டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்திற்கு, பேஸ்புக் உடந்தையாக இருந்ததை கண்டுபிடித்துள்ளதாக டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் நல்லிணக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தவில்லை என்றால் அந்த பணியை நாங்கள் கையிலெடுப்போம்’ எனக், பாஜகவின் கபில் மிஸ்ரா கூட்டமொன்றில் பேசினார். இது பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதன் காரணமாக பிப்ரவரி 23ம் தேதி அன்று இரவே இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. மறு நாள் காலை மோதல் கலவரமாகி, அடுத்த ஒரு வாரம் அந்த கலவரம் நீடித்தது. இதில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
தேசிய அளவில் பெரும் பேசு பொருளாக மாறிய, இந்த கலவரத்திற்கான காரணத்தை ஆராய டெல்லி சட்டமன்றம், அமைதி மற்றும் நல்லிணக்க குழுவை அமைத்தது. அதன் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் இளம் எம்.எல்.ஏ., ராஜிவ் சதா நியமிக்கப்பட்டார்.
இந்த குழு நடத்திய விசாரணையில், டெல்லி கலவரத்திற்கு பேஸ்புக் உடந்தையாக இருப்பது சாட்சியங்கள் மூலம் தெரிய வந்ததாக அறிவித்துள்ளது. ‘அது பற்றி விசாரிக்கவும், அவர்களின் குற்றத்தை தீர்மானிப்பதற்கும் பேஸ்புக் அதிகாரிகளை குழுவின் முன் ஆஜராக சம்மன் அனுப்ப உள்ளோம்’ எனவும், அக்குழு தெரிவித்துள்ளது