உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இறப்புவீதம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது வென்டிலேட்டரில் வைக்கப்படுகிற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையே காட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகிறது.
அந்த வகையில் கடந்த 31ம் தேதி நிலவரப்படி நாட்டில் 0.22 சதவீத நோயாளிகள் மட்டுமே வென்டிலேட்டரின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவை அதிகரித்ததால், கடந்த மார்ச் மாதம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகை வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தேவை குறைந்த நிலையில் வென்டிலேட்டர்களை இனி ஏற்றுமதி செய்யலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: உள்நாட்டில் தேவை குறைந்து இருப்பதால், வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற தங்களின் முன்மொழிவை ஏற்று, கொரோனா தடுப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து, வென்டிலெட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில்
இந்த முடிவு வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரலுக்கு (டிஜிஎஃப்டி) தெரிவிக்கப்பட்ட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இதுவரை இல்லாத அளவிற்கு நேற்றும் மட்டும் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 840-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது