மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை, இனி பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சியால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வருவாய் இழப்பு காரணமாக ஏராளமான ஊழியர்கள் கட்டாய ஓய்வு முறையில் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை கட்டாயம் பிஎஸ்என்எல் சேவையை தான் இனி பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து அமைச்சகங்கள், துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் சுயாட்சி அமைப்புகள், அனைத்தும் இனிமேல் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். தொலை தொடர்பு இணைப்புகள், இண்டர்நெட் பயன்பாடு, பிராண்ட்பேட் இணைப்பு, லேண்ட்லைன் அனைத்திற்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த, தங்களின் கீழ் உள்ள நிர்வாக அமைப்புகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, கடந்த 12ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், செயலாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.