இந்திய எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே சீனா ராணுவத்தினா் தங்குவதற்கான விடுதிகள் கண்டெய்னர் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய எல்லையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அந்நாடு மேற்கொண்டுள்ளதாக இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருபவா்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் இந்திய- சீன எல்லை மோதல் ஏற்பட காரணமான இருந்த தாஷிங்காங், மான்ஜா, ஹாட் ஸ்பிரிங்ஸ், சுரூப் உள்ளிட்ட பகுதிகளில் சீனா கன்டெய்னா்களை பயன்படுத்தி ராணுவ வீரா்கள் தங்குவதற்கான விடுதிகளை அமைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு கல்வான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வீரர்களை தாக்குவது எங்கள் திட்டமல்ல. எங்கள் நாட்டு ராணுவத்தினரை அங்கு குவித்து படை பலத்தை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்’ என்று சீனா தரப்பினா் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த ஆண்டு ஜூன்-15ஆம் தேதி இந்திய- சீன படைகளுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். 40க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரா்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பல ஆண்டுகளாக நீடித்து வந்த நல்லுறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே அமைச்சா்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனால் கோக்ரா பகுதியில் இருந்த ராணுவ படை வீரா்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனா். ஆனால் வேறு சில எல்லைப்புறப் பகுதிகளில் இரு தரப்பிலும் வீரா்களை விலக்கிக் கொள்வது தொடா்பாக இரு நாடுகளுக்கு இடையேயும் உடன்பாடு ஏற்படவில்லை.
தற்போது பிரச்சனை நிறைந்த எல்லைப் பகுதிகளில் இருநாடுகளும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் படை வீரா்களை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.