அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விதிமுறைகளை பின்பற்றாத, சந்தைகளை மூட பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் 3-வது அலை என்ற நிலையை எட்டிவிட்டடாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு வாரங்களாக அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கைகளை உறுதி செய்வது போன்ற 12 அம்ச திட்டங்களை முடுக்கி விட்டனர். மேலும், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பாக ஆய்வு செய்யவும், மத்திய அரசு 10 சிறப்புக் குழுக்களையும் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியதாவது, டெல்லியில் கொரோனா தொற்று உயரத் தொடங்கியதில் இருந்தே மத்திய அரசுக்கு நாங்கள் பொதுவாக சில முன்மொழிவுகளை அளித்துள்ளோம். இதன்படி, தேவையேற்பட்டால், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத சந்தைகளை சில நாட்களுக்கு மூட முடியும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வந்ததால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது” என்றார்.