம் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுபோன்று சில அறைகளின் முந்தைய வடிவம் மற்றும் தற்போது வடிவம் என காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மூடிய அறைகளில் பூச்சு மற்றும் சுண்ணாம்பு அலமாரி உட்பட விரிவான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இதுவரை ரூ. 6 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரு வாரத்துகு 20,000 சுற்றுலாப் பயணிகள் வந்து தாஜ்மஹாலை பார்வையிட்டு செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.