தணிக்கை தேவைப்படுவோருக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து அதற்கான அவகாசம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. அதன்படி, கடைசியாக அக்டோபர் 31ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் கணக்குகளைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய, வரி செலுத்துவோருக்கு (அவர்களின் கூட்டாளர்கள் உட்பட) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இதேபோன்று, வரி தணிக்கை அறிக்கை, சர்வதேச / குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.1 லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு, வரி செலுத்தும் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.




