இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல்.

டெல்லி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் மத்திய அரசின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,423 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது 259 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த எண்ணிக்கை ஆகும். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,42,96,237 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,021 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,36,83,581 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் இன்று மட்டும் 443 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,58,880 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மட்டும் தற்பொழுது 1,53,776 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.21 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 52,39,444 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,06,85,71,879 டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் உருமாறிய கொரோனா மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்திய மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.




