10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்த, ஜனவரி மாதத்தில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என, இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, பல மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக சுழற்சி முறையில் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.
இதனிடையே, மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த பள்ளிகள் அனைத்திலும் 10, 12ம் வகுப்புகளை நடத்தும் வகையில் ஜனவரி 4-ந் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, எங்கள் அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் ஜனவரி 4-ந் தேதிக்குள் திறக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றால் தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும், என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏப்ரல், மே மாதத்தில் தேர்வுகளை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அந்த மாதங்களில் பொதுத் தேர்தல் ஏதேனும் குறுக்கிடுகிறதா என தேர்தல் கமிஷனிடமும் தகவல் கேட்கப்பட்டு உள்ளது.