கொரோனாவிற்கான தடுப்பூசி மருந்து, ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது மருந்து 1000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப் காப்பாற்றுவதற்கு, உலகின் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி, அதற்காக மும்முரமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டிற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, இன்னும் 3 முதல் 4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும், இதற்கான சோதனைகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏப்ரல் மாதத்தில் வரும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மக்களும் பயன்படும் வகையில் மிக குறைந்த விலைக்கே மருந்து விற்பனைக்கு வரும் என்று தெரிவித்த அவர், இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சமாக 1000 ரூபாய்க்கு விற்கப்படும் என்றார். இந்திய மக்கள் அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.