கொரோனா ஊரடங்கு சமயத்தில் அமலுக்கு வந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கால் வேலைவாய்ப்பு ஒன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் லட்ச கணக்கில் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப, அவர்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி கிடைக்கும் நோக்கில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொரோனா பொது முடக்கத்தில் உனடடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது
ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்னும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில், 2020 ஜூலை வரை மின்விநியோகத்தின் மூலம் வெறும் 2000 பேருக்குத்தான் மாநிலங்களுக்கு இடையில் ரேஷன் பொருள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வெறும் 13,000 பேருக்கு மட்டுமே இந்தத் திட்டத்தால் பயன் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் 31,500 கிலோ உணவுப் பொருட்கள்தான் வழங்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல்களை உணவுத்துறையில் இருக்கும் அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டி முன்பு சமீபத்தில் சமர்ப்பித்துள்ளனர். மத்திய அரசின் தரவுகளின்படி, 24 மாநிலங்களில் 90 சதவீத ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், வெறும் 31,500 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பது மிகவும் மோசமான உதாரணமாக இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மொத்தம் உள்ள 5.35 லட்சம் ரேஷன் கடைகள் மூலம் 23 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். கடந்த 3 மாதங்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி வருகின்றனர். முன்பு தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், இந்தக் கால கட்டத்தில் தான் குறைவான ரேஷன் பொருட்கள் விநியோகமும் நடந்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டி சமர்ப்பித்து இருக்கும் தகவலில், ”நாடு முழுவதும் 4.88 ரேஷன் கடைகளில் ePoS devices கருவி பொருத்தப்பட்டு தானியங்கி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் ரேஷன் அட்டைகளை காண்பித்து இதன் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இதனிடையே, ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது தானியங்கி முறையில் இயங்க பொருத்தப்பட்டு இருக்கும் கருவி சில கிராமங்களில் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
புதிய தானியங்கி கருவி வேலை செய்யாதது, கையில் குறிப்புகளை எழுத வேண்டியது, இணையதளம் இல்லாமல் பயோமெட்ரிக் வேலை செய்யாதது, மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்காதது போன்ற பல்வேறு காரணங்களால் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் திணறி வருவதாக கூறப்படுகிறது.