காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என, அக்கட்சியின் காரிய கமிட்டிக் குழுவில் முடிவெடுக்கபட்டுள்ளது.
ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி ஓராண்டிற்கும் மேலாக அப்பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில், கட்சிக்காக களத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய முழுநேர தலைமை தேவை என காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் அவருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். இந்த கோரிக்கையை முன்வைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு பின்னால் பாஜக இருப்பதாக, ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதாகவும், கட்சி தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் கோரியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, புதிய தலைவரை நியமிப்பது, கட்சி பொறுப்புகள், ஆட்சி மன்றக் குழுவை ஏற்படுத்துவது, கட்சியை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த கூட்டம் சுமார் 7 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தின் முடிவில், ராகுல் காந்தி மூத்த தலைவர்களை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், கட்சியின் நன்மைக்காகவே தலைமைக்கு மூத்த உறுப்பினர்கள் கடிதம் எழுதியதாகவும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மேலும் 6 மாதத்திற்கு சோனியா காந்தி நீடிப்பார் என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.